வீடு கட்டும் முன் மண் மற்றும் நீர் பரிசோதனை செய்வது அவசியம். பரிசோதனை செய்யாமல் விட்டுவிட்டால், எவ்வளவு தரமான கட்டுமானப் பொருட்களைக் கொண்டு கட்டினாலும் வீடு விரைவிலேயே பாதிக்கப்பட்டுவிடும்.
மண் பரிசோதனை மண்ணின் தன்மையைப் பகுத்தாய்கிறது. இதில் ஏதாவது மாற்றம் இரு ந்தால், வீட்டின் கட்டுமான முறையில் நிச்சயம் மாற்றம் செய்ய வேண்டியிருக்கும். மண் பரிசோதனையின் அடிப்படையில்தான் பொறி யாளர்கள் அடித்தளம், கட்டிடத்தின் அமைப்பை இறுதி செய்வார்கள்.
வீடு கட்டப்போகும் இடம் களிமண் தரையாக இருந்தால் அது ஈரப்பதத்துக்கு ஏற்பச் சுருங்கி விரியும் தன்மையுடன் இருக்கும். இதுபோன்ற நிலத்தில் எப்படிக் கட்டுமானத்தை எழுப்ப வேண்டுமோ அதன்படி பொறியாளர்கள் அமைப்பார்கள். எனவே வீடு கட்டுவதற்கு முன்பாகவே மண் பரிசோதனை செய்வது அவசியம். இப்போது எல்லா இடங்களிலும் மண் பரிசோதனை நிலையங்கள் இருப்பதால் சுலபமாகப் பரிசோதனை செய்துவிடலாம். மண் பரிசோதனை அறிக்கையின் நகலையும் வாங்கி வைப்பது மிகவும் நல்லது.
மண் பரிசோதனை போலவே நீரையும் பரிசோதனை செய்து கொள்வது அவசியமானது. இப்போதெல்லாம் ஒரு மனையில் வீடு கட்டுகிறார்கள் என்றால், முதல் வேலையாக ஆழ்துளைக் கிணறு அமைத்துவிடுகிறார்கள். அந்தத் தண்ணீரையே வீடு கட்டவும் பயன்படுத்திக் கொள்கிறார்கள். ஒருவேளை நீரின் தரம் சரியில்லை என்றால் கட்டுமானம் தரமற்றதாக ஆகிவிடும்.
நீர் பரிசோதனை என்பது நீரின் தரம், அது குடிக்க உகந்ததா, கட்டுமானத்துக்குத் தகுதி யானதா என்பது குறித்துப் பரிசோதிப்பதாகும். தண்ணீர் கட்டுமானத்துக்குத் தகுதியற்றது எனப் பரிசோதனையில் தெரிய வந்தால், நல்ல தண்ணீர் உபயோகிப்பதை நாம் உறுதி செய்துகொள்ள உதவும். தரம் குறைந்த தண்ணீரைப் பயன்படுத்துவது கட்டிடத்தின் ஆயுளைக் குறைத்துவிடும்.
மண் மற்று நீரின் தரம் என்பது கண்ணால் மட்டுமே பார்த்து முடிவு செய்துவிட முடியாது. லட்சக்கணக்கில் செலவு செய்து கட்டும் வீட்டுக்குக் குறைந்த செலவில் இவை இரண்டையும் பரிசோதிப்பது நம் வீட்டுக்கு நல்லது. வீடு கட்டப் பொறியாளரையோ, மேஸ்திரிகளையோ அணுகும்போதே மண், நீர் பரிசோதனை பற்றி பேசுவது மிகவும் நல்லது. அடுக்குமாடி வீடு வாங்கப் போகிறீர்கள் என்றால், மண் மற்றும் நீர் பரிசோதனை செய்யப்பட்டதா, அப்படிச் செய்திருந்தால், அதன் நகலைக் கட்டுநர்களிடம் கேட்டு வாங்கிச் சரிபார்த்துக் கொள்ளுங்கள்.
No comments:
Post a Comment