Monday, December 31, 2018

மரபுகாய்கறி_விதைகள்

#உழவர்_ஆனந்த் | 9840960650
#மரபுகாய்கறி_விதைகள்
Each seed Packs : 10₹
Quantity: 2-5 Grams
Courier : 40₹ | Other States: 100₹

கீரை வகைகள்:
0. சிகப்பு புளிச்சக்கீரை
0. பச்சை புளிச்சக்கீரை
0. சிகப்பு தண்டுக்கீரை
0. பச்சை தண்டுக்கீரை
0. சிகப்பு முளைக்கீரை
0. பச்சை முளைக்கீரை
0. கொத்தமல்லி கீரை
0. முருங்கை கீரை
0. வெத்தயக்கீரை
0. பருப்பு கீரை
0. சிறு கீரை
0. அரை கீரை
0. அகத்தி கீரை
0. பாலக் கீரை
செடி காய்கறிகள் :
0. நாட்டு தக்காளி
0. நாட்டு வெண்டை நீள் பச்சை
0. நாட்டு வெண்டை குட்டை ரகம்
0. கொத்தவரை
0. செடி காராமணி
0. செடி அவரை
0. நீட்ட மிளகாய்
0. குண்டு மிளகாய் ( இல்லை)
0. கருப்பு மொச்சை
0. வெள்ளை மொச்சை
0. சிகப்பு முள்ளங்கி
0. வெள்ளை முள்ளங்கி
கத்தரிக்காய் வகைகள் :
0. ஊதா கத்தரி
0. பச்சை கத்தரி
0. வெள்ளை கத்தரி
0. மணப்பாறை கத்தரி
0. முள் கத்தரி
கொடி காய்கறிகள் :
0. பாகற்காய்
0. மிதி பாகல்
0. புடலை
0. நீள் புடலை
0. குண்டு சுரைக்காய்
0. நீட்ட சுரைக்காய்
0. பீர்க்கங்காய்
0. பரங்கிக்காய்
0. கொடி காராமணி
0. கொடி அவரை
0. கோழி அவரை
0. பட்டை அவரை
0. பெல்ட் அவரை
0. சாட்டை அவரை ( தமட்டை)
மலைக்காய்கறிகள்:
0. கேரட்
0. பீட்ரூட்
0. பீன்ஸ்
0. முட்டைக்கோஸ்
0. காளிபிளவர்
பழங்கள்:
0. பப்பாளி
0. பூசணி
0. தர்பூசணி
0. வெள்ளரி
0. வெண்பூசணி ( பரங்கி)
மற்றும்...
பல்லாரி வெங்காயம்
மக்காச்சோளம்

PhonePe / Google Pay : 9840960650

Bank details:
Name : ULAVAR ANAND
Bank : HDFC BANK LTD
A/C: 50200032351412
IFSC: HDFC0000695
Branch: PSK Towers, Salem Road, Namakkal
Note : Mail us your Bank reference
ulavaranand@gmail.com

Ulavar anand
11B, sellandiyamman strret,
Near anjaneyar temple
Namakkal - 637001..

(Received thru WhatsApp)

Saturday, December 29, 2018

வெஜிடபிள் மஞ்சூரியன்

#வெஜிடபிள் #மஞ்சூரியன்

#தேவையான #பொருட்கள் :

காரட்   -2
பீன்ஸ்   - 8
குடை மிளகாய்2
துருவிய முட்டை கோஸ்   - 1 கப்
பெரிய வெங்காயம்   - 4
வெங்காயத்தாள்  -   1 கட்டு
தக்காளி சாஸ்    -2 டீஸ்பூன்
சில்லி சாஸ்     - 2 டீஸ்பூன
சோயா சாஸ்    -1 டேபிள் ஸ்பூன்
மிளகுத்தூள்    -1 டீஸ்பூன்
அஜினமோட்டோ  1 / 2 டீஸ்பூன்
கார்ன் பிளார் மாவு   -  8 டேபிள் ஸ்பூன்
உப்பு தேவையான அளவு
எண்ணெய் தேவையான அளவு.

#செய்முறை :

🍮 வெஜிடபிள் மஞ்சூரியன் செய்வதற்கு முதலில் காரட், பீன்ஸ், குடை மிளகாய், துருவிய முட்டை கோஸ், பெரிய வெங்காயம் ஆகியவற்றை பொடிப்பொடியாக நறுக்கிக் கொள்ளவும்.

🍮 பிறகு வாணலியில் ஒரு எண்ணெயை ஊற்றி, பாதி வெங்காயம், காய்களை போட்டு, கொஞ்சம் உப்பு, கொஞ்சம் அஜினமோட்டோ சேர்த்து நன்கு வதக்கவும். நன்கு வதங்கியதும், இறக்கி ஆறவைத்து, அதனுடன் கார்ன் பிளார் மாவு சேர்த்து காய்களை பிசைந்து கொள்ளவும்.

🍮 பிறகு ஒரு தட்டில் லேசாக எண்ணெயை தடவி, பிசைந்த கலவையை சமமாக தட்டி, சிறு சதுரங்களாக வெட்டி எண்ணெயில் போட்டு பொரித்து எடுக்கவும்.

🍮 பிறகு வாணலியில் எண்ணெயை ஊற்றி, அதில் மீதியுள்ள வெங்காயம், இஞ்சி, பூண்டு விழுது, நறுக்கிய வெங்காயத்தாள் ஆகியவற்றை சேர்த்து வதக்கி, எல்லா சாஸ், மிளகுத்தூள், மீதியுள்ள அஜினமோட்டோ, உப்பு ஆகியவற்றை சேர்த்து வதக்கவும். பிறகு அதில் மீதியுள்ள கார்ன் பிளார் மாவை கரைத்து ஊற்றவும்.

🍮 கொதித்தபின் பொரித்த சதுரங்களை கிரேவியில் சேர்க்கவும். கிரேவி கொதித்து திக்காக ஆனதும் இறக்கவும். சுவையான வெஜிடபிள் மஞ்சூரியன் ரெடி.


Thursday, December 27, 2018

சமையல் எரிபொருளை சிக்கனமாகச் செலவழிக்க 10 டிப்ஸ்!

சமையல் எரிபொருளை சிக்கனமாகச் செலவழிக்க 10 டிப்ஸ்!

1. நம்ம பாட்டிகள் காலத்திலிருந்து சமையலை சீக்கிரம் முடிக்க ஃபாலோ செய்கிற டிப்ஸ் இது. சமைப்பதற்கு அரை மணி நேரத்துக்கு முன்னாடியே அரிசியையும் பருப்பையும் ஊற வைத்து விடுங்கள். சீக்கிரம் வேகும், சமையல் எரிவாயுவும் மிச்சமாகும்.

2. அரிசி, பருப்பு, மட்டன், சிக்கன், பல காய் குழம்பு, இட்லி, பொங்கல், கடலைக்குழம்பு என்று எந்தெந்த சமையலுக்கெல்லாம் பிரஷர் குக்கரைப் பயன்படுத்த முடியுமோ அதற்கெல்லாம் குக்கரைப் பயன்படுத்துங்கள். பாத்திரத்தைவிட இதில் உணவுப்பொருள்கள் சீக்கிரம் வேகும். கேஸ் மிச்சமாகும்.

3. பொரிக்க வேண்டிய உணவுகளை, மசாலாவில் புரட்டியெடுத்து உடனே பொரிப்பதைவிட, மசாலாவில் நன்கு ஊற வைத்துப் பொரித்தால், சட்டென்று வேகும். கேஸ் மிச்சமாகும்.

4. வதக்கும்போதே பாதி வெந்துவிடுகிற காய்கறிகளை, மூடிப் போட்டு வேக வைத்தால் அந்த ஆவியிலேயே முழுதாக வெந்துவிடும். பாகற்காய் போல கொஞ்ச நேரம் வேக வைக்க வேண்டிய காய்கறிகள் என்றால், அளவாகத் தண்ணீர் வைத்து, மூடி விடுங்கள். அளவுக்கு அதிகமான தண்ணீர் வைத்தால், காய் வெந்த பின்னும் அதில் இருக்கிற தண்ணீர் வற்றும் வரை சமையல் எரிவாயுவைச் செலவழிக்க வேண்டி வரும்.

5. பாத்திரங்களில் துளிகூட ஈரமில்லாமல் சுத்தமான துணியால் துடைத்துவிட்டு அடுப்பில் ஏற்றினால், சட்டென்று சூடாகும். தினசரி இப்படிச் செய்யும்போது, இதிலும் சிறிதளவு கேஸ் மிச்சமாகும்.

6. சமைப்பதற்கு முன்னால் தாளிக்கும் சாமானிலிருந்து நறுக்கிய காய்கறிகள்வரை பக்கத்தில் எடுத்து வைத்துக்கொண்டு சமையுங்கள். அடுப்பில் வாணலியை வைத்துவிட்டு, வதக்குவதற்கு வெங்காயத்தை நறுக்க ஆரம்பிக்காதீர்கள்.

7. சமைக்கிற பொருளின் அளவுக்கு ஏற்றபடி, பாத்திரங்களைத் தேர்ந்தெடுங்கள். சிறிதளவு சமைக்க பெரிய பாத்திரங்களைப் பயன்படுத்தினால், அது சூடாக நேரம் பிடிக்கும். இதனாலும் கேஸ் வீணாகும்.

8. நூடுல்ஸ், பாஸ்தா போன்றவற்றைத் தண்ணீர் கொதித்த பிறகு போட்டு, மூடி போட்டு வேகவைத்தால் சீக்கிரம் வெந்துவிடும். சாதத்தை வடித்துத்தான் சாப்பிடுவீர்கள் என்றால், உலை  தண்ணீரை அளவாக வைத்து மூடி விடுங்கள். சீக்கிரம் உலை கொதித்து, அரிசியும் சீக்கிரம் வேகும்.

9. பால் காய்ச்ச, கேஸ் ஸ்டவுக்குப் பதில் கெட்டிலைப் பயன்படுத்தலாம். சமைத்ததை மறுபடியும் சூடு செய்ய கேஸ் ஸ்டவ்வைப் பயன்படுத்துவதைவிட, இன்டக்‌ஷனில் செய்தால் சமையல் கேஸை மிச்சம் பிடிக்கலாம்.

10. ஃபிரிட்ஜில் வைத்த பாலை காய்ச்சுவதற்கு முன்னால், ஃபிரிட்ஜில் இருக்கிற மாவில் இட்லி ஊற்றுவதற்கு முன்னால், அவற்றை 2 மணி நேரத்துக்கு முன்னரே வெளியில் எடுத்து வைத்துவிட்டால், சமைப்பதற்கு அதிகமாக கேஸ் செலவழியாது. ஃபிரிட்ஜிலிருந்து எடுத்து உடனே சமைத்தால் ஜில்னெஸ் போகிற வரைக்கும் சூடு செய்ய வேண்டி வரும்.

குறிப்பு: மேலே உள்ள தகவல்கள் அனைத்தும் விகடன் பதிப்பிலிருந்து பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது. அன்புடன் மஹி என்கிற மகேந்திரன்

Sunday, December 23, 2018

டிரஸ்ட் தொடங்க...

டிரஸ்ட் தொடங்க...
புதிதாக ஓர் அறக்கட்டளையைத் (Trust) தொடங்குவதற்கு வேண்டிய அடிப்படையான விபரங்கள்:

அறக்கட்டளையைத் தொடங்குவது எப்படி? அதற்கு எங்கு பதிவுசெய்ய வேண்டும்? ஓர் அறக்கட்டளையில் எத்தனை அறங்காவலர்கள் இருக்கலாம்? யார் வேண்டுமானாலும் அறக்கட்டளை தொடங்கலாமா?

’’டிரஸ்ட் என்பதற்கு ’பொறுப்பணம்’ என்பதுதான் சட்டரீதியாக சரியான சொல். தர்ம நோக்கத்தில் செயல்படும் டிரஸ்ட்களுக்கு மட்டுமே அறக்கட்டளை என்று பெயர். ஆனால் தற்போது டிரஸ்ட் என்பது அறக்கட்டளை என்றே பொதுவாக அழைக்கப்படுகிறது. பொதுவாக இரண்டு வகையான டிரஸ்ட்டுகள் உள்ளன. ஒன்று தனியார் டிரஸ்ட் மற்றொன்று பொது டிரஸ்ட். டிரஸ்ட் ஒன்றைத் தொடங்க வேண்டுமென்றால் வருமானம் வரக்கூடிய சொத்துக்கள் இருக்க வேண்டியது அவசியம். குடும்ப உறுப்பினர்கள், வாரிசுகள் ஆகியோர் அனுபவிக்கும் வகையில் ஓர் ஆவணம் அல்லது ஒர் உயில் மூலம் டிரஸ்ட் அமைக்கலாம். அதற்கு தனியார் டிரஸ்ட் என்று பெயர். தனிப்பட்டவர்கள் அல்லது தனிப்பட்ட குடும்பங்களின் வசதிக்கு அல்லது அவர்களின் உதவிக்காக இத்தகைய தனியார் டிரஸ்ட்டுகள் ஏற்படுத்தப்படுகின்றன. பொதுமக்கள் அனைவரும் அல்லது பொதுமக்களில் ஒரு குறிப்பிட்ட பிரிவினர் பயனடையும் வகையில் ஏற்படுத்தப்படுவது பொது டிரஸ்ட். உதாரணமாக கோயில், மசூதி, தொண்டு நிறுவனங்கள், கல்வி நிறுவனங்கள் போன்ற பொதுமக்களின் பயன்பாட்டுக்கான சொத்துகளை அடிப்படையாகக் கொண்டு பொது டிரஸ்ட்கள் ஏற்படுத்தப்படுகின்றன. சட்டப்படியான நோக்கங்களுக்காக மட்டுமே டிரஸ்ட்டை உருவாக்க முடியும். டிரஸ்ட்டின் நோக்கமானது சட்டவிரோதமாகவோ, மோசடியானதாகவோ, இருக்கக்கூடாது.

பொதுமக்களின் நலன்களுக்கு எதிரானதாகவும், நெறியற்றதாகவும், கூட இருக்கக்கூடாது. ஒரு டிரஸ்ட் அமைப்பதற்கு குறைந்தபட்சம் இரண்டு உறுப்பினர்கள் அவசியம். அதிகபட்சமாக எத்தனை பேர் வேண்டுமானாலும் உறுப்பினராக இருக்கலாம். ஆனாலும் கூட இரண்டு பேருக்கு மேல் தேவையான எண்ணிக்கையில் மட்டுமே உறுப்பினர்கள் இருக்கிறார்கள் என்பது எதார்த்தம். எந்தவொரு டிரஸ்ட்டாக இருந்தாலும் அதில் நிர்வாக அறங்காவலர் (Managing Trustee) ஒருவர் இருக்க வேண்டும். பொருளாளர் ஒருவர் இருப்பார். மற்ற உறுப்பினர்கள் டிரஸ்ட்டிகளாக இருப்பார்கள். டிரஸ்ட் உருவாக்கப்பட்ட பிறகு, அது தொடர்பான ஆவணம் ஒன்றைத் தயாரிக்க வேண்டும். டிரஸ்ட்டினுடைய நோக்கம், பொறுப்பாளர்கள், உறுப்பினர்கள்,சொத்து மதிப்பு,சொத்து குறித்த விளக்கம் மற்றும் பிரிவுகள், உரிமைகள், கடமைகள், விதிமுறைகள் போன்ற விவரங்களை ஆவணத்தில் தெளிவாகக் குறிப்பிட வேண்டும். ஆவணத்தில் இரண்டு சாட்சிகள் கையொப்பமிட வேண்டும். பொறுப்பாளர்கள் அனைவரும் ஆவணத்தில் கையெழுத்திட வேண்டும். இவ்வாறு டிரஸ்ட் ஏற்படுத்தப்பட்ட பிறகு அதற்கு ஒரு பெயரிட்டு பதிவாளர் அலுவலகத்தில் (Registrar office) பதிவு செய்ய வேண்டும். டிரஸ்ட் செயல்படும் அலவலகம் அமைந்துள்ள பகுதியின் எல்லைக்குட்பட்ட பதிவாளர் அலவலகத்தில் டிரஸ்ட்டை பதிவு செய்யலாம்.

எல்லோருக்கும் எளிய சட்டங்கள் ...
George Belegin M.A., LL.B
Win Law Chamber
Cell : 9994440791

Thursday, December 20, 2018

மதுரை மட்டன் சுக்கா


🐐மணக்கும் மதுரை மட்டன் சுக்கா செய்வது எப்படி...??? என்று பார்ப்போம். 😍😍😍


மட்டனை விதவிதமாக சமைத்து பொறுமையாக உட்கார்ந்து சாப்பிட்டால் அருமையாக இருக்கும். அதுவும் மதுரை மட்டன் சுக்கா என்றால் கூறும் போதே நாவில் எச்சில் ஊரும். அதை எப்படி செய்வதுனு பாக்கலாம் வாங்க,.

**--- 🌺---**

🍭தேவையான பொருட்கள்:

🍂மட்டன் - 200 கிராம்

🍂பூண்டு - 10 பற்கள்

🍂தக்காளி - 1

🍂மஞ்சள் தூள் - 1/2 டீஸ்பூன்

🍂மிளகாய் தூள் - 1 டீஸ்பூன்

🍂மல்லித் தூள் - 1/2 டீஸ்பூன்

🍂கெட்டியான தேங்காய் பால் - 2 டேபிள் ஸ்பூன்

🍂உப்பு - தேவையான

🍂அளவு சின்ன வெங்காயம் - 1/4 கப்

**---🌺---**

*🥦மேலும் தாளிப்பதற்கு:*

🍂சோம்பு - 1/2 டீஸ்பூன்.

🍂பட்டை - 1/4 இன்ச்.,

🍂கிராம்பு - 2.,

🍂பிரியாணி இலை - 1

🍂கறிவேப்பிலை - சிறிது

🍂எண்ணெய் - 2 டீஸ்பூன்..

**--- 🌺---**

🍭 செய்முறை:

முதலில் மட்டனை நன்கு கழுவி தனியாக வைத்துக் கொள்ள வேண்டும். பின்னர் ஒரு குக்கரை அடுப்பில் வைத்து, அதில் மட்டன் துண்டுகளைப் போட்டு, மஞ்சள் தூள், 1/4 டீஸ்பூன் மிளகாய் தூள், உப்பு சேர்த்து நன்கு நிறம் மாறும் வரை கிளறி விட வேண்டும். பின்பு அதில் சிறிது தண்ணீரை ஊற்றி, மிதமான தீயில் 5-6 விசில் விட்டு இறக்கிக் கொள்ள வேண்டும்.

அதன்பின்னர், வாணலியை(கடாய்) அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி, தாளிப்பதற்கு கொடுத்துள்ள பொருட்களை சேர்த்து தாளித்து, பின் வெங்காயம், பூண்டு சேர்த்து பொன்னிறமாக வதக்க வேண்டும். பின் அதில் தக்காளி சேர்த்து, பச்சை வாசனை போக நன்கு வதக்கி, பின் மீதமுள்ள மிளகாய் தூள், மல்லித்தூள் சேர்த்து கிளறி, வேக வைத்துள்ள மட்டனை நீருடன் சேர்த்து நன்கு கிளறி விட வேண்டும்.

மட்டனில் உள்ள தண்ணீர் வற்றியதும், அதில் தேங்காய் பால் சேர்த்து, தேங்காய் பாலும் வற்றும் வரை நன்கு கிளறி இறக்கினால் போதும்...

🤑🤑 மதுரை மட்டன் சுக்கா ரெடி!!!..🤑


புளி

💠💠மருத்துவ குணங்கள் நிறைந்த புளி!💠💠

புளி இரத்தத்தைச் சுண்ட வைக்கும் என்பது ஒரு மூட நம்பிக்கை. இரத்தத்தை முறிக்கக் கூடிய சத்து ஏதும் புளியில் இல்லை. புளியில் கால்சியம், வைட்டமின் ‘பி’, பாஸ்பரஸ், இரும்பு போன்ற சத்துக்கள் அடங்கியுள்ளன. புளிய மரத்தின் இலை, பழம், பட்டை எல்லாமே மருத்துவத்திற்கு பயன்படுகிறது.

1⃣ குமட்டல், வாந்தி ஏற்பட்டால் சிறிதளவு புளியை வாயில் போட்டு நீரை விழுங்கினால் வாந்தி நிற்கும்.

2⃣ அடிபட்டு இரத்தக்கட்டு ஏற்பட்டால் புளியும், உப்பும் கலந்து அரைத்து வடிகட்டி அடுப்பில் வைத்து தாங்கக்கூடிய சூட்டுடன் பற்றுப் போட்டால் இரத்தக்கட்டு கரைந்துவிடும்.

3⃣ புளியுடன் சுண்ணாம்பு கலந்து குழப்பி சூட்டோடு தேள் கொட்டிய இடத்தில் போட, தேள் விஷம் இறங்கும்.

4⃣ புளியங்கொட்டை பருப்பை இடித்து பொடியாக்கி, பசும்பாலில் அரைக்கரண்டி தூளைபோட்டு கற்கண்டு கலந்து குடித்து வர தாதுவிருத்தி உண்டாகும்.

5⃣ பல் ஈறு வீக்கம், பல் வலி இவற்றிற்கு சிறிதளவு புளியும் அதே அளவு உப்பும் கலந்து வலியுள்ள இடத்தில் வைத்திருந்து 10 நிமிடம் கழித்து வாயில் வைத்திருந்த புளியை துப்பி வெந்நீரால் வாய் கொப்பளிக்க வேண்டும். இப்படி மூன்று வேளையும் செய்தால் பல் வலி குறையும். அந்த உமிழ் நீரை விழுங்கக்கூடாது.

6⃣ புளியம் பூக்களை துவையலாக அரைத்து உண்டால் மயக்கம், தலைச்சுற்றல் தீரும்.

7⃣ புளியை நீரில் கரைத்து உப்பு சேர்த்து கொதிக்க வைத்து இளம் சூட்டில் பற்றுப்போட ரத்தக் கட்டுகள் கரையும்.

8⃣ புளியமர இலைகளை நசுக்கி நீர்விட்டு கொதிக்க வைத்து மூட்டு வீக்கங்களின் மீது பற்றிட்டு வந்தால் அந்த வீக்கம் விரைவில் மறையும்.

9⃣ புளியம்பூவை நசுக்கி நீர்விட்டு அரைத்து கொதிக்க வைத்து, கண்களை சுற்றி பூசிவர கண் சிகப்பு, கண் வலி ஆகியவை நீங்கும்.

🔟 புளியங்கொட்டையின் தோல் ஒரு பங்கு, சீரகம் 3 பங்கு, பனங்கற்கண்டு 4 பங்கு ஆகியவற்றை எடுத்து பொடி செய்து, தினமும் 3 வேளை 2 கிராம் அளவு உட்கொண்டு வர நாட்பட்ட கழிச்சல் குணமாகும்.

1⃣1⃣ புளியையும், சுண்ணாம்பையும் சேர்த்து அரைத்து தேள் கடி விஷத்திற்கு கடி வாயில் வைத்து கட்ட அது குணமாகும்.

1⃣2⃣ புளியம் பட்டையின் சாம்பலை நீரில் கலக்கி, அது தெளிந்தவுடன், அந்த நீரைக்கொண்டு வாய் கொப்பளித்துவர தொண்டைப்புண் குணமாகும்.

1⃣3⃣ புளியிலையை அவித்து, அதே சூட்டோடு சுளுக்கு உள்ள இடத்தில் ஒற்றடம் இட்டு, வைத்து கட்டிவர சுளுக்கு குணமாகும்.

1⃣4⃣ கல்லீரல் நோய்தொற்றுக்களை காக்கும் அரணாக புளி இருக்கின்றது...

Wednesday, December 19, 2018

நண்டு வறுவல்

நண்டு வறுவல் செய்வது எப்படி என்று பார்ப்போம்...? 😍😍😍

தேவையான பொருள்கள் :

நண்டு - அரை கிலோ
சின்ன வெங்காயம் - 100 கிராம்
இஞ்சி, பூண்டு விழுது - 1 ஸ்பூன்
தக்காளி - 50 கிராம்
மஞ்சள் தூள் - 1/2 டீஸ்பூன்
மிளகாய்த்தூள் - 2 டீஸ்பூன்
உப்பு - தேவைக்கு
நல்லெண்ணெய் - 2 டீஸ்பூன்
சோம்பு - சிறிதளவு

செய்முறை :

* நண்டை நன்றாக சுத்தம் செய்து நீரை வடித்து வைக்கவும்.

* வெங்காயம், தக்காளியை பொடியாக நறுக்கி வைக்கவும்.

* ஒரு அடி அகலமானக் கடாயை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி சூடாக்கி சோம்பு போட்டு தாளித்த பின் வெங்காயத்தை போட்டு நன்றாக வதக்கவும்.

* வெங்காயம் பாதி வதங்கியதும் இஞ்சி பூண்டு விழுதை போட்டு பச்சை வாசனை போக வதக்கிய பின் தக்காளியை சேர்த்து வதக்கவும்.

* தக்காளி நன்றாக வதங்கியதும் அதில் மஞ்சள்தூள், மிளகாய்த்தூள், உப்பு சேர்த்து வதக்கவும். காரம் விரும்புவோர் மிளகாய்த்தூளை கொஞ்சம் கூடுதலாக சேர்த்துக்கொள்ளலாம்.

* அடுத்து அதில் நண்டு சேர்த்துக் மசாலா நண்டு முழுவதும் படுமாறு நன்றாகக் கிளறிவிடவும்.

* பிறகு அதில் கால் டம்ளர் அளவிற்குத் தண்ணீர் ஊற்றி மூடி வேக வைக்கவும். இடையிடையே பிரட்டி விடவும். தண்ணீர் முழுவதும் வற்றி, நண்டு வெந்து வாசனை வந்த பிறகு இறக்கவும். நண்டு விரைவில் வெந்து விடும்.

* நண்டு வறுவல் ரெடி.

* இது எல்லா வகையான சாதத்திற்கும் நன்றாகப் பொருந்தும்.

குறிப்பு

* நண்டு கிரேவியாக வேண்டுமானால் மேலும் 1/2 டம்ளர் தண்ணீர் சேர்த்துக்கொள்ளலாம். நண்டு வறுவலை வெங்காயம், தக்காளி, பூண்டு இவை சேர்க்காமலும் சுவையாகச் செய்யலாம். அதற்கு கடாயில் எண்ணெய் ஊற்றிக் காயவைத்து நண்டு, மஞ்சள்தூள், மிளகாய்த்தூள், உப்பு சேர்த்து 1/2 டம்ளர் தண்ணீர் ஊற்றி தண்ணீர் வற்றும் வரை அடிக்கடி கிளறிவிட்டு வேக வைக்க வேண்டும்.

30 வகை அசத்தல் குழம்பு

✪30 வகை அசத்தல் குழம்பு!✪

( No Onion...No Garlic)

”தினமும் காய்கறிகளை போட்டுத்தான் குழம்பு வைக்கணும்னு அவசியம் இல்ல. அது இல்லாமலே, அதேசமயம் அதுல கிடைக்கற அத்தனை சத்துக்களும் கிடைக்கற மாதிரியான குழம்புகளை வைக்கறதுக்கு வழி இருக்கறப்ப… எதுக்காகக் கவலைப்படறீங்க?” என்று தெம்பு கூட்டும் ‘சுவையரசி’ சாந்தி விஜயகிருஷ்ணன், காய்கறிகளே இல்லாமல் 30 வகை ரெசிபிகளை இங்கே பரிமாறுகிறார்.

”இதுல வெங்காயம், பூண்டு இது ரெண்டையும் சேர்க்கவே இல்ல. விருப்பப்பட்டவங்க, அதைச் சேர்த்தும் தயார் செய்துக்கலாம். காய்கறி ஒரு நாள், அது இல்லாம மறுநாள்னு குழம்பு வச்சுக் கொடுங்க. வயிறார புகழ்வாங்க வீட்டுல உள்ளவங்க” என்று உத்தரவாதமும் கொடுக்கிறார்.

அப்புறம் என்ன.. வகை வகையா குழம்பு வச்சு அசத்துங்க தோழிகளே!

  ✪துவரம்பருப்பு மசியல்

தேவையானவை: துவரம்பருப்பு – அரை கப், வெந்தயம் – ஒரு டேபிள்ஸ்பூன், மஞ்சள்தூள் – அரை டீஸ்பூன், தக்காளி – 2, பச்சை மிளகாய் – 3, புளி – 50 கிராம், காய்ந்த மிளகாய் – 2, கடுகு, பெருங்காயத்தூள் – தலா கால் டீஸ்பூன், நறுக்கிய கொத்தமல்லி, கறிவேப்பிலை – சிறிதளவு, எண்ணெய், உப்பு – தேவையான அளவு.

செய்முறை: குக்கரில் துவரம்பருப்பு, வெந்தயம், மஞ்சள்தூள் சேர்த்துக் குழைய வேக விடவும். கடாயில் எண்ணெய் விட்டு கடுகு, பெருங்காயத்தூள், கிள்ளிய காய்ந்த மிளகாய் தாளிக்கவும். பிறகு, நறுக்கிய தக்காளி, பச்சை மிளகாய் சேர்த்து நன்கு வதக்கவும். புளியை ஊற வைத்து கரைத்து வடிகட்டி, அதனை தாளிப்பில் சேர்க்கவும். அது நன்கு கொதிக்க ஆரம்பித்ததும், வேக வைத்து மசித்த துவரம்பருப்புக் கலவை, உப்பு சேர்த்துக் கொதிக்க விடவும். வாசனை வந்ததும் நறுக்கிய கொத்தமல்லி, கறிவேப்பிலை போட்டு இறக்கவும்.

  ✪ வெந்தய மசியல்

தேவையானவை: வெந்தயம் – ஒரு டீஸ்பூன், கடலைப்பருப்பு, துவரம்பருப்பு, உளுத்தம்பருப்பு கலவை – அரை கப், காய்ந்த மிளகாய் – 6, மஞ்சள்தூள் – ஒரு சிட்டிகை, புளி – 50 கிராம், கடுகு, பெருங்காயத்தூள் – தலா கால் டீஸ்பூன், கறிவேப்பிலை – சிறிதளவு, உப்பு, நல்லெண்ணெய் – தேவையான அளவு.

செய்முறை: கடாயில் நல்லெண்ணெய் விட்டு கடுகு, காய்ந்த மிளகாய், கொடுக்கப்பட்டுள்ள மூன்று வகை பருப்புகள், வெந்தயம், பெருங்காயத்தூள் போட்டு சிவக்க வறுக்கவும். பிறகு, வறுத்தவற்றுடன் மஞ்சள்தூள் சேர்த்து குக்கரில் குழைய வேக விடவும். ஆவி போனதும் குக்கர் மூடியைத் திறந்து, கரைத்து வடிகட்டிய புளிக் கரைசல், உப்பு சேர்த்து நன்கு கொதிக்க விட்டு… கறிவேப்பிலையைப் போட்டு இறக்கி, பரிமாறவும்.

  ✪வத்தக் குழம்பு

தேவையானவை: சின்ன வெங்காயம் – ஒரு கப், கடுகு – கால் டீஸ்பூன், வெந்தயம் – அரை டீஸ்பூன், காய்ந்த மிளகாய் – 2, புளி – 50 கிராம், சாம்பார் பொடி – 2 டீஸ்பூன், பொடித்த வெல்லம் – ஒரு டீஸ்பூன், கறிவேப்பிலை – சிறிதளவு, உப்பு, நல்லெண்ணெய் – தேவையான அளவு.

செய்முறை: கடாயில் எண்ணெய் விட்டு கடுகு, வெந்தயம், காய்ந்த மிளகாய் தாளித்து… தோல் உரித்த சின்ன வெங்காயம், கறிவேப்பிலை சேர்த்து நன்கு வதக்கவும். வாசனை வந்ததும் சாம்பார் பொடி, உப்பு சேர்த்துக் கலக்கவும். பிறகு, வடிகட்டிய புளிக் கரைசல் விட்டுக் கொதிக்க வைக்கவும். எண்ணெய் பிரிந்து வரும் சமயத்தில், பொடித்த வெல்லம் போட்டுக் கலந்து, கெட்டியான பதம் வந்ததும் இறக்கவும்.

இந்தக் குழம்பு இரண்டு நாட்கள் வரை கூட நன்றாக இருக்கும்.

  ✪மாந்தோல் குழம்பு

தேவையானவை: மாங்காய்த் தோல் (உப்பு போட்டு ஊற வைத்து, வெயிலில் காய வைத்து எடுத்தது) – கால் கப், புளி – சிறிதளவு, உளுத்தம்பருப்பு – ஒரு டீஸ்பூன், மிளகு – ஒரு டீஸ்பூன், காய்ந்த மிளகாய் – 6, தேங்காய் துருவல் – 2 டீஸ்பூன், பொடித்த வெல்லம் – ஒரு டீஸ்பூன், கடுகு, பெருங்காயத்தூள் – தலா கால் டீஸ்பூன். கறிவேப்பிலை – சிறிதளவு, உப்பு, எண்ணெய் – தேவையான அளவு.

செய்முறை: கொதிக்கும் நீரில் மாங்காய்த் தோலை போட்டு அரை மணி நேரம் ஊற விடவும். கடாயில் எண்ணெய் விட்டு காய்ந்த மிளகாய், உளுத்தம்பருப்பு, மிளகு போட்டு வறுத்து… அதனுடன் தேங்காய் துருவல் சேர்த்து மிக்ஸியில் அரைத்துக் கொள்ளவும். புளியை ஊற வைத்துக் கரைத்து வடிகட்டி, அதில் உப்பு, பெருங்காயத்தூள் போட்டுக் கொதிக்க விடவும். பிறகு, ஊற வைத்த மாங்காய்த் தோல், பொடித்த வெல்லம் சேர்த்து 10 நிமிடம் கொதிக்க விடவும். பிறகு, அரைத்த கலவையைச் சேர்த்து சிறிது நேரம் கொதிக்க விட்டு இறக்கவும். கடாயில் எண்ணெய் விட்டு கடுகு, கறிவேப்பிலைத் தாளித்து சேர்த்துப் பரிமாறவும்.

  ✪ பொரிச்ச குழம்பு

தேவையானவை: பாசிப்பருப்பு – அரை கப், பெருங்காயத்தூள், கடுகு – தலா கால் டீஸ்பூன், கறிவேப்பிலை – சிறிதளவு, மஞ்சள் தூள் – ஒரு சிட்டிகை, எண்ணெய், உப்பு – தேவையான அளவு.

வறுத்து அரைக்க: உளுத்தம்பருப்பு, மிளகு – தலா ஒரு டீஸ்பூன், காய்ந்த மிளகாய் – 2, தேங்காய் துருவல் – ஒரு டீஸ்பூன்.

செய்முறை: குக்கரில் பாசிப்பருப்பு, மஞ்சள் தூள் சேர்த்து குழைய வேக விடவும். கடாயில் சிறிதளவு எண்ணெய் விட்டு, வறுக்கக் கொடுத்துள்ள பொருட்களை போட்டு வறுத்து… ஆற வைத்து, மிக்ஸியில் அரைக்கவும். வேக வைத்த பருப்புடன் அரைத்த கலவை, உப்பு சேர்த்துக் கொதிக்க விட்டு இறக்கவும். கடாயில் எண்ணெய் விட்டு கடுகு, பெருங்காயத்தூள், கறிவேப்பிலை தாளித்துக் கொட்டி பரிமாறவும்.

  ✪வெந்தயக் குழம்பு

தேவையானவை: துவரம்பருப்பு, கடலைப்பருப்பு, உளுத்தம்பருப்பு – தலா ஒரு டீஸ்பூன், கடுகு – கால் டீஸ்பூன், வெந்தயம் – அரை டீஸ்பூன், காய்ந்த மிளகாய் – 8, மஞ்சள்தூள் – ஒரு சிட்டிகை, கறிவேப்பிலை – சிறிதளவு, பெருங்காயம் – சிறு துண்டு, பொடித்த வெல்லம் – ஒரு டீஸ்பூன், புளி – 50 கிராம், அரிசி மாவு – 2 டீஸ்பூன். உப்பு, நல்லெண்ணெய் – தேவையான அளவு.

செய்முறை: கடாயில் எண்ணெய் விட்டு கடுகு, வெந்தயம், பெருங்காயம், காய்ந்த மிளகாய், கொடுக்கப்பட்டுள்ள மூன்று வகை பருப்புகள், கறிவேப்பிலை போட்டு தாளிக்கவும். புளியைத் தண்ணீரில் ஊற வைத்து நன்கு கரைத்து, வடிகட்டி தாளிப்பில் சேர்க்கவும். மஞ்சள்தூள், பொடித்த வெல்லம், உப்பு போட்டு நன்றாகக் கொதிக்க விடவும். அரிசி மாவை சிறிதளவு தண்ணீரில் கரைத்து, அதில் சேர்த்து மீண்டும் சிறிது நேரம் கொதிக்க விட்டு இறக்கவும்.

  ✪மோர்க் குழம்பு

தேவையானவை: துவரம்பருப்பு, கடலைப்பருப்பு – தலா ஒரு டீஸ்பூன், வெந்தயம் – அரை டீஸ்பூன், பச்சை மிளகாய் – 5, தேங்காய் துருவல் – ஒரு டேபிள்ஸ்பூன், புளிப்பில்லாத கடைந்த மோர் – ஒரு கப், சீரகம் – ஒரு டீஸ்பூன், இஞ்சி – சிறிய துண்டு, கடுகு – அரை டீஸ்பூன், மஞ்சள்தூள் – கால் டீஸ்பூன், சுண்டைக்காய் – 15, கொத்தமல்லி, கறிவேப்பிலை – சிறிதளவு, தேங்காய் எண்ணெய், உப்பு – தேவையான அளவு.

செய்முறை: துவரம்பருப்பு, கடலைப்பருப்பு இரண்டையும் கலந்து 20 நிமிடம் ஊற வைக்கவும். கடாயில் சிறிதளவு நல்லெண்ணெய் விட்டு, வெந்தயம் சேர்த்து வறுக்கவும். பிறகு, பச்சை மிளகாய், ஊற வைத்த பருப்பு சேர்த்து நன்கு வதக்கி… இஞ்சி, கொத்தமல்லி, தேங்காய் துருவல், சீரகம் சேர்த்து மிக்ஸியில் அரைக்கவும். அரைத்த கலவையுடன் சிறிதளவு தண்ணீர் சேர்த்துக் கலந்து மிதமான தீயில் வைத்து மஞ்சள்தூள், உப்பு சேர்த்து லேசாக கொதிக்க விட்டு அடுப்பை அணைக்கவும். பிறகு அதனுடன் கடைந்த மோர் சேர்க்கவும். தேங்காய் எண்ணெயில் சுண்டைக்காயை சிவக்க வறுத்து மோர்க் கலவையில் சேர்க்கவும். கடாயில் எண்ணெய் விட்டு கடுகு, கறிவேப்பிலை தாளித்துக் கொட்டி நன்கு கலந்து பரிமாறவும்.

  ✪மிளகு குழம்பு

தேவையானவை: மிளகு – கால் கப், துவரம்பருப்பு – 2 டீஸ்பூன், உளுத்தம்பருப்பு – ஒரு டீஸ்பூன், புளி – 50 கிராம், பெருங்காயத்தூள் – கால் டீஸ்பூன், பொடித்த வெல்லம் – ஒரு டீஸ்பூன், மஞ்சள்தூள் – கால் டீஸ்பூன், கடுகு – அரை டீஸ்பூன், அரிசி – 2 டீஸ்பூன், நல்லெண்ணெய், உப்பு – தேவையான அளவு.

செய்முறை: வெறும் கடாயில் அரிசியை சிவக்க வறுத்து எடுத்துக் கொள்ளவும். அதே கடாயில் சிறிதளவு எண்ணெய் விட்டு மிளகு, துவரம்பருப்பு, உளுத்தம்பருப்பு சேர்த்து சிவக்க வறுத்துக் கொள்ளவும். வறுத்தவற்றை மிக்ஸியில் சேர்த்து, நைஸாக அரைத்துக் கொள்ளவும். ஒன்றரை கப் தண்ணீரில் புளியை ஊற வைத்து, கெட்டியாகக் கரைத்து வடிகட்டிக் கொள்ளவும். கடாயில் எண்ணெய் விட்டு, கடுகு தாளித்து, பெருங்காயத்தூள், மஞ்சள்தூள் போட்டு… புளிக் கரைசல், உப்பு சேர்த்துக் கலக்கவும். கொதிக்க ஆரம்பித்ததும், அரைத்த கலவையை சேர்த்து நன்கு கொதிக்க விடவும். எண்ணெய் பிரிந்து மேலே வரும் சமயத்தில் பொடித்த வெல்லம் சேர்த்து கலந்து இறக்கவும்.

  ✪பாசிப்பருப்பு மசியல்

தேவையானவை: பாசிப்பருப்பு – அரை கப், நறுக்கிய தக்காளி – கால் கப், பச்சை மிளகாய் – 3, காய்ந்த மிளகாய் – 2, புளி – 50 கிராம், மஞ்சள்தூள் – ஒரு சிட்டிகை, பெருங்காயத்தூள், கடுகு – தலா கால் டீஸ்பூன், நறுக்கிய கொத்தமல்லி, கறிவேப்பிலை – சிறிதளவு, உப்பு, எண்ணெய் – தேவையான அளவு.

செய்முறை: குக்கரில் பாசிப்பருப்பு, மஞ்சள்தூள் சேர்த்து குழைய வேக வைத்து எடுத்துக் கொள்ளவும். கடாயில் எண்ணெய் விட்டு கடுகு, கிள்ளிய காய்ந்த மிளகாய், பெருங்காயத்தூள் தாளிக்கவும். பிறகு, நறுக்கிய தக்காளி, பச்சை மிளகாய் போட்டு வதக்கி… புளிக் கரைசல், உப்பு சேர்த்து கலக்கவும். அது கொதித்ததும், வேக வைத்து மசித்த பாசிப்பருப்பைப் போட்டு மீண்டும் ஒருமுறை கொதிக்க விடவும். பிறகு, நறுக்கிய கொத்தமல்லி, கறிவேப்பிலை சேர்த்துப் பரிமாறவும்.

  ✪சுண்டைக்காய் வற்றல் குழம்பு

தேவையானவை: சுண்டைக்காய் வற்றல் – கால் கப், தனியா – 2 டீஸ்பூன், கடலைப்பருப்பு – ஒரு டீஸ்பூன், காய்ந்த மிளகாய் – 6, கறிவேப்பிலை – சிறிதளவு, கடுகு – அரை டீஸ்பூன், புளி – 50 கிராம், மஞ்சள்தூள், பெருங்காயத்தூள் – தலா கால் டீஸ்பூன், பொடித்த வெல்லம் – ஒரு டீஸ்பூன், கறிவேப்பிலை – சிறிதளவு, தேங்காய் துருவல் – 2 டீஸ்பூன், எண்ணெய், உப்பு – தேவையான அளவு.

செய்முறை: புளியை ஊற வைத்து கரைத்து வடிகட்டவும். கடாயில் எண்ணெய் விட்டு தனியா, காய்ந்த மிளகாய், கடலைப்பருப்பு மூன்றையும் வறுத்து… அதனுடன் தேங்காய் துருவல், கறிவேப்பிலை சேர்த்து மிக்ஸியில் அரைத்துக் கொள்ளவும். அதே கடாயில் எண்ணெய் விட்டு கடுகு தாளித்து, சுண்டைக்காய் வற்றலை போட்டு வறுக்கவும். புளிக் கரைசலை விட்டு, மஞ்சள்தூள், பெருங்காயத்தூள், உப்பு, பொடித்த வெல்லம் போட்டுக் கொதிக்க விடவும். பிறகு, அரைத்த கலவையை சேர்த்து மீண்டும் நன்கு கொதிக்க வைத்து இறக்கவும்.

  ✪கறிவேப்பிலை குழம்பு

தேவையானவை: கறிவேப்பிலை – ஒரு கப், புளி – 50 கிராம், துவரம்பருப்பு – 2 டீஸ்பூன், மிளகு – ஒரு டீஸ்பூன், காய்ந்த மிளகாய் – 5, பொடித்த வெல்லம் – ஒரு டீஸ்பூன், கடுகு, பெருங்காயத்தூள் – தலா கால் டீஸ்பூன், எண்ணெய், உப்பு – தேவையான அளவு

செய்முறை: கடாயில் சிறிது எண்ணெய் விட்டு துவரம்பருப்பு, காய்ந்த மிளகாய், மிளகு போட்டு வறுத்து ஆற வைக்கவும். வறுத்தவற்றுடன் கறிவேப்பிலை, புளி, உப்பு, வெல்லம் சேர்த்து மிக்ஸியில் அரைக்கவும். கடாயில் எண்ணெய் விட்டு கடுகு, பெருங்காயத்தூள் தாளித்து… அரைத்த கறிவேப்பிலை கலவையைப் போட்டு, தண்ணீர் விட்டு நன்கு கொதிக்க விடவும். எண்ணெய் பிரிந்து வரும் சமயத்தில் இறக்கி விடவும்.

  ✪மொச்சைக் குழம்பு

தேவையானவை: காய்ந்த மொச்சை – அரை கப், புளி – 50 கிராம், சாம்பார் பொடி – ஒரு டீஸ்பூன், தேங்காய் துருவல் – 2 டீஸ்பூன், கடுகு, பெருங்காயத்தூள் – கால் டீஸ்பூன், பச்சை மிளகாய் – 2, கறிவேப்பிலை, நறுக்கிய கொத்தமல்லி – சிறிதளவு, எண்ணெய், உப்பு – தேவையான அளவு.

செய்முறை: முதல் நாள் இரவே மொச்சையை ஊற வைக்கவும். மறுநாள் குக்கரில் வேக விட்டு எடுத்துக் கொள்ளவும். கடாயில் எண்ணெய் விட்டு கடுகு, கறிவேப்பிலை, கீறிய பச்சை மிளகாய், பெருங்காயத்தூள் தாளித்து… வேக வைத்த மொச்சையில் பாதியளவு சேர்க்கவும். பிறகு, புளியை ஊற வைத்துக் கரைத்து, அதில் சாம்பார் பொடி, உப்பு போட்டு மொச்சையுடன் சேர்த்து, நன்கு கலந்து கொதிக்க விடவும். மீதியிருக்கும் மொச்சையுடன் தேங்காய் துருவல் சேர்த்து மிக்ஸியில் அரைத்து சேர்க்கவும். எல்லாம் ஒன்றாக நன்கு கலந்து கொதித்ததும் நறுக்கிய கொத்தமல்லி தூவி இறக்கவும்.

இதனை சாதத்துடன் சாப்பிடலாம். தோசை, சப்பாத்திக்கும் தொட்டுக் கொள்ளலாம்.

  ✪மணத்தக்காளி வற்றல் குழம்பு

தேவையானவை: மணத்தக்காளி வற்றல் – அரை கப், புளி – 50 கிராம், கடுகு, பெருங்காயத்தூள் – தலா கால் டீஸ்பூன், வெந்தயம் – ஒரு டீஸ்பூன், பொடித்த வெல்லம் – ஒரு டீஸ்பூன், கறிவேப்பிலை – சிறிதளவு, மஞ்சள்தூள் – கால் டீஸ்பூன், காய்ந்த மிளகாய் – 3, சாம்பார் பொடி – ஒரு டீஸ்பூன், எண்ணெய், உப்பு – தேவையான அளவு.

செய்முறை: கடாயில் எண்ணெய் விட்டு கடுகு, வெந்தயம், காய்ந்த மிளகாய், பெருங்காயத்தூள் தாளிக்கவும். மணத்தக்காளி வற்றலை போட்டு, நன்றாகப் பொரிந்ததும்… சாம்பார் பொடி, மஞ்சள்தூள் சேர்த்து நன்கு கலக்கவும். பிறகு, புளிக் கரைசலை விட்டு, பொடித்த வெல்லம், உப்பு போட்டு நன்றாகக் கொதிக்க விடவும். எண்ணெய் பிரிந்து வந்ததும், கறிவேப்பிலையைப் போட்டு இறக்கவும்.
குழம்பு தண்ணியாக இருந்தால், சிறிதளவு அரிசி மாவையோ அல்லது கடலை மாவையோ கரைத்து விட்டுக் கொதிக்க விடவும்.

  ✪பச்சை மோர்க்குழம்பு

தேவையானவை: துவரம்பருப்பு, கடலைப்பருப்பு – தலா ஒரு டீஸ்பூன், வெந்தயம், சீரகம் – தலா அரை டீஸ்பூன், காய்ந்த மிளகாய் – 4, கொப்பரைத் துருவல் – ஒரு டேபிள்ஸ்பூன், மஞ்சள்தூள் – கால் டீஸ்பூன், மோர் – ஒரு கப், கடுகு – கால் டீஸ்பூன், கறிவேப்பிலை – சிறிதளவு, தேங்காய் எண்ணெய், உப்பு – தேவையான அளவு.

செய்முறை: கடாயில் சிறிதளவு எண்ணெய் விட்டு, துவரம்பருப்பு, கடலைப்பருப்பு, வெந்தயம், காய்ந்த மிளகாய், சீரகம் ஆகியற்றை சிவக்க வறுக்கவும். ஆறியதும் கொப்பரைத் துருவல், மஞ்சள்தூள், உப்பு சேர்த்து நைஸாக அரைக்கவும். மோரில் அரைத்த கலவையைப் போட்டு நன்கு கலக்கவும். கடாயில் கடுகு, கறிவேப்பிலை தாளித்து, மோர்க் கலவையில் கொட்டிக் கலக்க.. அடுப்பில் வைக்காமலேயே மோர்க்குழம்பு தயார்!

  ✪கடலைக் குழம்பு

தேவையானவை: வெள்ளை கொண்டைக்கடலை – அரை கப், துவரம்பருப்பு – அரை கப், புளி – 50 கிராம், சாம்பார் பொடி – 2 டீஸ்பூன், கடுகு – அரை டீஸ்பூன், வெந்தயம், மஞ்சள்தூள், பெருங்காயத்தூள் – தலா கால் டீஸ்பூன், நறுக்கிய கொத்தமல்லி, கறிவேப்பிலை – சிறிதளவு, எண்ணெய், உப்பு – தேவையான அளவு.

செய்முறை: முதல் நாள் இரவே வெள்ளை கொண்டைக்கடலையை ஊற வைக்கவும். குக்கரில் துவரம்பருப்புடன் மஞ்சள்தூள் சேர்த்து வேக வைக்கவும். வெள்ளை கொண்டைக்கடலையை தனியாக வேக வைக்கவும். புளியை ஊற வைத்துக் கரைத்து, உப்பு, சாம்பார் பொடி சேர்த்து கலந்து மிதமான தீயில் வைத்துக் கொதிக்க விடவும். பிறகு, வேக வைத்த வெள்ளைக் கொண்டக்கடலை, பெருங்காயத்தூள் போட்டு 5 நிமிடம் கொதிக்க விடவும். மசித்த துவரம்பருப்பை போட்டுக் கொதிக்க விட்டு… எண்ணெயில் கடுகு, வெந்தயம் தாளித்துக் கொட்டவும். இறக்குவதற்கு முன் நறுக்கிய கொத்தமல்லி, கறிவேப்பிலை சேர்க்கவும்.

  ✪தேங்காய்ப்பால் குழம்பு

தேவையானவை: தேங்காய் துருவல் – அரை கப், மிளகு – அரை டீஸ்பூன், கடலைப்பருப்பு – கால் கப், கீறிய பச்சை மிளகாய் – 2, புளி, கறிவேப்பிலை – சிறிதளவு, தேங்காய் எண்ணெய், உப்பு – தேவையான அளவு.

செய்முறை: தேங்காய் துருவலை மிக்ஸியில் தண்ணீர் விட்டு அரைத்து வடிகட்டி, முதல் பால், இரண்டாம் பால் என எடுத்து வைத்துக் கொள்ளவும். கடாயில், தேங்காய் எண்ணெய் விட்டு மிளகு, கீறிய பச்சை மிளகாய் போட்டு வறுக்கவும். வேக வைத்த கடலைப்பருப்பு, புளிக் கரைசல், உப்பு சேர்த்துக் கலக்கவும். பிறகு, இரண்டாம் தேங்காய்ப்பாலை விடவும். அது, கொதித்து கெட்டியாக வந்ததும் முதல் தேங்காய்ப்பாலை விட்டு, உடனே இறக்கி விடவும். கறிவேப்பிலை சேர்த்துப் பரிமாறவும்.

  ✪அப்பளக் குழம்பு

தேவையானவை: உளுந்து அப்பளத் துண்டுகள் – கால் கப், புளி – 50 கிராம், கடுகு – கால் டீஸ்பூன், வெந்தயம் – அரை டீஸ்பூன், துவரம்பருப்பு, கடலைப்பருப்பு, உளுத்தம்பருப்பு – தலா ஒரு டீஸ்பூன், காய்ந்த மிளகாய் – 6, மஞ்சள்தூள், பெருங்காயத்தூள் – தலா கால் டீஸ்பூன், மிளகாய்த்தூள் – அரை டீஸ்பூன், கறிவேப்பிலை – சிறிதளவு, பொடித்த வெல்லம் – ஒரு டீஸ்பூன், எண்ணெய், உப்பு – தேவையான அளவு.

செய்முறை: கடாயில் எண்ணெய் விட்டு கடுகு, வெந்தயம், பருப்பு வகைகள், பெருங்காயத்தூள், கிள்ளிய காய்ந்த மிளகாய், கறிவேப்பிலை தாளிக்கவும். பிறகு வடிகட்டிய புளிக் கரைசலை விட்டு, மஞ்சள்தூள், மிளகாய்த்தூள், உப்பு சேர்க்கவும். கொதிக்க ஆரம்பித்தவுடன், அப்பளத் துண்டுகளைப் போட்டு மீண்டும் நன்றாக கொதிக்க விட்டு, பொடித்த வெல்லம் சேர்த்து இறக்க… அப்பளக் குழம்பு தயார்.

  ✪வேர்க்கடலை காரக் குழம்பு

தேவையானவை: வேர்க்கடலை – கால் கப், தோலுரித்த சின்ன வெங்காயம் – கால் கப், கடுகு – கால் டீஸ்பூன், புளி – 50 கிராம், மஞ்சள்தூள் – கால் டீஸ்பூன், திக்கான தேங்காய்ப்பால் – கால் கப், பொடித்த வெல்லம் – ஒரு டீஸ்பூன், கறிவேப்பிலை – சிறிதளவு, எண்ணெய், உப்பு – தேவையான அளவு.

வறுத்து அரைக்க: தனியா, கடலைப்பருப்பு – தலா ஒரு டீஸ்பூன், மிளகு – அரை டீஸ்பூன், காய்ந்த மிளகாய் – 5, வெந்தயம் – அரை டீஸ்பூன்.

செய்முறை: வேர்க்கடலையை வேக வைத்து எடுத்துக் கொள்ளவும். ஒன்றரை கப் தண்ணீரில் புளியை ஊற வைத்துக் கரைத்து வடிகட்டவும். வெறும் கடாயில், வறுக்க கொடுத்துள்ள பொருட்களைப் போட்டு சிவக்க வறுத்து, ஆற வைத்து மிக்ஸியில் அரைக்கவும். கடாயில் எண்ணெய் விட்டு கடுகு தாளித்து.. சின்ன வெங்காயம், கறிவேப்பிலை சேர்த்து நன்கு வதக்கவும். வாசனை வந்ததும், வேக வைத்த வேர்க்கடலை, மஞ்சள்தூள், உப்பு, புளிக் கரசைல் சேர்த்து நன்கு கலக்கவும். நன்றாகக் கொதித்ததும், அரைத்த கலவையைப் போட்டுக் கலந்து, பொடித்த வெல்லம் சேர்த்து ஒருமுறை கொதிக்க விடவும். கடைசியாக தேங்காய்ப்பால் விட்டு, ஒரு கொதி வந்ததும் இறக்கிப் பரிமாறவும்.

  ✪பாகற்காய் வற்றல் குழம்பு

தேவையானவை: பாகற்காய் வற்றல் – அரை கப், புளி – 50 கிராம், கடுகு – அரை டீஸ்பூன், பெருங்காயத்தூள் – கால் டீஸ்பூன், பொடித்த வெல்லம் – ஒரு டீஸ்பூன், கறிவேப்பிலை – சிறிதளவு, எண்ணெய், உப்பு – தேவையான அளவு.

வறுத்து அரைக்க: கடலைப்பருப்பு, துவரம்பருப்பு – தலா ஒரு டீஸ்பூன், வெந்தயம் – அரை டீஸ்பூன், தனியா – 2 டீஸ்பூன், காய்ந்த மிளகாய் – 5.

செய்முறை: கடாயில் சிறிதளவு எண்ணெய் விட்டு, வறுக்கக் கொடுத்துள்ள பொருட்களை போட்டு வறுத்து… ஆற வைத்து மிக்ஸியில் தண்ணீர் விட்டு அரைத்துக் கொள்ளவும். அதே கடாயில் எண்ணெய் விட்டு பாகற்காய் வற்றலை கொஞ்சம் கொஞ்சமாகப் போட்டு வறுத்து எடுத்துக் கொள்ளவும். கடாயில் இருக்கும் அதே எண்ணெயில் கடுகு, பெருங்காயம், கறிவேப்பிலை தாளித்து, புளிக் கரைசல், உப்பு சேர்த்துக் கலக்கவும். கொதிக்க ஆரம்பித்ததும், வறுத்த பாகற்காய், அரைத்த கலவை சேர்த்து நன்கு கலந்து கொதிக்க விடவும். எண்ணெய் பிரிந்து வரும் சமயத்தில் வெல்லம் சேர்த்து இறக்கவும்.

  ✪சுக்குப்பொடி குழம்பு

தேவையானவை: சுக்குப்பொடி – கால் கப், பொடித்த வெல்லம் – ஒரு டீஸ்பூன், புளி – 50 கிராம், தேங்காய்ப்பால் – கால் கப், கடுகு – கால் டீஸ்பூன், எண்ணெய், உப்பு – தேவையான அளவு.

செய்முறை: கடாயில் எண்ணெய் விட்டு கடுகு தாளிக்கவும். சுக்குப்பொடி போட்டு லேசாக வதக்கி, புளிக் கரைசலை விடவும். உப்பு, பொடித்த வெல்லம் சேர்த்து கொதிக்க விட்டு… கெட்டியானதும், தேங்காய்ப்பால் விட்டுக் கலந்து இறக்கவும்.

  ✪தாமரைத்தண்டு குழம்பு

தேவையானவை: தாமரைத்தண்டு – கால் கப், புளி – 50 கிராம், தனியாத்தூள், மிளகாய்த்தூள் – தலா ஒரு டீஸ்பூன், மஞ்சள்தூள், கடுகு, வெந்தயம், பெருங்காயத்தூள் – தலா கால் டீஸ்பூன், பொடித்த வெல்லம் – ஒரு டீஸ்பூன், நறுக்கிய கொத்தமல்லி, கறிவேப்பிலை, – சிறிதளவு, எண்ணெய், உப்பு – தேவையான அளவு.

செய்முறை: கடாயில் எண்ணெய் விட்டு கடுகு, வெந்தயம், கறிவேப்பிலை தாளித்து, தாமரைத் தண்டு சேர்த்து வதக்கவும். பிறகு, கெட்டியாகக் கரைத்து வடிக்கட்டிய புளிக் கரைசல் விட்டுக் கலந்து… உப்பு, பெருங்காயத்தூள் சேர்க்கவும். தனியாத்தூள், மிளகாய்த்தூள், மஞ்சள்தூள், பொடித்த வெல்லம் போட்டு நன்கு கொதிக்க விட்டு, கொத்தமல்லி தூவி இறக்க… தாமரைத் தண்டு குழம்பு ரெடி!

  ✪பக்கோடா குழம்பு

தேவையானவை: துவரம்பருப்பு – அரை கப், புளி – 50 கிராம், சாம்பார் பொடி – ஒரு டீஸ்பூன், பெருங்காயத்தூள், கடுகு, மஞ்சள் தூள் – தலா கால் டீஸ்பூன், காய்ந்த மிளகாய் – 2, கறிவேப்பிலை, கொத்தமல்லி – சிறிதளவு. எண்ணெய், உப்பு – தேவையான அளவு.

பக்கோடாவுக்கு: கடலைப்பருப்பு – ஒரு கப், காய்ந்த மிளகாய் – 4, உப்பு – தேவையான அளவு.

செய்முறை: பக்கோடாவுக்கு கொடுக்கப்பட்டுள்ள கடலைப்பருப்பு, காய்ந்த மிளகாயை ஒன்றாகச் சேர்த்து அரை மணி நேரம் ஊற வைக்கவும். தண்ணீரை வடித்து உப்பு சேர்த்து கரகரப்பாக அரைத்துக் கொள்ளவும். கடாயில் எண்ணெய் விட்டு அரைத்த மாவிலிருந்து கொஞ்சம் கொஞ்சமாக எடுத்துப் போட்டு பக்கோடாக்களாக பொரித்தெடுத்துக் கொள்ளவும்.

குக்கரில் துவரம்பருப்பு, மஞ்சள்தூள் சேர்த்து வேக வைக்கவும். கடாயில் எண்ணெய் விட்டு கடுகு, காய்ந்த மிளகாய் தாளித்து… புளிக் கரைசல், சாம்பார் பொடி, உப்பு, பெருங்காயத்தூள் சேர்த்து நன்கு கொதிக்க விடவும். பிறகு, வேக வைத்த துவரம்பருப்பு, நறுக்கிய கொத்தமல்லி, கறிவேப்பிலையைப் போட்டு நன்கு கொதித்ததும் பொரித்து வைத்துள்ள பக்கோடாக்களைப் போட்டு ஒருமுறை கொதிக்க வைத்து இறக்கவும்.

  ✪காராமணி குழம்பு

தேவையானவை: காராமணி, தேங்காய்ப்பால் – தலா கால் கப், புளி – 50 கிராம், காய்ந்த மிளகாய் – 5, கடுகு, சீரகம், பெருங்காயத்தூள், மஞ்சள்தூள் – தலா கால் டீஸ்பூன், மிளகு – அரை டீஸ்பூன், நறுக்கிய கொத்தமல்லி – கால் கப், எண்ணெய் – ஒரு டேபிள்ஸ்பூன், உப்பு – தேவையான அளவு.

செய்முறை: முதல் நாள் இரவே காராமணியை ஊற வைத்து, மறுநாள் குக்கரில் வேக வைத்து எடுத்துக் கொள்ளவும். கடாயில் எண்ணெய் விட்டு காய்ந்த மிளகாய், மிளகு, சீரகம் போட்டு வறுத்து ஆற வைக்கவும். அதே கடாயில் எண்ணெய் விட்டு கடுகு, பெருங்காயத்தூள், மஞ்சள்தூள் சேர்த்து புளிக் கரைசல், உப்பு சேர்த்துக் கொதிக்க விடவும். நன்கு கொதித்ததும், வறுத்த பொருட்களை மிக்ஸியில் போட்டு பொடிக்கவும். அதனுடன் வேக வைத்து, ஆற வைத்த காராமணி, நறுக்கிய கொத்தமல்லி சேர்த்து ஒரு சுற்று அரைத்து, புளிக்கரைசலுடன் சேர்த்து மீண்டும் கொதிக்க விடவும். பிறகு, தேங்காய்ப்பால் சேர்த்து லேசாக கொதிக்க விட்டு இறக்கவும்.

  ✪பருப்பு உருண்டைக் குழம்பு

தேவையானவை – உருண்டைக்கு: துவரம்பருப்பு – அரை கப், தேங்காய் துருவல் – ஒரு டேபிள்ஸ்பூன், காய்ந்த மிளகாய் – 3, பெருங்காயத்தூள் – கால் டீஸ்பூன், கடுகு, சீரகம் – தலா கால் டீஸ்பூன், உப்பு, எண்ணெய் – தேவையான அளவு.

குழம்புக்கு: புளி – 50 கிராம், சாம்பார் பொடி – 2 டீஸ்பூன், பெருங்காயத்தூள் – கால் டீஸ்பூன், பொடித்த வெல்லம் – ஒரு டீஸ்பூன், கறிவேப்பிலை – சிறிதளவு, கடுகு – அரை டீஸ்பூன், உப்பு, எண்ணெய் – தேவையான அளவு.

செய்முறை – உருண்டை: துவரம்பருப்பு, காய்ந்த மிளகாய் இரண்டையும் அரை மணி நேரம் ஊற வைக்கவும். அவற்றுடன் உப்பு, பெருங்காயத்தூள், தேங்காய் துருவல் சேர்த்து கரகரப்பாக அரைக்கவும். கடாயில் எண்ணெய் விட்டு, கடுகு, சீரகம் தாளித்து அந்த மாவில் கொட்டி பிசையவும். பிறகு, சிறு சிறு உருண்டைகளாக செய்துகொள்ளவும்.

குழம்பு: 2 கப் தண்ணீரில் புளியைக் கரைத்து வடிகட்டி… அதில் சாம்பார் பொடி, உப்பு, பெருங்காயத்தூள், வெல்லம் போட்டு அடிகனமான காடாயில் விட்டு, அடுப்பில் வைக்கவும். கொதிக்க ஆரம்பித்ததும், உருண்டைகளை அதில் ஒவ்வொன்றாகப் போடவும். அவை வெந்து மேலே வந்ததும்… அடுப்பை மிதமான தீயில் வைக்கவும். கடுகு, கறிவேப்பிலை தாளித்துக் கொட்டி கொதிக்க விடவும். அவ்வப்போது கிளறிக் கொண்டே இருந்தால், உருண்டைக்குள் உப்பு- காரம்-புளிப்பு சேர்ந்து சுவையாக இருக்கும். குழம்பு கெட்டியானதும் அடுப்பில்இருந்து இறக்கவும்.

  ✪பச்சைப்பயறு குழம்பு

தேவையானவை: பச்சைப்பயறு – அரை கப், பச்சை மிளகாய் – 2, சீரகம் – அரை டீஸ்பூன், காய்ந்த மிளகாய் – 2, புளி – சிறிதளவு, கடுகு, பெருங்காயத்தூள், மஞ்சள்தூள் – தலா கால் டீஸ்பூன், எண்ணெய், உப்பு – தேவையான அளவு

செய்முறை: பச்சைப்பயறை முதல் நாள் இரவே ஊற வைத்து, மறுநாள் குக்கரில் வேக வைத்து ஒன்றிரண்டாக மசித்துக் கொள்ளவும். ஒரு கப் நீரில் புளியை ஊற வைத்துக் கரைத்து வடிகட்டவும். பச்சை மிளகாய், சீரகம், காய்ந்த மிளகாயை மிக்ஸியில் போட்டு அரைத்துக் கொள்ளவும். கடாயில், எண்ணெய் விட்டு கடுகு தாளித்து, புளிக் கரைசல், உப்பு, மஞ்சள்தூள் சேர்த்துக் கொதிக்க விட்டு, ஒன்றிரண்டாக மசித்த பயறைச் சேர்த்துக் கலக்கவும். வாசனை வந்தவுடன், அரைத்த கலவை, பெருங்காயத்தூள் போட்டுக் கொதிக்க வைத்து இறக்கவும்.

  ✪பாகற்காய் வற்றல் பொரிச்ச குழம்பு

தேவையானவை: பாகற்காய் வற்றல் – அரை கப், பொடித்த வெல்லம் – ஒரு டீஸ்பூன், புளி – 50 கிராம், மஞ்சள்தூள், கடுகு, பெருங்காயத்தூள் – தலா கால் டீஸ்பூன், தேங்காய் துருவல் – ஒரு டீஸ்பூன், கறிவேப்பிலை – சிறிதளவு, எண்ணெய், உப்பு – தேவையான அளவு.

வறுத்து அரைக்க: உளுத்தம்பருப்பு, மிளகு, எள் – தலா ஒரு டீஸ்பூன், காய்ந்த மிளகாய் – 5.

செய்முறை: கடாயில் சிறிதளவு எண்ணெய் விட்டு, வறுக்கக் கொடுத்துள்ள பொருட்களை ஒவ்வொன்றாகச் சேர்த்து வறுத்து… ஆற வைத்து, தேங்காய் துருவல் சேர்த்து நைஸாக அரைத்துக் கொள்ளவும். அதே கடாயில் எண்ணெய் விட்டு பாகற்காய் வற்றலை வறுத்து எடுத்துக் கொள்ளவும். பிறகு, அதே எண்ணெயில் கடுகு, கறிவேப்பிலை தாளித்து, புளிக் கரைசல், மஞ்சள்தூள், பொடித்த வெல்லம், பெருங்காயத்தூள், உப்பு சேர்த்து நன்கு கலந்து கொள்ளவும். கொதிக்க ஆரம்பித்தவுடன் வறுத்தெடுத்த பாகற்காய், அரைத்த கலவை சேர்த்து நன்கு கொதிக்க விட்டு இறக்கவும்.

  ✪கத்திரி வற்றல் குழம்பு

தேவையானவை: கத்திரி வற்றல் – கால் கப், துவரம்பருப்பு – அரை கப், புளி – 50 கிராம், கடுகு, வெந்தயம், பெருங்காயத்தூள், மஞ்சள்தூள் – தலா கால் டீஸ்பூன், சாம்பார் பொடி – ஒரு டீஸ்பூன், நறுக்கிய கொத்தமல்லி, கறிவேப்பிலை – சிறிதளவு, எண்ணெய், உப்பு – தேவையான அளவு.

செய்முறை: தண்ணீரில் கத்திரி வற்றலை அரை மணி நேரம் ஊற விடவும். குக்கரில், துவரம்பருப்புடன் மஞ்சள்தூள் சேர்த்து வேக விடவும். கடாயில், எண்ணெய் விட்டு கடுகு, வெந்தயம் தாளித்து… புளிக் கரைசல், சாம்பார் பொடி, பெருங்காயத்தூள், உப்பு போட்டுக் கலந்து கொள்ளவும். கொதித்தவுடன், கத்தரி வற்றல், சேர்த்து வேக விடவும். வாசனை வந்ததும், வேக வைத்துள்ள துவரம்பருப்பு சேர்த்து, நறுக்கிய கொத்தமல்லி, கறிவேப்பிலை தூவி நன்றாகக் கொதிக்க விட்டு இறக்கவும்.

  ✪பருப்பு உருண்டை மோர்க்குழம்பு

தேவையானவை – உருண்டைக்கு: துவரம்பருப்பு – அரை கப், தேங்காய் துருவல் – ஒரு டேபிள்ஸ்பூன், காய்ந்த மிளகாய் – 3, பெருங்காயத்தூள் – கால் டீஸ்பூன், கடுகு, சீரகம் – தலா கால் டீஸ்பூன், உப்பு, எண்ணெய் – தேவையான அளவு.

குழம்புக்கு: துவரம்பருப்பு, கடலைப்பருப்பு, தேங்காய் துருவல் – தலா ஒரு டீஸ்பூன், சீரகம் – அரை டீஸ்பூன், பச்சை மிளகாய் – 3, இஞ்சி – ஒரு துண்டு, கறிவேப்பிலை, கொத்தமல்லி – சிறிதளவு, கடைந்த மோர் – ஒரு கப், மஞ்சள்தூள் – கால் டீஸ்பூன், கடுகு – கால் டீஸ்பூன், உப்பு, தேங்காய் எண்ணெய் – தேவையான அளவு.

செய்முறை – உருண்டை: துவரம்பருப்பு, காய்ந்த மிளகாய் இரண்டையும் அரை மணி நேரம் ஊற வைக்கவும். அவற்றுடன் உப்பு, பெருங்காயத்தூள், தேங்காய் துருவல் சேர்த்து கரகரப்பாக அரைக்கவும். கடாயில் எண்ணெய் விட்டு, கடுகு, சீரகம் தாளித்து அந்த மாவில் கொட்டி பிசையவும். பிறகு, சிறு சிறு உருண்டைகளாக செய்து கொள்ளவும்.

குழம்பு: துவரம்பருப்பு, கடலைப்பருப்பு, தேங்காய் துருவல், சீரகம், பச்சை மிளகாய், இஞ்சி ஆகியவற்றை மிக்ஸியில் போட்டு அரைத்துக் கொள்ளவும். கடாயில் தண்ணீர் விட்டு, சிட்டிகை உப்பு சேர்த்து கொதிக்க விடவும். கொதி வந்ததும், தயாராக இருக்கும் உருண்டைகளை அதில் போடவும். அவை வெந்ததும் மேலே வரும். பின்னர், அரைத்து வைத்திருக்கும் துவரம்பருப்புக் கலவையை சேர்த்து… அடிபிடிக்காமல் கொதிக்க விடவும். தேங்காய் எண்ணெயில் கடுகு தாளித்து கொட்டவும். நறுக்கிய கொத்தமல்லி, கறிவேப்பிலை சேர்க்கவும். மோரில் தேவையான உப்பு, மஞ்சள்தூள் சேர்த்துக் கலந்து, உருண்டைகள் கொதித்துக் கொண்டிருக்கும் பாத்திரத்தில் கொட்டி கலந்து பரிமாறவும்.