Sunday, May 20, 2018

BadFoodCombination

தேனையும் நெய்யையும் கலந்து சாப்பிடலாமா? - உணவை நஞ்சாக்கும் சேர்மானங்கள்... கவனம்! #BadFoodCombination

இன்று உடல்நலத்தில் அக்கறையோடு பார்த்துப் பார்த்து காய்கறிகளைத் தேர்ந்தெடுத்து, அளவு பார்த்துச் சாப்பிடுகிறவர்கள் இருக்கிறார்கள். அப்படிப்பட்டவர்களில் பெரும்பான்மையானவர்களேகூட ஒரு முக்கியமான விஷயத்தில் கோட்டைவிட்டுவிடுவார்கள். அது, எந்த உணவோடு எதைச் சேர்த்து சாப்பிடக் கூடாது; எந்த உணவை எப்போது சாப்பிட வேண்டும் என்பதுதான். ‘சில உணவுகளோடு சிலவற்றைச் சேர்த்துச் சாப்பிடக் கூடாது. அதனால், உணவிலிருந்து கிடைக்கும் சத்துகள் கிடைக்காமல் போகும். சில நேரங்களில் அந்த உணவு செரிமானமாவது பாதிக்கப்பட்டு, ஆபத்தான விளைவுகளையும் ஏற்படுத்திவிடும்’ என்று எச்சரிக்கிறார்கள் மருத்துவர்கள்.

“உணவு விதிகளைக் கடைப்பிடித்து, விலக்க வேண்டியவற்றை விலக்கினாலே சர்க்கரைநோய் உள்ளிட்ட பல நோய்களிலிருந்து விடுபடலாம்; நோயற்ற வாழ்வும் வாழலாம்’’ என்கிறார் சித்த மருத்துவர் முத்துலட்சுமி. அத்துடன், எதோடு எதைச் சாப்பிடக் கூடாது; எப்படிச் சாப்பிட வேண்டும்; எதிர் விளைவுகள் அனைத்தையும் குறித்து விரிவாகப் பேசுகிறார் இங்கே...

“பசிக்கும்போது, எப்போது உணவு கிடைக்குமென்று நம் வயிற்றில் உள்ள அமிலங்கள் உணவை எதிர்பார்த்துக் காத்திருக்கும். பசிக்கும்போது சாப்பிட்டால், உடல் செரிமானத்துக்கான வேலைகளை முடுக்கிவிடும். அப்போது சாப்பிட்டால் அது முறையாக செரிமனமாகி சத்துகளைப் பிரித்து உடலுக்குத் தரும். உங்களுக்கு நேரம் கிடைக்கும்போது சிக்கன், மட்டன், மீன் வறுவல் என உங்கள் விருப்பத்துக்கு உள்ளே

தள்ளினாலும், அது கிணற்றில் போட்ட கல்லாக வயிற்றுக்குள்ளேயே கிடக்கும். செரிமானமாகாது. எனவே, பசித்த பின் சாப்பிடுவதுதான் நல்லது. `நேரம் தவறாமல் உணவு சாப்பிடுவதைவிட, பசியெடுக்கும் நேரத்தில் சாப்பிடுவதும், தாகம் எடுக்கும்போது தண்ணீர் குடிப்பதும்தான் சரியான நடைமுறை’ என்கிறது சித்த மருத்துவம். அதேபோல, சில உணவுகளோடு சிலவற்றைச் சேர்த்துச் சாப்பிட்டால், அது சில நோய்களை உண்டாக்கிவிடும் என்றும், உணவு நஞ்சாகி நோயைத் தருவதுடன் உடல்நலனைப் பாதித்து மரணத்தைக்கூட ஏற்படுத்தும் என்றும் சித்த மருத்துவத்தில் கூறப்பட்டுள்ளது.

எதோடு எதைச் சேர்த்து சாப்பிடக் கூடாது?

* தயிருடன் கீரையை சேர்த்து சாப்பிடக் கூடாது. இரண்டுமே செரிமானமாக அதிக நேரம் எடுத்துக்கொள்ளும். தூங்கச் செல்வதற்கு முன்னரும் கீரை, தயிரை உணவோடு சேர்த்துக்கொள்ளக் கூடாது. அதேபோல கீரையை அதிக நேரம் வேகவைக்கக் கூடாது. சமைத்த மூன்று மணி நேரத்துக்குள் சாப்பிட்டுவிட வேண்டும். இல்லையென்றால், அதிலுள்ள சத்துகள் வீணாகி விடும்; செரிமானமும் கடினமாகும்.

* வெண்கலப் பாத்திரத்தை நெய் வைக்கப் பயன்படுத்தக் கூடாது. நெய்யை உருக்காமல் சாப்பிடக் கூடாது. சாப்பிடுவதற்கு முன்னர் சூடுபடுத்தி, எண்ணெய் மாதிரியாக்கித்தான் பயன்படுத்த வேண்டும் அல்லது சூடான உணவில் சேர்த்துச் சாப்பிட வேண்டும். அப்படிச் சாப்பிடும்போது நெய்யும் எளிதில் செரிமானமாகும், உணவு எளிதாக செரிமானமாகவும் உதவும்.

* தேனையும் நெய்யையும் ஒன்றாகக் கலந்து சாப்பிடக் கூடாது. தேனை சூடான உணவுடன் சேர்த்தோ, சூடு செய்தோ சாப்பிடக் கூடாது. அப்படிச் சாப்பிட்டால் அதிலுள்ள சத்துகள் கிடைக்காது.

* பழங்களைத் தனியாகத்தான் சாப்பிட வேண்டும். உணவோடு சேர்த்துச் சாப்பிடக் கூடாது. வாழைப்பழம் சாப்பிடும்போது தயிர், மோர் சேர்த்துக் கொள்ளக் கூடாது. உணவுக்குப் பின்னர் வாழைப்பழம் சாப்பிடலாம். வெறும் வயிற்றிலோ, பசியாக இருக்கும்போதோ வாழைப்பழம் சாப்பிடக் கூடாது.

* மீன், கருவாடு சாப்பிடும்போது தயிர், மோர் சேர்த்துச் சாப்பிடக் கூடாது. மீனுடன் பால் சேர்த்து உட்கொண்டால் வெண்புள்ளிகள் வரும் வாய்ப்புகள் உண்டு. எனவே இரண்டையும் சேர்த்து சாப்பிடக் கூடாது.

* கரும்பு தின்றவுடன் தண்ணீர் குடிக்கக் கூடாது. அதேபோல, ஸ்வீட் சாப்பிட்டவுடனும் தண்ணீர் குடிக்கக் கூடாது. வாய் கொப்பளிக்கலாம் அல்லது வெந்நீர் குடிக்கலாம். ஏனென்றால், இனிப்பு குளிர்ச்சியான உணவு; இதனுடன் குளிர்ச்சியான தண்ணீர் சேரும்போது ஜலதோஷம் ஏற்பட வாய்ப்புள்ளது.

* கோதுமையை நல்லெண்ணெயுடன் சேர்த்து சமைத்துச் சாப்பிடக் கூடாது.

* பசலைக்கீரையுடன் எள் சேர்த்து சமைத்துச் சாப்பிடக் கூடாது.

* வெற்றிலை போடும்போது, எண்ணெய் சேர்த்துக்கொள்ளக் கூடாது.

* வெற்றிலை போடும்போது, எண்ணெய் சேர்த்துக்கொள்ளக் கூடாது.

* சாப்பிட்டவுடன் குளிக்கக் கூடாது. மேலும், உடற்பயிற்சி செய்தல், நீந்துதல், சைக்கிள் ஓட்டுதல் போன்ற உடலுழைப்பு உள்ள வேலையை சாப்பிட்ட பின்னர் சுமார் ஒரு மணி நேரம் வரை செய்யக் கூடாது. இது சாப்பிட்ட உணவின் செரிமானத்தைப் பாதிக்கும்.

மேலும், உளுத்தம் பருப்பு, முள்ளங்கி, பால், தேன், துவரம் பருப்பு, முளைகட்டிய பருப்பு வகைகள் ஆகியவற்றில் ஏதேனும் ஒன்றையோ, பலவற்றையோ இறைச்சியுடன் சேர்த்து சமைத்தாலும், சேர்த்து உண்டாலும் உணவு நஞ்சாகும். அதேபோல, உளுந்தும் முள்ளங்கியும் சேர்ந்தாலும் உணவு நஞ்சாகும்" என்கிறார் சித்த மருத்துவர் முத்துலட்சுமி.

� Copyright vikatan.com 2016. All rights reserved

https://bit.ly/2GtoNWx

Friday, May 18, 2018

சிகரெட்தான்

Writer Balakumaran's statement:

இந்த சிகரெட்தான் என்னை குனிய வைத்து சுருள வைத்து இடையறாது இரும வைத்து மூச்சு திணற வைத்து மரணத் தறுவாயில் இருக்கும் பிராணியை போல மாற்றும் என்று அப்போது தெரியவில்லை.

சிகரெட்டில் நிகோடின் என்ற நஞ்சு இருக்கிறது.. அந்த நஞ்சு நரம்புகளில் பாய்ந்து நரம்பு மண்டலத்தை சேதப்படுத்தும் என்று பத்திரிகை வாயிலாக தெரிந்தபோது, எனக்கெல்லாம் அது நடக்காது என்று முட்டாள்தனமாக நினைத்துக் கொண்டேன்.

நாலைந்து சிகரெட்டில் நரம்பு மண்டலம் என்ன ஆகிவிடும் என்ற அலட்சியமும் இருந்தது. நாலைந்து சிகரெட் மெல்ல மெல்ல பெருகி ஒரு பாக்கெட் என்றாகி பத்து இருபது என்றாகி ஒரு நாளைக்கு நூற்றியிருபது சிகரெட்டுகளாக மாறிவிட்டால் வேறென்ன நடக்கும்?

நிகோடின் என்பது வெறும் புகையல்ல. அதுவொரு போதையான ரசாயனம். அது என்ன செய்யும்?

கன்னக் கதுப்புகளில், உதடுகளில், ஈறுகளில் அந்த ரசாயனம் தாக்கும்போது ஒரு விறுவிறுப்பு ஏற்படுகிறது. ஒரு குணமாற்றம் ஏற்படுகிறது. சிகரெட் புகையை இழுத்து நுரையீரலில் தேக்கும்போது அங்கிருந்து உடம்பிலுள்ள எல்லா ரத்த அணுக்களுக்கும் பரவி எல்லா இடங்களிலும் ஒரு அமைதி படர்கிறது. கண் கிறக்கமான ஒரு நிலைமை ஏற்படுகிறது.

இது எனக்கு மிகவும் பிடித்திருந்தது.

உதவியும் செய்தது. என்ன உதவி?

சுற்றுப்புறம் எவ்வளவு மோசமாக இருந்தாலும் எத்தனை இரைச்சல் இருந்தாலும் உள்ளடங்கி ஆழ்மனதில் அமிழ்ந்து சிந்திக்க சிகரெட் உதவி செய்வதாக நினைத்துக் கொண்டேன். அப்படி சிந்திப்பதால்தான் கதை எழுதுகிறேன் என்று நினைத்துக் கொண்டேன்.

காலை, மாலை, இரவு என்று எல்லா நேரங்களிலும் சிகரெட் வேண்டியிருந்தது. சிகரெட் பிடிப்பதற்காகவே பலமணி நேரம் கூட்டங்களில் உட்காருவதை தவிர்த்தேன். அரை மணிக்குமேல் யாரோடும் அமர்ந்து அமைதியாக பேச முடியவில்லை.

வெகு விரைவாக சாப்பிட்டு விடுவேன். குழம்பு சாதம் நாலு கவளம், தயிர் சாதம் நாலு கவளம் மடமடவென்று சாப்பிட்டுவிட்டு வயிறு நிறைந்ததும் வெளியே யோய் ஒரு சிகரெட் பற்ற வைத்து புகை இழுத்தால்தான் சாப்பிடதன் நிறைவு பூர்த்தியாகும்.

இது மிகமிக கேவலமான நிலைமை. ஆரோக்ய குறைவான சிந்தனை. உடம்பிலுள்ள நரம்பு மண்டலத்தை அறுத்தெறிகின்ற மிகப்பெரிய காரியம்.

பத்தொன்பது வயதில் தொடங்கிய சிகரெட் பழக்கம் மெல்ல மெல்ல வளர்ந்து நாற்பத்தைந்தாவது வயதில் உச்சகட்டத்தை அடைந்தது. இழுத்து இழுத்து புகையை உள்வாங்கியதால் புகை நுரையீரலுக்கு மட்டுமல்லாது இரைப்பைக்கும் போயிற்று. இரைப்பையில் புகை தங்கி மேல் வயிறு பெரிதானது. மேல் வயிறு பெரிதாக இருந்ததால் நடக்கும்போது மூச்சு வாங்கியது. மாடிப்படி ஏறும்போது சிரமமாக இருந்தது.

எது பற்றியும் கவலைப்படாமல் இடையறாமல் சிகரெட் பிடித்தபடி இருந்தேன். என் வீட்டிலுள்ளவர்கள் ‘இவனை மாற்ற முடியாது’ என்று கைகழுவி என் போக்கிலேயே விட்டார்கள். �நிச்சயம் ஒருநாள் நீங்களாக விட்டுவிடுவீர்கள்� என்றும் சொன்னார்கள்.

அது நேர்ந்தது.

திருமணத்திற்காக ஒரு மகள் இருக்கிறாள். வளர்ந்து படிக்க வேண்டிய ஒரு மகன் இருக்கிறான். இருந்தும் கவலையின்றி இத்தனை செலவு செய்கிறோமே, உடம்பு பாழாகிறதே என்று கவலைப்பட்டு என் குருநாதரை மனமுருக வேண்டி இந்த சிகரெட்தான் கடைசி� என்று சொல்லி ஒரு பாக்கெட் சிகரெட் முழுவதும் வீட்டு வாசலில் நின்றே அமைதியாக பிடித்து முடித்த பிறகு அந்த பெட்டியை கசக்கி குப்பைத் தொட்டியில் எறிந்தேன்.

மறுநாளிலிருந்து சிகரெட் பிடிக்கவில்லை.

முதல் ஒரு மணி நேரம் தவிப்பாக இருந்தது. பல் கடித்து பொறுத்துக் கொண்டேன். இன்னும் அரை மணி… இன்னும் அரைமணி… என்று தள்ளிப் போட்டேன். அரை நாள் சிகரெட் பிடிக்காமல் இருந்தது ஆரோக்யமாக தெரிந்தது.

அன்று முழுவதும் பிடிக்காமல் இருந்தால் என்ன என்று நினைத்தேன். இருந்தேன். நெஞ்சு விசாலமானது. அதற்கு பிறகு இரண்டு நாட்கள், மூன்று நாட்கள் சிகரெட் பிடிக்கவில்லை.

நான்காவது நாள் சிகரெட் தேவைப்படவில்லை.

நடுவே ஒரு சிகரெட் பிடித்திருந்தாலும் கால் இடறி மறுபடியும் புகைக்குழியில் விழுந்திருப்பேன். முற்றிலும் மாறுபட்ட மனிதனாக & நன்கு சுவாசிக்கிறவனாக & மற்றவர்கள் சிகரெட் பிடித்தால் மூக்கை பொத்திக் கொள்பவனாக மாறினேன்.

ஆனால் என்ன, செய்த பாவங்கள் விடுமா?

சிகரெட்டை விட்ட இரண்டு வருடங்களுக்கு பிறகு இதயத்தை பலமாக தாக்கியது. அடைப்புகள் ஏற்பட்டன. இரண்டாயிரத்தில் பைபாஸ் ஆபரேஷன் செய்து கொண்டேன்.

அப்போதும் சிகரெட் பிடிப்பவனாக இருந்தால் மரணம் அன்றே குறிக்கப்பட்டிருக்கும். சிகரெட்டை நிறுத்தி ஆரோக்யத்தை அதிகப்படுத்தியதால் அந்த ஆபரேஷனை சமாளிக்க முடிந்தது.

பிறகு பத்து வருடங்கள் எந்தவித இம்சையும் இல்லாமல் அழகாக வாழ்க்கை ஓடியது.

இரண்டாயிரத்து பதினொன்றில் நீரிழிவு காரணமாக ரத்தக்கொதிப்பின் காரணமாக மறுபடியும் அடைப்பு ஏற்பட, இரண்டாம் முறை பைபாஸ் செய்து கொண்டேன்.

சுவாச பயிற்சி செய்திருந்ததால், மூச்சு பற்றிய ஞானம் இருந்ததால், தினந்தோறும் காலையும் மாலையும் வேகமாக நடந்ததால், மெல்லிய உடற்பயிற்சிகள் செய்ததால் இரண்டாவது பைபாஸையும் தாண்டிவர முடிந்தது.

ஆனால், இரண்டாயிரத்து பன்னிரெண்டில் அடுத்த சோதனை. பத்தொன்பது வயதில் பிடித்த சிகரெட்டுகள் அறுபத்தாறு வயதில் தன் விஷத்தன்மையை காட்டியது. தன் வக்கிரத்தை நிரூபித்தது.

நுரையீரலின் அடிப்பக்கம் முழுவதும் நிகோடினால் ஏற்பட்ட சளி அடைப்புகள். நுரையீரல் முழு திறனோடு வேலை செய்யவில்லை. அதற்கான திறனை மெல்ல மெல்ல இழந்தது. அதோடு சளி அடைப்பும் சேர்ந்து பழிவாங்கியது. மூச்சுத் திணறல் ஏற்பட்டது.

ஒருபிடி சாதத்திற்கு அவஸ்தை படும் நிலைமை. முகம் முழுவதும் மூடி ஆக்சிஜனை வேகமாக செலுத்தினால்தான் உயிரோடு இருப்பேன் என்கிற நிலைமை. என்.ஐ.வி என்கிற அந்த விஷயத்தோடுதான் இரவு தூங்க முடியும் என்ற நிலைமை. பிராங்கோஸ்கோபி என்று மூச்சுக்குழலுக்குள் கருவியை விட்டு சோதனை செய்து அங்கே அடி நுரையீரலில் அடர்த்தியாக அசைக்க முடியாதபடிக்கு கெட்டியாக சளி இருப்பதை தெரிந்துகொண்டார்கள்.

இதை எப்படி சரி செய்வது?

வலியை பொறுத்துக் கொள்ளலாம். வேறு ஏதேனும் பத்தியமாக இருந்தால் அவ்விதமே நடந்து கொள்ளலாம். மூச்சு இழுத்து பிராணவாயு உள்ளே போய் வெளியே வருவதே கடினமானால் எப்படி சமாளிப்பது? தினசரி மரண போராட்டமாக மாறிவிட்டது.

மூச்சு வேகமாக இழுத்து இழுத்து இன்னும் சில நிமிடங்களில் பாலகுமாரன் செத்து விடுவான் என்ற எண்ணத்தை மற்றவருக்கு ஏற்படுத்தியது.

வீடு தவித்தது. வீட்டிற்குள் மூன்று நான்கு ஆக்சிஜன் சிலிண்டர்கள் வைக்கும்படி நேரிட்டது. வேகமாக காற்றை செலுத்தக்கூடிய கருவி தனியாக இருந்தது. ஆஸ்பத்திரியிலிருந்து வீடு வந்தவுடன் வீடு ஆஸ்பத்திரியாக மாறியது. எப்பொழுதும் மூக்கில் ஆக்சிஜன் இருக்கும்படி ஒரு அவஸ்தை.

ஸ்கூட்டர் எடுத்துக்கொண்டு மயிலாப்பூர் முழுவதும் சுற்றித் திரிந்தவனுக்கு சிறைத் தண்டனை போல வீட்டில் அதே அறையில் இருக்கும்படி நேரிட்டது. மிகப்பெரிய வலியில்லை. ஜூரம் இல்லை. ஆனால், ஆக்சிஜன் குழாயை எடுத்துவிட்டால் மூச்சுத்திணற ஆரம்பிக்கும். அது இல்லாமல் நடக்க முடியாது, பேச முடியாது, உண்ண முடியாது, எதுவும் செய்ய முடியாது. காலில் சங்கிலி கட்டி கையில் இரும்பு குண்டை கொடுத்ததுபோன்ற மிகப்பெரிய தண்டனை. வேறு எந்த வழியும் இல்லாமல் அமைதியாக உட்கார்ந்து கொண்டேன்.

ஒருநாளைக்கு நூற்றியிருபது சிகரெட் பிடிக்க வேண்டும் என்கிற நிலையில் இருந்ததை நினைத்து சிரித்துக்கொண்டேன். அப்படி புகைத்தால்தான் கதை எழுத வரும் என்று முட்டாள்தனமாக நம்பியதை நொந்து கொண்டேன்.

மரணம் எல்லோருக்கும் வரும். எப்பொழுது வேண்டுமானாலும் வரும். எந்த ரூபத்தில் வேண்டுமானாலும் வரும். ஆனால், மூச்சு திணறி இதோ… இதோ… என்று பயம் காட்டுகின்ற ஒரு நிலைமை யாருக்கும் வரக்கூடாது.

�நெஞ்சு வலித்தது. ஐந்து நிமிடம் துடித்தார். உயிர் நீங்கியது என்பது பரவாயில்லை.

மூச்சு விட முடியாமல் உள்ளுக்குள் போன மூச்சை வெளியே செலுத்த முடியாமல், வெளியே இருக்கின்ற பிராண வாயுவை உள்ளே இழுக்க முடியாமல் திணறி கதறுகின்ற வேதனை யாருக்கும் வரக்கூடாது. சிகரெட் பிடிக்கலாம் என்கிற ஆசையுள்ளவர்கள் தயவு செய்து அந்த எண்ணத்தை அழித்து விடுங்கள்.

சிகரெட் பிடிப்பவர்கள் உடனடியாக அந்த பழக்கத்தை கைவிடுங்கள்.

சிகரெட் உங்களை இன்றல்ல… பிற்பாடு ஒருநாள் மிக நிதானமாக கொல்லுகின்ற ஒரு விஷயம் என்பதை புரிந்து கொள்ளுங்கள்.

இந்த இருமல், இந்த முதுகு குனியல், இந்த தளர்வு, இந்த வேதனையெல்லாம் சிகரெட் பிடிப்பதால் விரைவாக ஒரு மனிதனுக்கு வரும். நல்லபடியாக சுவாசம் செய்து கொண்டிருந்தால் எழுபத்தைந்து வயது வரை ஆரோக்யமாக நிச்சயம் இருக்கலாம். அறுபத்தாறு வயதில் தள்ளாடுகின்ற நிலைமை & எழுத முடியாத நிலைமை & பேச முடியாத நிலைமை & ஒரு மனிதனுக்கு வருகிறதென்றால் அது வேதனைக்குரியது.

அது தவிர எந்நேரமும் நம்மைச் சுற்றி தாங்கும்படியாக நம் உறவினர்களுக்கு நாம் சுமையாக இருக்கிறோம் என்பது இன்னும் இம்சையான விஷயம்.

வீட்டிலுள்ள முக்கியமான ஒரு நபர் நோய்வாய்ப்பட்டால் அந்த வீடே நோய்வாய்ப்படும். எனவே எது விஷமோ, எது மிக கொடூரமாக நம்மை தாக்குமோ அதிலிருந்து நாம் விலகி நிற்க வேண்டும்.

புகை பிடித்தல் உடல்நலத்திற்கு தீங்கானது அல்ல, உங்கள் குடும்பத்திற்கு தீங்கானது. உங்கள் வாழ்க்கையை சிதறடிக்கப் போவது. உங்கள் வளர்ச்சியை அறுத்தெறியப் போவது. உங்கள் ஞானத்தை பொசுக்கப் போவது. எனவே, சிகரெட்டை மனதாலும் நினையாமல் நன்கு மூச்சு இழுத்து வெளியே விடுகின்ற பிராணாயாமம் கற்றுக் கொள்ளுங்கள். சிகரெட் ஆசையே வராது.

நான் விட்ட பிறகும்

அது விடவில்லையே!!!

Tuesday, May 15, 2018

10 -ஆம் வகுப்பு முடித்த பிறகு என்ன படிக்கலாம்

10 -ஆம் வகுப்பு முடித்த பிறகு என்ன படிக்கலாம்?

10 -ஆம் வகுப்பு முடித்த பிறகு மூன்று வழிகளில் மேற்படிப்பு படிக்கலாம்.

1.மேல் நிலை பள்ளி (+1,+2) படிப்பு
2. பட்டய படிப்பு (டிப்ளோமா)
3. சான்றிதழ் படிப்பு (Certificate courses)

I. மேல் நிலை பள்ளி (+1,+2) படிப்பு :
மேல் நிலை படிப்பில் சேரும் முன் மாணவர்கள் அவர்களின் இலக்கை தேர்வு செய்து கொள்ளுங்கள். பொறியியல் படிக்க விரும்பும் மாணவர் அறிவியல் (pure science) பிரிவில் சேர்ந்தால் +2 விற்க்கு பிறகு பொறியியல் படிக்க முடியாது. எனவே எதிர்காலத்தில் படிக்க நினைக்கும் துறையை தீர்மானித்துவிட்டு அதற்க்கு ஏற்றார் போல் பிரிவை தேர்ந்தெடுக்க வேண்டும். பிரிவுகள் வாரியான துறைகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

1. First Group எனப்படும் கணிதம், வேதியில், இயற்பில், உயிரியல் பிரிவு : பெரும்பாலும் மாணவர்கள் விருப்பும் பிரிவு. இந்த பிரிவில் படிப்பதன் மூலம், பொறியியல் (B.E/B.Tech,B.Arch, Diploma), மருத்துவம் (MBBS, BDS, B.Pharm, Indian medicines etc…), சட்டம், ஆசிரியர் படிப்புகள், ஆராய்சி படிப்புகள் என பெரும்பாலான துறைகளில் மேற் படிப்பு படிக்கலாம். எதிர்காலத்தில் எந்த துறையை தேர்ந்தெடுப்பது என்ற குழப்பம் இருந்தால் இந்த First Group -பை எடுக்கலாம், ஏனெனில் பெரும்பாலான படிப்புகளுக்கு தகுதியாக இந்த பிரிவு இருக்கும், நீங்கள் விரும்பும் பட்ட படிப்பு படிக்க இந்த பிரிவு உதவியாக இருக்கும்.

அரசு துறை, தனியார்துறை என பெரும்பாலான துறைகளில் வேலைக்கு சேர்வதற்க்கு ஏற்ற பிரிவு. இந்த பிரிவில் படிப்பது மிக சிறந்தது. எதிர்காலத்தில் தேர்ந்தெடுக்கும் வாய்ப்புகள் அதிகம் உள்ள பிரிவு, எனவேதான் இந்த பிரிவிற்க்கு அதிக போட்டி இருக்கும், மாணவர்கள் பெரும்பாலும் இந்த பிரிவில் படிக்க முயற்சி செய்யவும். குறிபிட்ட பள்ளிகளில் இந்த பிரிவு கிடைக்காவிட்டால், இந்த பிரிவு கிடைக்கும் பள்ளியில் சேருங்கள்.

2. கணிதம், வேதியில், இயற்பில், கணினி அறிவியல் பிரிவு : பொறியியல் (B.E/B.Tech,B.Arch, Diploma) சார்ந்த படிப்புகள் படிக்க சிறந்த பிரிவு. மருத்துவம் சார்ந்த பெரும்பான்மையான படிப்புகள் படிக்க இயலாது. மருத்துவ துறை தவிர்த்து மற்ற பெரும்பாலன துறைகளில் வேலைக்கு சேர்வதற்க்கு ஏற்ற பிரிவு. First Group கிடைக்காத மாணவர்கள் இந்த குரூபையாவது தேர்ந்தெடுக்கவும். அதிக வேலைவாய்ப்புள்ள படிப்புகளில் சேர்வதற்க்கு ஏற்ற பிரிவுகளில் இதுவும் ஒன்று.

3. வேதியில், இயற்பில், தாவரவியல், விலங்கியல் பிரிவு : pure science என சொல்லப்படும்  இந்த பிரிவு மூலம் மருத்துவம் (MBBS, BDS, B.Pharm, Indian medicines etc…) சார்ந்த படிப்புகள் படிக்கலாம். பொறியியல் சார்ந்த பெரும்பான்மையான படிப்புகள் படிக்க இயலாது. மருத்துவம் சார்ந்த துறைகள், ஆராய்ச்சி துறைகளில் வேலைவாய்ப்புள்ள படிப்புகளில் சேர்வதற்க்கு ஏற்ற பிரிவு.

4. Commerce, Accountancy, பொருளாதாரவியல் பிரிவு : B.Com, CA (Charted accountant ), M.Com படிப்பதர்க்கான பிரிவு, அரசு வேலை, பொருளாதார, கணக்கியல் துறைகளில் வேலைக்கு சேர்வதற்க்கான படிப்புகள் படிக்க ஏற்ற பிரிவு.

5. வரலாறு, பொருளாதாரவியல் : எதிர்காலதில் B.A. M.A, சட்ட படிப்பு, மேலாண்மை படிப்பு போன்ற படிப்புகள் படிக்கலாம். மத்திய மாநில அரசு வேலைவாய்ப்பிற்க்கான தேர்வுகள் எழுதி வெற்றி பெற ஆர்வம் இருந்தால் இந்த பிரிவை தேர்ந்தெடுக்கலாம். ஆங்கில மொழி திறனை வளர்த்துகொண்டால் அலுவலக  வேலை வாய்ப்பு பெற முடியும்.

6. Vocational குரூப் : தொழில் நுட்பம் சார்ந்த படிப்புகள் அடங்கிய பிரிவு, Vocational குரூபில் உள்ள குறிபிட்ட சில பிரிவுகள் மூலம்  பொறியியல் (B.E/B.Tech,B.Arch, Diploma ) சார்ந்த படிப்புகள் படிக்கலாம். தொழில் நுட்ப துறைகளில் வேலைவாய்ப்புகள் உள்ளது. இதை விருப்ப பிரிவாக எடுத்துகொள்ளாதீர்கள், வேறு பிரிவு கிடைக்கவில்லை என்றால் இதில் சேருங்கள்.

II. பட்டய படிப்பு (டிப்ளோமா):

இது 3 ஆண்டு படிப்பு. தொழில் நுட்பதுறைகள் , மருத்துவ துறைகள், ஆசிரியர் படிப்புகள் என பெரும்பாலான துறைகளில் டிப்ளோமா படிப்புகள் உள்ளன. 

தொழில் நுட்ப டிப்ளோமாவில் Automobile, EEE, ECE, Mechanical, civil, plastic engineering etc… போன்ற துறைகள் பல்வேறு துறைகள் உள்ளன. டிப்ளோமா படித்து முடித்து மேற்கொண்டு பொறியியல் (B.E/B.Tech) படிக்கலாம். பொறியியல் (B.E/B.Tech) படிக்க ஆர்வம் உள்ளவர்கள் டிப்ளோமா படித்து பொறியியல் படிப்பது சிறந்ததல்ல (Not Advisable). 12-ஆம் வகுப்பு முடித்து பொறியியல் (B.E) படிக்கவும், 10- ஆம் வகுப்பிற்க்கு பிறகு டிப்ளோமா படிக்க வேண்டாம்.

டிப்ளோமா மட்டும் படிக்க விரும்புவர்கள் 10 -ஆம் வகுப்பிற்க்கு பிறகு டிப்ளோமா படிக்கலாம். தொழில் நுட்ப துறைகளில் அதிக வேலைவாய்ப்புகள் உள்ளது. டிப்ளமோ முடித்து பணியில் சேர்ந்து கொண்டு பகுதி நேர படிப்பாக பொறியியல் (B.E/B.Tech) படிக்கலாம்.
பெரும்பாலான மருத்துவ துறை டிப்ளோமா படிப்புகள் +2 விற்க்கு பிறகே படிக்க இயலும். +2 விற்க்கு பிறகு டிப்ளோமா படிப்பு 2 ஆண்டுகள்.

III. சான்றிதழ் படிப்பு (Certificate courses):

மாணவர்களை பட்ட படிப்புவரை படிக்கவைய்யுங்கள். இது போன்ற சான்றிதழ் படிப்புகளில் சேர்த்து அவர்களின் படிப்பை நிருத்திவிடாதீர்கள். ஓர் ஆண்டிற்க்குள் சம்பாதித்துதான் ஆக வேண்டும் வேறு வழியே இல்லை என கருதுபவர்கள்  இதை தேர்ந்தெடுக்கலாம். இது ஓராண்டு படிப்பு. தமிழகத்தில் உள்ள அரசு மற்றும் தனியார் ITI-களில் பல்வேறு சான்றிதழ் படிப்புகள் பயிற்றுவிக்கப்படுகின்றன.

சில தொழில் நுட்ப படிப்புகள் : Mechanic Refrigeration And Air- Conditioning, Footwear Maker, Plastic Mould Maker, Machine Operator (Plastics Recycling), Jewellery And Precious Metal Worker, Fitter, Turner, Machinist, Electrician, Welder etc… 

இன்னும் மருத்துவம் சார்ந்த பல்வேறு படிப்புகள் உள்ளது. உடனடி வேலைவாய்பிற்க்கு ஏற்ற படிப்பு, ஆனால் அதிக சம்பளம் கிடைக்காது.

10 – ஆம் வகுப்பு முடித்த பிறகு வேலை வாய்ப்பு

(கோரிக்கை:- தயவு செய்து மாணவர்களை 10 -ஆம் வகுப்பு மேல் படிக்க வையுங்கள்)

1. குறுகிய கால தொழில் நுட்ப பயிற்சிக்கு பிறகு வேலை. (தமிழக அரசு, மாணவர்களுக்கு இலவசமாகவும், குறைந்த கட்டணத்திலும் தொழில் பயிற்சி அளித்து வருகின்றது.)
2. இராணுவத்தில் வேலை மற்றும் அரசு வேலை, இரயில்வேயில் வேலை etc…
3. Date Entry வேலைகள்
4. சமுதாய கல்லூரிகள் (society college) மூலம் 6 மாத பயிற்சிக்கு பிறகு உடனடி வேலைவாய்ப்பு.