Sunday, February 17, 2019

30 வகை சாட்

★‘சட்’டுனு செய்யலாம்.. 30 வகை சாட்

’30 வகை சாட்’ அயிட்டங்களை செய்து இங்கே அசத்துகிறார் சமையல் கலை நிபுணர் தீபா பாலசந்தர்.

”தயாரிப்பதற்கு அதிக நேரம் எடுத்துக் கொள்ளும் டிபன் வகைகளுக்கு நடுவில்,  சீக்கிரமாக செய்யக் கூடிய ‘சாட்’ வகைகளை அவ்வப்போது செய்து பரிமாறினால், நமக்கும் கொஞ்சம் ரிலீஃப் கிடைக்கும்.

★சாட் மசாலா பொடி

தேவையானவை:
சீரகம், தனியா, அம்சூர் பவுடர் (மாங்காய்த்தூள் – பெரிய மளிகைக் கடைகளில் கிடைக்கும்) – தலா கால் கப், மிளகு – ஒரு டீஸ்பூன், காய்ந்த மிளகாய் – அரை கப், கறுப்பு உப்பு (பெரிய மளிகைக் கடைகளில் கிடைக்கும்) – ஒரு டீஸ்பூன், ஏலக்காய், லவங்கம் – தலா 5, உப்பு – தேவையான அளவு.

செய்முறை:
கொடுக்கப்பட்டுள்ள பொருட்கள் அனைத்தையும் வெயிலில் நன்கு காய வைத்து நைஸாக அரைத்து எடுத்தால்… சாட் மசாலா பொடி தயார்! இதனை சாட் வகைகள் தயாரிக்கும்போது பயன்படுத்தலாம்.

★ஸ்வீட் சட்னி

தேவையானவை:
பேரீச்சம்பழம் – 10, புளி – பெரிய நெல்லிக்காய் அளவு, காய்ந்த மிளகாய் – 4, சீரகம் – ஒரு டீஸ்பூன், வெல்லம் – சிறிதளவு, உலர் திராட்சை – 10, உப்பு – தேவையான அளவு.

செய்முறை:
பேரீச்சம்பழத்தின் கொட்டைகளை நீக்கிவிட்டு, புளி, காய்ந்த மிளகாய், சீரகம், வெல்லம், உலர் திராட்சை, உப்பு சேர்த்து தளர அரைத்து, வடிகட்டி, கொதிக்கவிட்டு, கெட்டியான பின்பு இறக்கவும். பரிமாறும்போது நீர்க்க கரைத்து பயன்படுத்தலாம்.

★கிரீன் சட்னி  உருளை சாட்

தேவையானவை:
வேக வைத்த உருளைக்கிழங்கு (துண்டுகளாக்கவும்) – ஒரு கப், கிரீன் சட்னி – அரை கப், சாட் மசாலா பொடி – ஒரு டீஸ்பூன், கேரட் துருவல், ஓமப்பொடி (ஸ்நாக்ஸ் வகை) – சிறிதளவு, எண்ணெய், உப்பு – தேவையான அளவு.

கிரீன் சட்னி செய்ய:
கொத்தமல்லி – ஒரு கப், பச்சை மிள காய் – 3, புளி – நெல்லிக்காய் அளவு, உப்பு தேவையான அளவு (எல்லாவற்றையும் சேர்த்து சிறிது தண்ணீர் விட்டு அரைத்துக் கொள்ளவும். பச்சை வாசனை பிடிக்காதவர்கள் கொத்தமல்லியை வதக்கி சட்னி செய்யலாம்).

செய்முறை:
வாணலியில் எண்ணெயை காய வைத்து, வேக வைத்த உருளைக்கிழங்கு துண்டுகளை பொரித்து எடுத்து வைக்கவும்.

உருளைக்கிழங்கு துண்டு களின் மீது கிரீன் சட்னி, சாட் மசாலா பொடி, கேரட் துருவல், ஓமப்பொடி, உப்பு சேர்த்துக் கலந்து பரிமாறவும்.

★வெஜ் சாட்

தேவையானவை:
உருளைக்கிழங்கு – 2, வெள்ளரிக்காய், கேரட், ஸ்வீட் கார்ன், வெங்காயம், தக்காளி – தலா ஒன்று,  கொத்தமல்லி, ஓமப்பொடி (ஸ்நாக்ஸ் வகை) – சிறிதளவு, சாட் மசாலா பொடி, எலுமிச்சைச் சாறு, உப்பு – தேவையான அளவு.

செய்முறை:
உருளைக்கிழங்கை வேக வைத்து, தோல் உரித்து, உதிர்க்கவும். வெள்ளரிக்காய், கேரட்டை துருவவும். ஸ்வீட் கார்னை வேக வைத்து உதிர்க்கவும். வெங்காயம், தக்காளியை பொடியாக நறுக்கவும்.

காய்கறிகளை ஒன்றாக கலந்து… கொத்தமல்லி, ஓமப்பொடி, சாட் மசாலா பொடி, எலுமிச்சை சாறு, உப்பு சேர்த்துப் பரிமாறவும்.

★சேவ் பூரி

தேவையானவை:
ஸ்வீட் கார்ன், தக்காளி –  தலா ஒன்று, சாட் மசாலா பொடி – ஒரு டீஸ்பூன், எலுமிச்சம்பழம் – அரை மூடி, சிறிய பூரிகள் – 10 (கடைகளில் பாக்கெட்டாக கிடைக்கும்), காராசேவ், உப்பு – தேவையான அளவு.

செய்முறை:
ஸ்வீட் கார்னை வேக வைத்து உதிர்க்கவும். தக்காளியை பொடியாக நறுக்கவும். ஒரு தட்டில் பூரிகளை பரத்தி வைக்கவும். அதன் மீது உதிர்த்த ஸ்வீட் கார்ன், தக்காளி, சாட் மசாலா பொடி, எலுமிச்சைச் சாறு, காராசேவ், உப்பு ஆகியவற்றை தூவவும்.

ஹெல்தியான, எளிதில் செய்யக் கூடிய சாட் வகை இது. விரும்பினால் கிரீன் சட்னியையும் மேலே விட்டு பரிமாறலாம்.

★ஸ்பைஸி துக்கடா சாட்

தேவையானவை:
உருளைக்கிழங்கு – 2, மைதா மாவு – ஒரு கப்,  ஸ்வீட் சட்னி, சாட் மசாலா பொடி – தலா ஒரு டீஸ்பூன், கேரட் துருவல் – 2 டீஸ்பூன், ஓமப்பொடி (ஸ்நாக்ஸ் வகை), கொத்தமல்லி – சிறிதளவு, எண்ணெய், உப்பு, ஓமம் – தேவையான அளவு.

செய்முறை:
மைதா மாவுடன் ஓமம், உப்பு சேர்த்துப் பிசைந்து, 10 நிமிடம் அப்படியே வைத்து… பின்பு சப்பாத்தி போல இட்டு, டைமண்ட் வடிவ பிஸ்கட்டுகளாக வெட்டி எடுத்து, எண்ணெயில் பொரிக்கவும். இதுதான் துக்கடா.

உருளைக்கிழங்கை வேக வைத்து, தோல் நீக்கி, துண்டுகளாக்கவும். இதனுடன் பொரித்த துக்கடா, ஸ்வீட் சட்னி, சாட் மசாலா பொடி கலந்து மேலே கேரட் துருவல், ஓமப்பொடி, கொத்தமல்லி தூவி பரிமாறவும்.

★சீஸ் சாட்

தேவையானவை:
சீஸ் துருவல் – ஒரு கப், ஓமப்பொடி (ஸ்நாக்ஸ் வகை) – கால் கப், உருளைக்கிழங்கு – 2, வெங்காயம், தக்காளி  – தலா ஒன்று, சாட் மசாலா பொடி, ஸ்வீட் சட்னி, கிரீன் சட்னி – தலா ஒரு டீஸ்பூன், உப்பு, எலுமிச்சைச் சாறு – தேவையான அளவு, கொத்தமல்லி – சிறிதளவு.

செய்முறை:
உருளைக்கிழங்கை வேக வைத்து, தோல் நீக்கி, உதிர்க்கவும். வெங்காயம், தக்காளியை பொடியாக நறுக்கவும்.

ஒரு அகலமான தட்டில் உருளைக்கிழங்கு, வெங்காயம், தக்காளி சேர்த்து… மேலே சாட் மசாலா பொடி, ஸ்வீட் சட்னி, கிரீன் சட்னி, உப்பு, எலுமிச்சைச் சாறு, ஓமப்பொடி, சீஸ் துருவல் சேர்த்து… கொத்தமல்லியால் அலங்கரித்து பரிமாறவும்.

★சிப்ஸ் சாட்

தேவையானவை:
உருளைக்கிழங்கு – 2, உருளைக்கிழங்கு சிப்ஸ் – ஒரு கப், மாதுளை முத்துக்கள் – சிறிதளவு, சாட் மசாலா பொடி, ஸ்வீட் சட்னி – தலா ஒரு டீஸ்பூன், கொத்தமல்லி – சிறிதளவு, எலுமிச்சைச் சாறு, உப்பு – தேவையான அளவு.

செய்முறை:
உருளைக்கிழங்கை வேக வைத்து தோல் நீக்கி, துண்டுகளாக்கவும். இதனுடன் உருளைக்கிழங்கு சிப்ஸ், மாதுளை முத்துக்கள்,  சாட் மசாலா பொடி, ஸ்வீட் சட்னி, கொத்தமல்லி, எலுமிச்சைச் சாறு, உப்பு கலந்து பரிமாறவும்.

இனிப்பு, புளிப்பு, காரம் என்று வித்தியாசமான சுவையில் இருக்கும் இந்த சிப்ஸ் சாட்.

★கீரை சாட்

தேவையானவை:
முருங்கைக்கீரை – ஒரு கட்டு, உருளைக்கிழங்கு – 4, வேர்க்கடலை – கால் கப், சாட் மசாலா பொடி, ஸ்வீட் சட்னி – தலா ஒரு டீஸ்பூன், எலுமிச்சைச் சாறு – சிறிதளவு, கொத்தமல்லி, ஓமப்பொடி (ஸ்நாக்ஸ் வகை), கேரட் துருவல், எண்ணெய், உப்பு – தேவையான அளவு.

செய்முறை:
முருங்கைக்கீரையை சுத்தம் செய்து, ஆய்ந்து, எண்ணெயில் பொரித்து எடுக்கவும். உருளைக்கிழங்கை வேக வைத்து, தோல் உரித்து, துண்டுகள் செய்யவும். வேர்க்கடலையை வறுக்கவும்.

கீரை, உருளைக்கிழங்கை ஒன்று சேர்த்து… வேர்கடலை, சாட் மசாலா பொடி, ஸ்வீட் சட்னி, எலுமிச்சைச் சாறு, கொத்தமல்லி, ஓமப்பொடி, கேரட் துருவல், உப்பு சேர்த்து சாப்பிடலாம்.

முருங்கைக்கீரையில்  இரும்புச் சத்து நிறைந்து உள்ள தால், அனைத்து வயதினருக்கும் ஏற்ற சாட் இது!

★பொரி சாட்

தேவையானவை:
பொரி – ஒரு கப், கேரட் துருவல் – 4 டீஸ்பூன், வெங்காயம், தக்காளி – தலா ஒன்று, ஓமப்பொடி (ஸ்நாக்ஸ் வகை) – அரை கப், உருளைக்கிழங்கு சிப்ஸ் – சிறிதளவு,  ஸ்வீட் சட்னி, கிரீன் சட்னி – தலா ஒரு டீஸ்பூன், வெள்ளரி துருவல், கொத்தமல்லி – சிறிதளவு, சாட் மசாலா பொடி, உப்பு – தேவையான அளவு.

செய்முறை:
வெங்காயம், தக்காளியை பொடியாக நறுக்கவும். இதனுடன் பொரி, கேரட் துருவல், ஓமப்பொடி, உருளைக்கிழங்கு சிப்ஸ், ஸ்வீட் சட்னி, கிரீன் சட்னி, வெள்ளரி துருவல், சாட் மசாலா பொடி, உப்பு ஆகியவற்றை சேர்க்கவும். பரிமாறும்போது கொத்தமல்லி தூவி அலங்கரித்து பரிமாறவும்.

★சன்னா சாட்

தேவையானவை:
சன்னா (கொண்டைக்கடலை) – ஒரு கப், உருளைக்கிழங்கு – 4, வெங்காயம், தக்காளி – தலா ஒன்று, பச்சை மிளகாய் – 4, இஞ்சி – பூண்டு விழுது – ஒரு டீஸ்பூன், ஓமப்பொடி (ஸ்நாக்ஸ் வகை) – கால் கப், சாட் மசாலா பொடி, எண்ணெய் – சிறிதளவு, உப்பு – தேவையான அளவு, கொத்தமல்லி, ஸ்வீட் சட்னி, கிரீன் சட்னி – சிறிதளவு.

செய்முறை:
கொண்டைக்கடலையை முதல் நாள் இரவே ஊற வைத்து மறுநாள் வேகவிடவும். உருளைக்கிழங்கை வேக வைத்து, தோலுரித்து, உதிர்க்கவும்.

வாணலியில் எண்ணெய் விட்டு, பொடியாக நறுக்கிய வெங்காயம், தக்காளி, பச்சை மிளகாய், இஞ்சி – பூண்டு விழுது சேர்த்து வதக்கி… வேக வைத்த சன்னா, உதிர்த்த உருளைக்கிழங்கு, சாட் மசாலா பொடி, உப்பு, ஸ்வீட் சட்னி, கிரீன் சட்னி சேர்த்து இறக்கவும். கொத்தமல்லி, ஓமப்பொடியை மேலே தூவி அலங்கரித்து பரிமாறவும்.

★மிக்ஸ்டு சாட்

தேவையானவை:
அவல் – ஒரு கப், வேர்க்கடலை, பொட்டுக்கடலை, ஓட்ஸ் – தலா அரை கப், உருளைக்கிழங்கு – 2,  சாட் மசாலா பொடி – ஒரு டீஸ்பூன், எலுமிச்சம்பழம் – அரை மூடி, ஸ்வீட் சட்னி, கிரீன் சட்னி, உப்பு – தேவையான அளவு.

செய்முறை:
அவல், வேர்க்கடலை, பொட்டுக்கடலை, ஓட்ஸ் ஆகியவற்றை வெறும் வாணலியில் வறுக்கவும். உருளைக்கிழங்கை வேக வைத்து, தோலுரித்து, உதிர்க்கவும். இவை எல்லாவற்றையும் ஒன்றாக கலந்து, மேலே சாட் மசாலா பொடி, எலுமிச்சைச் சாறு, ஸ்வீட் சட்னி, க்ரீன் சட்னி, உப்பு  சேர்த்துப் பரிமாறவும்.

★நூடுல்ஸ் சாட்

தேவையானவை:
நூடுல்ஸ் – ஒரு கப், உருளைக்கிழங்கு – 2, சாட் மசாலா பொடி – ஒரு டீஸ்பூன், ஸ்வீட் சட்னி, கிரீன் சட்னி – தலா ஒரு டீஸ்பூன், ஓமப்பொடி (ஸ்நாக்ஸ் வகை) – கால் கப், கேரட் துருவல் – சிறிதளவு, கொத்தமல்லி – சிறிதளவு,  எண்ணெய், உப்பு – தேவையான அளவு.

செய்முறை:
நூடுல்ஸை எண்ணெயில் பொரிக்கவும். உருளைக்கிழங்கை வேக வைத்து, தோல் உரித்து, துண்டுகளாக்கவும். ஒரு தட்டில் உருளைக்கிழங்கு துண்டுகளை பரப்பி… அதன் மீது நூடுல்ஸ், சாட் மசாலா பொடி, ஸ்வீட் சட்னி, கிரீன் சட்னி, ஓமப்பொடி, கேரட் துருவல், உப்பு சேர்த்து, கொத்தமல்லி தூவி அலங்கரித்து பரிமாறவும்.

★பட்டாணி சாட்

தேவையானவை:
குட்டி பூரி கள் (கடைகளில் பாக்கெட் டாக கிடைக்கும்) – 10, காய்ந்த பட்டாணி – ஒரு கப், வெங்காயம் – ஒன்று (பொடியாக நறுக்கவும்),  சீரகம் – சிறிதளவு, பச்சை மிளகாய் – 4, கெட்டித் தயிர் – அரை கப், ஸ்வீட் சட்னி – ஒரு டீஸ்பூன், சாட் மசாலா பொடி – ஒரு டீஸ்பூன், ஓமப்பொடி (ஸ்நாக் வகை) – கால் கப், கொத்தமல்லி – சிறிதளவு,  எண்ணெய் – ஒரு டீஸ்பூன், உப்பு – தேவையான அளவு

செய்முறை:
பட்டாணியை முதல் நாள் இரவு ஊற வைத்து, மறுநாள் வேக வைக்கவும். வெங்காயத்தை பொடியாக நறுக்கவும். கடாயில் எண்ணெய் விட்டு சீரகம் தாளித்து, பச்சை மிளகாயை இரண்டாக கீறி போட்டு வதக்கி, வெந்த பட்டாணி சேர்த்துக் கிளறி இறக்கி வைக்கவும். ஒரு தட்டில் பட்டாணி கலவையை சேர்த்து… பொடித்த பூரி துண்டுகள், கெட்டித் தயிர், ஸ்வீட் சட்னி, சாட் மசாலா பொடி, ஓமப்பொடி, நறுக்கிய வெங்காயம், கொத்தமல்லி, உப்பு சேர்த்துப் பரிமாறவும்.

★தஹி பூரி

தேவையானவை:
குட்டி பூரிகள் – 10 (கடைகளில் பாக்கெட்டாக கிடைக்கும்), தயிர் – ஒரு கப், உப்பு, சர்க்கரை, சாட் மசாலா பொடி – தேவையான அளவு, உருளைக்கிழங்கு – 2, காய்ந்த பட்டாணி – கால் கப், ஸ்வீட் சட்னி – 10 டீஸ்பூன், ஓமப்பொடி (ஸ்நாக்ஸ் வகை) – தேவையான அளவு.

செய்முறை:
பட்டாணியை முதல் நாள் இரவு ஊற வைத்து, மறுநாள் வேக வைக்கவும். குட்டி பூரிகளை வரிசையாக தட்டில் அடுக்கவும். தயிருடன் உப்பு, சர்க்கரை, சாட் மசாலா பொடி சேர்த்துக் கலக்கவும். உருளைக்கிழங்கை வேக வைத்து தோலுரித்து உதிர்க்கவும். பூரியின் மேல் பகுதியில் ஓட்டை போட்டு தயிர் கலவை, சிறிதளவு உருளைக்கிழங்கு, பட்டாணி, ஸ்வீட் சட்னி விட்டு பூரியை நிரப்பி, மேலே ஓமப்பொடியை தூவி பரிமாறவும்.

★பப்பட் சாட்

தேவையானவை:
பப்படம் – ஒரு கட்டு, உருளைக்கிழங்கு – 4, கெட்டித் தயிர் – ஒரு கப், சாட் மசாலா பொடி – ஒரு டீஸ்பூன்,  ஸ்வீட் சட்னி, கிரீன் சட்னி – தலா ஒரு டீஸ்பூன், கேரட் துருவல், கொத்தமல்லி  – சிறிதளவு, எண்ணெய், உப்பு – தேவையான அளவு.

செய்முறை:
பப்படங்களை எண்ணெயில் பொரிக்கவும். உருளைக்கிழங்கை வேக வைத்து, தோல் உரித்து துண்டு களாக்கவும். தயிரை கெட்டியாக கடையவும்.

பப்படங்களை நொறுக்கி ஒரு தட்டில் பரப்பவும். அதன் மீது உருளை துண்டுகள், கடைந்த தயிர், சாட் மசாலா பொடி, ஸ்வீட் சட்னி, கிரீன் சட்னி, கேரட் துருவல், உப்பு சேர்த்து… கொத்தமல்லி தூவி பரிமாறவும்.

★பானி பூரி

தேவையானவை:
ரவை – ஒரு கப், மைதா – முக்கால் கப், வறுத்து, பொடித்து, சலித்த உளுந்து மாவு – 2 டீஸ்பூன், சோடா உப்பு – ஒரு சிட்டிகை,  ஸ்வீட் சட்னி, கிரீன் சட்னி – சிறிதளவு, உருளைக்கிழங்கு – 2 (வேக வைக்கவும்), எண்ணெய், உப்பு – தேவையான அளவு.

செய்முறை:
ரவை, மைதா, உளுந்து மாவு, உப்பு, சோடா உப்பு ஆகியவற்றை கலந்து பிசைந்து, ஒரு மணி நேரம் ஊற வைத்து, சிறு சிறு பூரிகளாக இட்டு எண்ணெயில் பொரிக்கவும். இந்த பூரிகளை ஒரு தட்டில் பரப்பி பூரிகளின் மேல் பகுதியில் ஓட்டை போட்டு, அதனுள் வேக வைத்த உருளைக்கிழங்கு துண்டுகள், ஸ்வீட் சட்னி, கிரீன் சட்னி சேர்த்துப் பரிமாறவும்.

குறிப்பு:
கடைகளில் பாக்கெட்டாக கிடைக்கும் குட்டி பூரிகளைப் பயன்படுத்தியும் இதை தயாரிக்கலாம். சட்னி வகைகளை நீர்க்க கரைத்து சேர்க்கவும்.

★மசாலா சாட்

தேவையானவை:
பிரெட் துண்டுகள் – 4, உருளைக்கிழங்கு – 2,  மிளகு, சீரகம் – தலா ஒரு டீஸ்பூன் (பொடிக்கவும்), ஓமப்பொடி (ஸ்நாக்ஸ் வகை) – கால் கப், கரம் மசாலா பொடி – அரை டீஸ்பூன், சாட் மசாலா பொடி – ஒரு டீஸ்பூன், கொத்தமல்லி – சிறிதளவு, எண்ணெய், உப்பு – தேவையான அளவு.

செய்முறை:
உருளைக்கிழங்கை வேக வைத்து சிறிய துண்டுகளாக்கவும். பிரெட் டின் ஓரங்களை வெட்டி எடுத்து விட்டு சிறிய துண்டுகளாக்கி எண்ணெயில் பொரிக்கவும்.

ஒரு தட்டில் பொரித்த பிரெட் துண்டுகள், உருளைக்கிழங்கு, மிளகு – சீரகப் பொடி, ஓமப்பொடி, கரம் மசாலா பொடி, சாட் மசாலா பொடி, உப்பு, கொத்தமல்லி சேர்த்துக் கலந்து பரிமாறவும்.

★டிரை ஃப்ரூட் சாட்

தேவையானவை:
அவல், வேர்க்கடலை, பொட்டுகடலை – தலா கால் கப், பாதாம், முந்திரி, பிஸ்தா – தலா 10, சாட் மசாலா பொடி – ஒரு டீஸ்பூன்,  பேரீச்சம்பழம், உலர்திராட்சை – தலா 10, உப்பு – ஒரு சிட்டிகை.

செய்முறை:
ஒரு பாத்திரத்தில் பொரித்த அவல், வறுத்த பொட்டுக்கடலை, வறுத்த வேர்க்கடலை, துருவிய பாதாம், முந்திரி, பிஸ்தா, சாட் மசாலா பொடி, கொட்டை நீக்கி துண்டுகளாக நறுக்கிய பேரீச்சம்பழம், உலர் திராட்சை, உப்பு ஆகியவற்றை சேர்த்து ஒன்றாகக் கலந்து பரிமாறவும்.

பள்ளி செல்லும் குழந்தைகளுக்கு கொடுத்து அனுப்பவதற்கு ஏற்ற ஸ்நாக்ஸ் அயிட்டம் இந்த சாட்!

★ஆலு மசாலா சாட்

தேவையானவை:
உருளைக்கிழங்கு – 2, எண்ணெய் – சிறிதளவு, வறுத்த சீரகம் – அரை டீஸ்பூன், எலுமிச்சம்பழம் – அரை மூடி, பச்சை மிளகாய் – 2, உப்பு – தேவையான அளவு, கொத்தமல்லி – சிறிதளவு.

செய்முறை:
உருளைக்கிழங்கை வேக வைத்து, தோல் உரித்து, சிறுசிறு துண்டுகளாக்கவும். இதனுடன் சிறிதளவு எண்ணெய், சீரகம், பொடியாக நறுக்கிய பச்சை மிளகாய், எலுமிச்சைச் சாறு, கொத்தமல்லி, உப்பு சேர்த்துப் பிசிறி, ‘மைக்ரோவேவ் அவன்’-ல் ஒரு நிமிடம் வைத்து எடுத்து, சூடாக பரிமாறவும்.

★முளைப்பயறு சாட்

தேவையானவை:
முளைகட்டிய பச்சைப் பயறு  – ஒரு கப், வெங்காயம், தக்காளி – தலா ஒன்று, எலுமிச்சைச் சாறு – ஒரு டீஸ்பூன், சாட் மசாலா பொடி – 2 டீஸ்பூன், கொத்தமல்லி, உப்பு – தேவையான அளவு.

செய்முறை:
முளைகட்டிய பச்சைப் பயறை வேகவிடவும். இதனுடன் பொடியாக நறுக்கிய வெங் காயம், தக்காளி, எலுமிச்சைச் சாறு, சாட் மசாலா பொடி, உப்பு கலந்து வைக்கவும். பரிமாறும்போது கொத்தமல்லி தூவி அலங்கரித்து பரிமாறவும்.

★பிரெட் சாட்

தேவையானவை:
பிரெட் ஸ்லைஸ்கள் – 4,  உருளைக்கிழங்கு – ஒன்று, ஸ்வீட் சட்னி, கிரீன் சட்னி, சாட் மசாலா பொடி, எலுமிச்சைச் சாறு – தலா ஒரு டீஸ்பூன், கொத்தமல்லி, எண்ணெய், உப்பு – தேவையான அளவு.

செய்முறை:
பிரெட்டின் ஓரங்களை நீக்கிவிட்டு, துண்டுகளாக்கி, எண்ணெயில் பொரிக்கவும். உருளைக்கிழங்கை வேக வைத்து, தோல் உரித்து, துண்டுகளாக்கவும்.

பொரித்த பிரெட், உருளைக்கிழங்கு துண்டுகள், ஸ்வீட் சட்னி, கிரீன் சட்னி, சாட் மசாலா பொடி, எலுமிச்சைச் சாறு, கொத்தமல்லி, உப்பு சேர்த்துக் கலந்து பரிமாறவும்.

★பிஸ்கட் சாட்

தேவையானவை:
உருளைக்கிழங்கு – 2, ஏதாவது ஒரு பிஸ்கட் – ஒரு பாக்கெட், கிரீன் சட்னி, ஸ்வீட் சட்னி, சாட் மசாலா பொடி – தலா ஒரு டீஸ்பூன்,  பொடியாக நறுக்கிய வெங்காயம் – தேவையான அளவு, கேரட் துருவல் – சிறிதளவு, ஓமப்பொடி – (ஸ்நாக் வகை) – கால் கப், உப்பு, எலுமிச்சைச் சாறு – தேவையான அளவு.

செய்முறை:
உருளைக்கிழங்கை வேக வைத்து தோல் உரித்து துண்டுகளாக்கி வைக்கவும். ஒரு தட்டில் உருளைக்கிழங்கு துண்டுகள், ஒன்றிரண்டாக பொடித்த பிஸ்கட் துண்டுகள், கிரீன் சட்னி, ஸ்வீட் சட்னி, சாட் மசாலா பொடி, நறுக்கிய வெங்காயம், கேரட் துருவல், ஓமப் பொடி, உப்பு, எலுமிச்சைச் சாறு சேர்த்துக் கலந்து பரிமாறவும்.

★பூந்தி சாட்

தேவையானவை:
உருளைக்கிழங்கு – 4, காராபூந்தி – ஒரு கப், ஓமப்பொடி (ஸ்நாக்ஸ் வகை) – அரை கப், சாட் மசாலா பொடி, எலுமிச்சைச் சாறு – ஒரு டீஸ்பூன்,  ஸ்வீட் சட்னி, கொத்தமல்லி – சிறிதளவு, உப்பு – தேவையான அளவு.

செய்முறை:
உருளைக்கிழங்கை வேக வைத்து தோல் உரித்து துண்டுகளாக்கவும். இதனுடன் காராபூந்தி, ஓமப்பொடி, சாட் மசாலா பொடி, எலுமிச்சைச் சாறு, ஸ்வீட் சட்னி, கொத்தமல்லி, உப்பு கலந்து பரிமாறவும்.

★வேர்க்கடலை சாட்

தேவையானவை:
வேர்க்கடலை – ஒரு கப், தக்காளி, வெங்காயம், உருளைக்கிழங்கு – தலா ஒன்று, பச்சை மிளகாய் – 4, கிரீன் சட்னி, சாட் மசாலா – தலா ஒரு டீஸ்பூன், உப்பு – தேவையான அளவு.

செய்முறை:
வெங்காயம், தக்காளி, பச்சை மிளகாயை பொடியாக நறுக்கவும். இதனுடன் முக்கால் வேக்காடு வெந்த வேர்க்கடலை, வேக வைத்து பொடியாக நறுக்கிய உருளைக்கிழங்கு, கிரீன் சட்னி, சாட் மசாலா, உப்பு கலந்து பரிமாறவும்.

★பனீர் சாட்

தேவையானவை:
பனீர் – ஒரு கப், உருளைக்கிழங்கு – ஒன்று,  சாட் மசாலா பொடி, ஸ்வீட் சட்னி – தலா ஒரு டீஸ்பூன், கொத்தமல்லி – சிறிதளவு, எண்ணெய், உப்பு – தேவையான அளவு.

செய்முறை:
பனீரை துண்டுகளாக்கி பொரிக்கவும். உருளைக்கிழங்கை வேக வைத்து தோலுரித்து துண்டு களாக்கவும். பனீர், உருளைக்கிழங்கு துண்டுகளுடன்… சாட் மசாலா பொடி, ஸ்வீட் சட்னி, கொத்தமல்லி, உப்பு கலந்து பரிமாறவும்.

★ஃப்ரூட் சாட்

தேவையானவை:
வாழைப்பழம், மாதுளம்பழம், ஆப்பிள், கொய்யாப்பழம் – தலா ஒன்று, எலுமிச்சம்பழம் – அரை மூடி, சாட் மசாலா பொடி – ஒரு டீஸ்பூன், உப்பு, மிளகுப்பொடி – தேவையான அளவு.

செய்முறை:
மாதுளையை உதிர்க்கவும், வாழைப்பழம், ஆப்பிள், கொய்யா… இவற்றை தோல் நீக்கி சிறுசிறு துண்டுகளாக்கவும். ஒரு பாத்திரத்தில் பழ வகைகளுடன் எலுமிச்சைச் சாறு, சாட் மசாலா பொடி, உப்பு, மிளகுப்பொடி சேர்த்துக் கலந்து, குளிர வைத்து பரிமாறவும்.

★பாசிப்பருப்பு சாட்

தேவையானவை:
பாசிப்பருப்பு – ஒரு கப், வெங்காயம் – ஒன்று, பச்சை மிளகாய் – 2, சாட் மசாலா பொடி – ஒரு டீஸ்பூன், எலுமிச்சம்பழம் – அரை மூடி, உப்பு, கொத்தமல்லி – தேவையான அளவு.

செய்முறை:
பாசிப்பருப்பை 4 மணி நேரம் ஊற வைத்து, நீரை வடிய வைத்து, ஒரு தட்டில் பரப்பி ‘மைக்ரோவேவ் அவன்’-ல் 3 நிமிடம் வைத்து பொரித்து எடுக்கவும். வெங்காயம், பச்சை மிளகாயை, பொடியாக நறுக்கவும். பொரித்த பாசிப்பருப்புடன் வெங்காயம், பச்சை மிளகாய், சாட் மசாலா பொடி, எலுமிச்சைச் சாறு, உப்பு சேர்த்து, கொத்தமல்லி தூவி கலந்து பரிமாறவும்.

★ஜவ்வரிசி சாட்

தேவையானவை:
ஜவ்வரிசி – ஒரு கப், வேக வைத்த உருளைக்கிழங்கு – 2, சாட் மசாலா பொடி – ஒரு டீஸ்பூன், கேரட் துருவல் – சிறிதளவு, எலுமிச்சம்பழம் – அரை மூடி, கொத்தமல்லி – சிறிதளவு, எண்ணெய், உப்பு – தேவையான அளவு.

செய்முறை:
எண்ணெயை காய வைத்து, ஜவ்வரிசியை பொரித்து எடுக்கவும். இதனுடன் வேக வைத்து, துண்டுகளாக்கிய உருளைக்கிழங்கு, சாட் மசாலா பொடி, கேரட் துருவல், உப்பு, எலுமிச்சைச் சாறு சேர்த்து, கொத்தமல்லியால் அலங்கரித்து பரிமாறவும்.

★பச்சடி சாட்

தேவையானவை:
தயிர் – ஒரு கப், காராபூந்தி – அரை கப், சாட் மசாலா பொடி – ஒரு டீஸ்பூன், உப்பு – தேவையான அளவு, கொத்தமல்லி – சிறிதளவு.

செய்முறை:
தயிரை கெட்டியாக கடையவும். இதனுடன் காராபூந்தி, சாட் மசாலா பொடி, உப்பு, கொத்தமல்லி சேர்த்துப் பரிமாறவும்.

‘சட்’டென செய்யக்கூடிய இந்த சாட், ருசியில் அசத்தும்!

No comments:

Post a Comment