Wednesday, February 7, 2018

பழைய வண்டியை வாங்கும் போது என்ன செய்ய வேண்டும்?

நாம் ஒரு புது வண்டியை வாங்கும்போது எந்தப் பிரச்னைகளும் வராதபடி,  அதன் டீலர் பதிவுக்குத் தேவையான அனைத்து விவரங்களையும் நமக்குக் செய்து கொடுத்து விடுகிறார். நாமும் நேரடி உரிமையாளர் ஆகிவிடுகிறோம்.

ஆனால், ஒரு பழைய வண்டியை  வாங்கும் போது  என்ன செய்ய  வேண்டும்? அதன் உரிமையை நமது பெயருக்கு   எப்படி மாற்றிக் கொள்ள வேண்டும்? என்பதைப் பற்றி பார்ப்போம்.

ஆர்.சி. புத்தகம் இல்லாத வண்டியை வாங்கலாமா?
**************************************************************************
  RC புக் என்று (Registration Certificate Book) சொல்லக் கூடிய வாகன பதிவுச் சான்றிதழ் புத்தகம் இல்லாமல் ஒரு வண்டியை வாங்குவது மிக ஆபத்தானது ஆகும்.
அது திருட்டு வண்டியாகக் கூட இருக்கலாம்.

வண்டியை விற்பவர் என்ன செய்ய வேண்டும்?
*********************************************************************
ஒரு வீட்டையோ அல்லது காலி மனையையோ விற்கும் நபர், அதனை வாங்குபவரிடமிருந்து பணம் பெற்றுக்கொண்டு, பத்திரப் பதிவு அலுவலகத்துக்கு் நேரில்  சென்று  விற்பனை செய்ததற்கான பத்திரத்தில் கையெழுத்துப் போடுவதுடன் அவரது வேலை முடிந்துவிடுகிறது.

ஆனால், மோட்டார் வாகனச் சட்டப்படி தன் பெயரில் பதிவு செய்யப்பட்ட பழைய கார், பைக் மற்றும் இதர வாகனங்களை விற்கும்போதும் வாங்கும்போதும் நாம் பதிவு அலுவலகத்துக்குச் செல்வதில்லை.

அதே சமயம், அந்த விற்பனை பற்றி மோட்டார் வாகனப் பதிவு அலுவலகத்துக்கு தகவல் தர வேண்டியது இருவருடைய கடமை ஆகிறது.

ஒருவர் தனது வண்டியை  பதிவு செய்யப்பட்ட அதே மாநிலத்துக்குள் இருக்கும் ஒரு நபருக்கு  விற்பனை செய்திருந்தால்,விற்பனை செய்யப்பட்ட நபரின் பெயர் மற்றும் முழு விலாசத்தையும் படிவம் 29&ல் பூர்த்தி செய்து, வண்டியை விற்பனை செய்த நாளில் இருந்து  14 நாட்களுக்குள் சம்பந்தப்பட்ட மோட்டார் வாகனப் பதிவு அலுவலகத்திற்கு ஒப்புதல் அட்டையுடன் பதிவுத் தபாலில் அனுப்பி வைக்க  வேண்டும். அதன் நகலை அவரிடமிருந்து வண்டியை வாங்கியவருக்கும் அனுப்ப வேண்டும். இது விற்பனை செய்பவரின் கடமையாகும்.

வெளி மாநில நபருக்கு விற்பனை செய்திருந்தால்?
**************************************************************************
வெளி மாநிலத்தில் இருப்பவருக்கு வண்டியை விற்பனை செய்து இருந்தால், விற்பனை செய்தவர் விற்பனை செய்த 45 நாட்களுக்குள் எந்தப் பதிவு அலுவலக எல்லைக்குள் வாகனத்தை வாங்கியவர் இருக்கிறாரோ, அந்த அலுவலகத்துக்கு  தகவல் தரவேண்டும்.

அப்படி வெளி மாநிலத்தில் விற்பனை செய்யும்போது, ஏற்கெனவே பதிவு செய்யப்பட்ட அலுவலகத்திலிருந்து பெறப்பட்ட ‘தடை இல்லாச் சான்று’ (No objection Certificate) பெற வேண்டும். மேற்கண்ட தகவல் கடிதத்துடன் இதன் நகலையும் வைத்து அனுப்ப வேண்டும்.  ஒரு வேளை N.O.C. கிடைக்கவில்லை என்றால், தடையில்லா சான்றுக்கு மனு செய்து 30 நாட்கள் ஆகியும் கிடைக்கவில்லை என்பதற்கான ஆதாரங்களின் நகல்களை வைத்து அனுப்ப வேண்டும்.

வண்டி வாங்கியவர் என்ன செய்ய வேண்டும்?
********************************************************************
வண்டியை வாங்கியவர், அவர் குடியிருக்கும் அல்லது வியாபாரம் செய்யும் இடத்தில், எங்கு அந்த வாகனத்தைப் பயன்படுத்துகிறாரோ அந்தப் பகுதிக்கு உட்பட்ட (Regional Transport Office -  R.T.O)  மோட்டார் வாகனப் பதிவு அலுவலகத்தில் பதிவுப் புத்தகம், இன்ஷ¨ரன்ஸ் அதற்குரிய கட்டணம் ஆகியவற்றுடன் வண்டி வாங்கிய ஊர் வெளி மாநிலத்தில் இருந்தால் தடையில்லா சான்று அல்லது அந்தச் சான்றுக்கு மனு செய்து 30 நாட்களுக்குள் கிடைக்கவில்லை என்பதற்கான ஆதாரங்களுடன் மனு செய்து, ஆர்.சி. புத்தகத்தை தங்கள் பெயருக்கு 30 நாட்களுக்குள் மாற்றிக்கொள்ள வேண்டும்.

இதனைச் செய்யாவிட்டால் என்ன நடக்கும்?
******************************************************************
1) இப்படி வண்டியை வாங்குபவரோ அல்லது வண்டியை விற்பவரோ தங்களது கடமைகளை குறிப்பிட்ட காலத்துக்குள் செய்யாவிட்டால், மோட்டார் வாகனச் சட்டப்படி அபராதம் செலுத்தக் கடமைப்பட்டவர்கள் ஆவார்கள்.

2) வண்டியை வாங்கியவர் பெயர் மாற்றம் செய்யாமல், பழைய உரிமையாளரின் பெயரிலேயே வண்டியை ஓட்டிக் கொண்டு வரும் காலகட்டத்தில்  ஏதாவது விபத்து ஏற்பட்டால், அதற்கு இன்ஷூரன்ஸ் பாலிசி இருந்தாலும் இழப்பீடு தொகை பெற முடியாது.

3) பழைய வாகனத்தை உரிமையாளரின் பெயர் மாற்றம் செய்யாமல் ஏதாவது சட்டவிரோதமான செயல்களுக்கு அந்த வாகனத்தைப் பயன்படுத்தி  வரும்போது, சோதனையிம் அந்த வாகனம் பிடிபட்டால் காவ்ல்துறை  வண்டி யார் பெயரில் இருக்கிறதோ அவர்மீதும்  நடவடிக்கை எடுக்கும். வண்டியை விற்றவர் அதனை விற்றதை நிரூபிக்க  வீண் அலைச்சல் அலைய நேரிடும்.

அப்படியென்றால் என்ன செய்ய வேண்டும்?
*****************************************************************
வண்டியை வாங்கிய 45 + 30 + = 75  நாட்களுக்குள் புதிய உரிமையாளரின் பெயர் ஆர்.சி.புத்தகத்தில் மாற்றப்பட்டதும், அதன் நகலை இன்ஷ¨ரன்ஸ் கம்பெனியில் கொடுத்து, ஏற்கெனவே பழைய உரிமையாளர் பெயரில் உள்ள இன்ஷ¨ரன்ஸ் பாலிசியையும் குறிப்பிட்ட கட்டணம் (டிரான்ஸ்ஃபர் பீஸ்) செலுத்தி அவர் பெயருக்கு மாற்றிவிட்டால் சட்டப்படி எந்தச் சிக்கலும் வராது!

வேறு பதிவு எண் வாங்க  முடியுமா?
*************************************************
ஒருமுறை வண்டியை பதிவுசெய்துவிட்டால், மீண்டும் பதிவுசெய்து, வேறு  புதிய எண் பெற முடியாது. அந்த வண்டியின் பதிவுக் காலம் காலாவதியாகும்போது, அதைப் புதுப்பிக்க மட்டும்தான் முடியும்.

எத்தனை உரிமையாளர்கள் மாறினாலும் மறு பதிவு செய்ய முடியாது. அந்த வாகனம் முழுவதும் பயன்படுத்த முடியாத காலம் வரையிலும் அதற்கு ஒரே பதிவு எண்தான் இருக்கும். உரிமையாளரின் பெயர், விலாசம் மாறலாம். இந்தியாவின் எந்த மாநிலத்துக்கு எந்த மூலைக்குச் சென்றாலும் நமக்கு அதே பதிவு எண்தான்.

இன்சூரன்ஸ் செய்யப்படவில்லை என்றால்?************************************************************
செகண்ட் ஹேண்ட் வாகன சந்தை பெருகிவிட்டதால், நிறைய செகண்ட் ஹேண்ட் வாகனங்கள் இன்சூரன்ஸ் செய்ய வருகின்றன. இருவர் செகண்ட் ஹேண்ட் காரோ அல்லது டூ வீலரோ வாங்கும் போது அந்த வண்டிக்கு ஏற்கனவே முறையாக பாலிசி எடுக்கப்பட்டுள்ளதா? இன்சூரன்ஸ் தொகை செலுத்தப்பட்டுள்ளதா? என்று சோதித்துப் பார்த்து அது சரியாக இருக்கும் பட்சத்தில் அந்த வண்டியை வாங்க வேண்டும். சரியாக இல்லாத பட்சத்தில்  அந்த வண்டியை கண்டிப்பாக வாங்கக் கூடாது.

வேறு மாநிலத்தில் தொடர்ந்து ஓட்ட முடியுமா?
***********************************************************************
நாம் ஒரு மாநிலத்தில் பதிவு செய்த வண்டியை வேறு மாநிலத்தில் 12 மாதங்கள் அதாவது ஒருவருடம் வரைதான் பயன்படுத்த முடியும். அதற்கு மேல் பழைய பதிவு எண்ணுடன் பயன்படுத்தக் கூடாது. . அப்படிப் பயன்படுத்துவது சட்டப்படி குற்றமாகும்.

உதாரணமாக, நாம் சென்னையில் பதிவு செய்த வாகனத்தில் பெங்களூர் சென்று 12 மாதங்களுக்கு மேல் அங்கு பயன்படுத்த முடியாது. அவ்வாறு  அந்த மாநிலத்தி்ல் பயன்படுத்தும் போது, அந்த வண்டியின் உரிமையாளர்  கர்நாடக மாநிலத்தின் பதிவாக               (Re registration)  மறு பதிவு கட்டாயம் செய்ய வேண்டும்

எந்த சூழ்நிலையில் வண்டி பதிவு செய்ய மறுக்கப்படும்? ********************************************************************************
ஒரு வண்டி திருடப்பட்டது என்று சந்தேகிக்கக் காரணம் இருந்தாலோ,

வாகனம் சாலையில் ஓடும்போது இயந்திரக் கோளாறு காரணமாக பிறர் உயிருக்கு ஆபத்து விளைவிக்க வாய்ப்பு இருந்தாலோ,

மோட்டார் வாகனச் சட்டத்தில் குறிப்பிடப்பட்டுள்ள வரைமுறைகளுக்குள் அந்த வண்டியின் தன்மை, அமைப்பு போன்றவை இல்லை என்றாலோ,

பதிவுக்கு வரும்போது தேவையான அனைத்து விவரங்களையும் மனுதாரர் தரவில்லை என்றாலோ,

தவறான தகவல்களை மனுதாரர் கொடுத்திருந்தாலோ

அல்லது அது  வேறு மாநில வண்டியாக இருந்து, அதன் முந்தைய பதிவு எண் விவரங்கள், சான்றுகள் ஆகியவற்றை தரவில்லை என்றாலோ

பதிவு செய்யும் அதிகாரி எழுத்துப்பூர்வமாக, உத்தரவில் காரணங்கள் குறிப்பிட்டு பதிவு செய்ய மறுக்கலாம்.

அப்படி மறுக்கும்போது அந்த அதிகாரி அவ்வாறு மறுப்பதற்கான காரணங்களை குறிப்பிட்டு  உத்தரவு கடிதத்தின் நகலை மனுதாரருக்கு அளிக்க வேண்டும்!

வண்டியின் உரிமையாளர் இறந்துவிட்டால்...
******************************************************************
ஒரு வண்டியின்  உரிமையாளர் இறந்துவிட்டால், அதனைப் பயன்படுத்தப்போகும் அவரது வாரிசுதாரர் சம்பந்தப்பட்ட மோட்டார் வாகனப் பதிவு அலுவலகத்துக்கு 30 நாட்களுக்குள் வண்டியின் உரிமையாளர் இறந்துபோனது பற்றியும், அந்த வண்டியை தான் பயன்படுத்தப் போவது பற்றியும் எழுத்து மூலமாக தெரிவித்துவிட்டு, இறந்து போனவரின் பெயரிலேயே தொடர்ந்து மூன்று மாதங்கள் வரை  உபயோகப் படுத்தலாம்.

இந்தக் காலகட்டத்துக்குள் அந்த வண்டியின் ஆர்.சி.புத்தகம், இன்ஷூரன்ஸ், வண்டியின் உரிமையாளர் இறப்புச் சான்று ஆகியவற்றின் நகலுடன்   அதற்குரிய கட்டணம் செலுத்தி, படிவம் 31&ல் இறந்துபோனவரைப் பற்றிய முழு விவரங்களையும் குறிப்பிட்டு, தற்போது பயன்படுத்துபவரது பெயர், விலாசம் மற்றும் உறவுமுறை ஆகியவற்றையும் குறிப்பிட்டு, இறந்துபோனவரின் வாரிசுதாரர் என்பதற்கான சான்றுகளுடன் மனு செய்து, தங்கள் பெயருக்கு பதிவை மாற்றிக்கொள்ள வேண்டும்.

No comments:

Post a Comment