Saturday, July 22, 2017

வைட்டமின் A


நமக்கு இந்தப் பிரச்னை இருப்பதுபோலத் தெரிகிறதே என்று உடனே ஃபார்மசிக்குச் சென்று, வைட்டமின் மாத்திரைகளை வாங்கி, பாதாம் உண்ணுவது போல எடுக்கக் கூடாது. உங்கள் மருத்துவரிடம் ஆலோசித்த பின்னரே, வைட்டமின் சப்ளிமெண்டுகளை நீங்கள் எடுக்க ஆரம்பிக்க வேண்டும்.
. அப்படி இல்லாமல், நீங்களே சப்ளிமெண்டுகள் எடுப்பது பெரிய ஆபத்து. சரியாகச் சொல்லுவதென்றால், வைட்டமின் குறைவால் விளையும் ஆபத்தைக் காட்டிலும் மிகு வைட்டமின் அதிக ஆபத்து. பொறுப்புணர்ந்து செயல்பட வேண்டியது உங்கள் கடமை.

வைட்டமின் A
************

வைட்டமின்கள் கண்டுபிடிக்கப்பட்டு சப்ளிமெண்டுகளாக உபயோகப் படுத்துவதற்குப் பல காலம் முன்னரே சில வகையான உணவுகள் சில வகையான நோய்களைக் குணப்படுத்துகிறது என்பதைக் கண்டறிந்து உபயோகப்படுத்தியிருக்கிறார்கள். எகிப்தியர்கள் ஈரலை உணவாகக் கொடுக்கும்போது மாலைக்கண் நோய் சரியாவதைக் கண்டறிந்திருக்கிறார்கள். ஈரலில் இருக்கும் வைட்டமின் A வே இதற்குக் காரணம்.

1912ஆம் ஆண்டு டாக்டர் காசிமிர் ஃபங்க் (Casimir Funk) என்பவர், நெல் உமியில் உள்ள நுண்சத்துகளைக் கண்டறிந்து அதற்கு Vitamines என்று பெயர் வைத்தார். வைட்டமின் A முதல் முதலாக காட் லிவர் ஆயிலில் இருந்து 1913ஆம் வருடம் கண்டுபிடிக்கப்பட்டது.  அமெரிக்காவில் உள்ள விஸ்கான்சின் பல்கலைக் கழகத்தில் இது கண்டுபிடிக்கப்பட்டது.

வைட்டமின் A எனப்படும் கொழுப்பில் கரையும் வைட்டமின் இரண்டு வகைப்படும். ரெட்டினாய்டுகள் மற்றும் கரோடினாய்டுகள் (Retinoids and Carotenoids). இதில் ரெட்டினாய்ட் வகை, இறைச்சி உணவிலும் கரோடினாய்ட் வகை, காய்கறி உணவிலும் உள்ளது. ரெட்டினாய்ட் வகை வைட்டமின் ஆக்டிவ் வகை என்று அழைக்கப்படும். அதாவது இறைச்சியில் உள்ள வைட்டமின் A உடல் உபயோகிப்பதற்கான வடிவத்தில் இருக்கும்.

ஆனால் காய்கறிகளில் இருக்கும் கரோடினாய்ட் வகை வைட்டமின் A ப்ரொ வைட்டமின் அல்லது பிரீ கர்சர் என்று அழைக்கப்படும். அதாவது இந்த பிரீகர்சர்களை ஈரல் சேமித்து வைத்துக் கொண்டு உடலுக்குத் தேவைப்படும் நேரத்தில் வைட்டமின் A வாக மாற்றும். இது மேலும் ஆல்பா கரோட்டின், பீட்டா கரோட்டின் மற்றும் காமா கரோட்டின் என்று மூன்று வகைப்படும். இந்த கரொடினாய்டுகள் வைட்டமின் A வாக மாற்றப் பட்டு ஆக்டிவ் வடிவத்துக்கு மாறும். அதிகபட்சமாக உடலானது நான்கு முதல் ஆறு சதவீதம் வரையே கரோடினாய்டுகளை ஆக்டிவ் வைட்டமின் Aவாக மாற்ற முடியும், அதுவும் உடல் நல்ல நலத்துடன் இருந்தால் மட்டுமே. இந்த வைட்டமின் A வகையில் உள்ள பீட்டா கரோட்டின், ஃபிரீ ராடிகல்களால் ஏற்படும் செல்களின் சேதத்தைக் குறைக்க உதவும் ஷாக் அப்சார்பர் போல செயல்படுகிறது. முக்கியமாக கேன்சர் நோய் வராமல் தடுக்க பெருமளவில் உபயோகமாகிறது.

உடலின் இரண்டாவது மூளை எனப்படும் குடல், நல்ல ஆரோக்கியத்துடன் இருந்தால் மட்டுமே கரோடின்களை ஆக்டிவ் வைட்டமின் A வாக மாற்ற முடியும். வயிற்றில் சுரக்கும் அமிலங்களும் இந்த வைட்டமினை கிரகிக்க சரியான அளவில் தேவை. ஆண்டாசிட்டுகள் வைட்டமின் A கிரகிப்பைக் குறைக்கும்.  பித்தப் பையில் சுரக்கும் பித்த நீரும் வைட்டமின் A கிரகிப்புக்கு முக்கியத் தேவை. 

காய்கறி உணவுகளில் பிரீகர்சர் எனப்படும் கரோட்டின்கள் உள்ளன என்று பார்த்தோம். நீரிழிவு, ஹைப்போதைராய்டிசம் மற்றும் கல்லீரல் பிரச்சினை இருப்பவர்களுக்கு, உடலானது கரோட்டின்களை வைட்டமின் A வாக மாற்றும் சக்தி குறைகிறது.

கொழுப்பில் கரையும் இந்த வைட்டமின் A, கொழுப்பில் பயனித்து செல்களுக்குள் நேரடியாகச் செல்லும் வல்லமை படைத்தவை. செல்களைச் சுற்றி கொழுப்பு இருப்பதால் தண்ணீரில் கரையும் வைட்டமின்களால் இப்படி செல்களுக்குள் நேரடியாகச் செல்வது இயலாது.

இதன் செயற்கை வடிவங்களாக வைட்டமின் A பால்மிடேட் மற்றும் வைட்டமின் A அசிட்டேட் என்ற இரண்டு வகைகளாக உள்ளது. இந்த செயற்கை வைட்டமின்கள் ரெட்டினாய்ட் போல உடல் உபயோகிக்க ஏற்ற ஆக்டிவ் வடிவத்தில் இருக்கும்.

வைட்டமின் A வின் சிறப்பு வடிவங்களான Trentonoin மற்றும் isotrentinoin முகப்பரு போன்றவற்றைச் சரி செய்ய உதவுகிறது. மேலும் சில வகையான ரெட்டினாய்டுகள் கேன்சர் போன்ற நோய்களைத் தடுப்பதற்கு உபயோகமாகிறது. இந்த வகை ரெட்டினாய்டுகள் இன்னும் ஆராய்ச்சி நிலையிலேயே உள்ளது. இந்த வடிவங்கள் இப்போது சந்தையில் கிடைப்பதில்லை. ஆனால் உணவு மூலம் இவற்றை எடுப்பதில் எந்தத் தடையுமில்லை.

உடலின் கீழ்க்கண்ட செயல்களுக்கு வைட்டமின் A தேவை:

.  உடலில் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்க உதவுகிறது. ரத்த வெள்ளை அணுக்களைப் பெருகச் செய்து நோய் எதிர்ப்பில் முக்கியப் பங்காற்றுகிறது.

.  தோல் வளர்ச்சிக்கு உதவுகிறது.

.  சுற்றுச் சூழலால் உடலில் ஏற்படும் நச்சுகளை அகற்ற உதவுகிறது.

.  கேன்சர் எனப்படும் புற்று நோய் வராமல் காக்க உதவுகிறது.

. கண் பார்வைக்கு வைட்டமின் A அவசியமான ஒன்றாகும்.

.  எலும்புகளின் ஆரோக்கியத்துக்கு உதவுகிறது.

இந்த வைட்டமின் A ஆண்டி ஆக்சிடண்டுகளில் ஒன்றாகும். கர்ப்பிணிப் பெண்களுக்கும் மூன்றாம் டிரைமெஸ்டர் என்று சொல்லப்படும் 7 மாதங்களுக்கு மேலான நிலையில் வைட்டமின் A வின் தேவை அதிகரிக்கும். அந்த வேளையில் வைட்டமின் A உள்ள உணவுகளையோ சப்ளிமெண்டுகளையோ எடுப்பது தாய்க்கும் சேய்க்கும் நன்மை பயக்கும்.

நம்ம போலீஸ் ஆஃபீஸர் கோகுல் சாரோட மகன் அபிஷேக்குக்கு சில நாளாகவே சாயங்காலமானா கண் பார்வை சரியா தெரியாம இருந்தது. பார்வை மங்கலாக இருந்ததால சாயங்காலம் கூடப் படிக்கற பசங்களோட விளையாட முடியாம சீக்கிரமா வீட்டுக்குப் போக ஆரம்பித்தான். மாதக்கணக்கில் இது நீடிக்கவே, கோகுல்நாத் சார் அவனைக் கூட்டிட்டுப் போய் மருத்துவரைப் பார்த்தார். இது ஒரு நிகழ்வு.

இன்னொரு நிகழ்வாக, நம்ம கோகிலா டீச்சரோட பையன் ரமேஷுக்கு, அடிக்கடி காய்ச்சலும் இன்ஃபெக்‌ஷனும் வந்துட்டே இருந்தது. சின்னதா ரெண்டு துளி மழை தலைல பட்டாக்கூட காய்ச்சல், உடனே காய்ச்சலுக்கு மருந்து சாப்பிட்டுட்டு இருந்தான். இது இன்னொரு நிகழ்வு.

மேலே சொன்ன ரெண்டு பேரும் மருத்துவரைச் சந்தித்ததில், இந்தப் பிரச்சினைகளுக்குக் காரணம் வைட்டமின் A குறைபாடு இருப்பதைக் கண்டு பிடித்தார். அவர்களுக்குத் தேவையான வைட்டமின் A உள்ள உணவுகளைப் பரிந்துரைத்தும் வைட்டமின் A சப்ளிமெண்டுகளைக் கொடுத்தும் இந்தக் குறைகளைச் சரி செய்தார்.

உங்கள் உடலில் வைட்டமின் A குறைபாடு உள்ளது என்பதைத் தெரிந்து கொள்ள முடியுமா?  முடியும். கீழ்க்கண்ட அறிகுறிகள் தெரிந்தால் உங்கள் உடலில் வைட்டமின் A குறைபாடு உள்ளது என்று அர்த்தம்.

.  கண்கள் வறண்டு போவது
.  அடிக்கடி சோர்வுடன் தலை சுற்றல் வருவது
.  ஹைப்போ தைராய்டிசம்
.  அடிக்கடி நோய்த்தொற்று ஏற்படுவது
.  பெண்களுக்கு அடிக்கடி யீஸ்ட் இன்ஃபெக்‌ஷன் வருவது
.  மாலைக் கண் நோய்
.  பற்கள் மற்றும் எலும்புகள் வலுவிழத்தல்
.  காயங்கள் ஆற அதிக காலம் எடுப்பது
.  தோல் வறண்டு போய் செதிள் செதிளாக ஆகுதல்

மேற்கண்ட அறிகுறிகள் உங்களுக்குத் தெரிந்தால் வைட்டமின் A சப்ளிமெண்டுகளையோ அல்லது வைட்டமின் A அதிகம் உள்ள உணவுகளையோ எடுக்க வேண்டும். குறைபாடு இருக்கும் போது 25000 IU வரை ஒரு நாளுக்கு எடுக்கலாம். 50000 IU அளவுகளில் இதை தினமும்
எடுப்பது நச்சுத் தன்மையை உருவாக்கும்.

ஆண்டிபயாடிக்குகள், செரிமானக் கோளாறுகள், கொலஸ்டிராலைக் குறைக்கும் மருந்துகள் போன்றவை வைட்டமின் A குறைபாட்டை உருவாக்கும். ரத்தப் பரிசோதனை மூலம் உங்களுடைய ரத்தத்தில் உள்ள வைட்டமின் A அளவை அறியலாம்.

மேலே சொன்ன உதாரணத்தில் கோகிலா டீச்சர் இந்த வைட்டமின் A ரொம்ப நல்லது போல இருக்கேன்னு, வைட்டமின் சப்ளிமெண்ட்டை தொடர்ச்சியாக, டாக்டர் ரெகமண்ட் செய்த அளவை விட அதிகமான டோஸை தொடர்ச்சியாக கொடுக்க ஆரம்பித்தார். அதன் விளைவாக அவனுக்கு பசி குறைய ஆரம்பித்தது. முடி உதிர ஆரம்பித்தது. விரல்கள் பின்னிக் கொண்டன.  வயதுக்குத் தகுந்த வளர்ச்சியும் இல்லை.

ஒரு நாள் மிகவும் முடியாமல், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டபோது, அவனுடைய ஈரலும் மண்ணீரலும் வீங்கியிருப்பதைக் கண்டு பிடித்தார்கள். கோகிலா டீச்சரிடம் கேட்டபோது அவர் வைட்டமின் A சப்ளிமெண்ட்டைக் கொடுத்தைத் தெரிவித்தார். உடனடியாக வைட்டமின் Aவைக் கொடுப்பதை நிறுத்தச் சொன்னவுடன் சில மாதங்களில் ஆரம்பித்து இரண்டு வருசத்துக்குள் எல்லாப் பிரச்சினைகளும் சரியானது.

ஒன்றை ஞாபகம் வைத்துக் கொள்ளுங்கள். வைட்டமின்கள் குறைவாக இருந்தாலும் ஆபத்து. அதிகமாகப் போனால் அதை விட ஆபத்து. அதனால் மருத்துவரிடம் ஆலோசனை செய்து அவர் கொடுக்கும் அளவுகளில் மட்டுமே வைட்டமின் சப்ளிமெண்டுகளை எடுக்க வேண்டும். இல்லையென்றால் அதிகப் பிரச்சினைகள்தான் வரும்.

வைட்டமின் A வை உணவு மூலம் எடுக்கும்போது வைட்டமின் A நச்சுத்தன்மை உடலில் உருவாக பெரும்பாலும் வாய்ப்பில்லை. உதாரணத்துக்கு ஈரலை மட்டும் தினசரி முழு நேர உணவாக உண்டு கொண்டிருந்தால் மட்டுமே வைட்டமின் அதிகமாகி நச்சுத்தன்மை வரலாம். அளவுக்கு மிஞ்சினால் அமிர்தமும் நஞ்சே. இந்த வைட்டமின் A உடலில் அதிகமாகி நச்சானால் கீழ்க்கண்ட அறிகுறிகள் தோன்றும்.

.  பசி உணர்வின்மை
.  முடி கொட்டிப் போதல்
.  அடிக்கடி தலை வலி
.  மூட்டுகளில் வலி
.  எடையிழப்பு
.  எரிச்சலான மனநிலை

வைட்டமின் A வின் பரிந்துரைக்கப்பட்ட தினசரி அளவு:

0-3 வயது:  2000 IU அல்லது 600 mcg
4-8 வயது:  3000 IU அல்லது 900 mcg
9-13 வயது:  5610 IU அல்லது 1700 mcg
14-18 வயது:  9240 IU அல்லது 2800 mcg
19 வயதுக்கு மேல்:  10000 IU அல்லது 3000 mcg

கீழ்க்கண்ட உணவுகளில் வைட்டமின் A உள்ளது.

அசைவ உணவுகள்: ஈரல், மீன்கள், முட்டை, சிக்கன்.

சைவ உணவுகள்: கேரட், மிளகாய், கீரைகள், ஆப்ரிகாட் பழங்கள், சர்க்கரை வள்ளிக் கிழங்கு, வெங்காயத்தாள், பால், பப்பாளிப் பழம், வெண்டைக்காய் தர்பூசனிப் பழம் போன்ற அனைத்துக் காய்கறி பழங்களிலும் கரோடினாய்டுகள் வடிவத்தில் வைட்டமின் A உள்ளது.

தாவர உணவுகளில் உள்ள கரோடினாய்டுகள் 700க்கும் மேல் உள்ளன. அவற்றில் 60 வகையான கரோடினாய்டுகள் உணவுப் பொருட்களில் உள்ளன. அதில் ஆல்ஃபா கரோட்டின், பீட்டா கரோட்டின், கிரிப்டோசாந்தின், லைகோபீன், லூட்டின் மற்றும் ஜீசாந்தின் போன்ற ஆறு வகைகள் நாம் சாதாரனமாக உண்ணும் உணவில் உள்ளன. (Alpha - carotene, beta - carotene, cryptoxanthin, lucopene, luetin and zeaxanthin - உங்களுக்கு விருப்பம் இருந்தால் இது பற்றி மேலதிக தகவல்களை கூகுள் மூலமாகப் பெறுவதற்காக இவற்றை ஆங்கிலத்தில் கொடுத்திருக்கிறேன்).

இவற்றில் கிரிடோசாந்தின் வகை கரோடினாய்ட் கேன்சர் ஆபத்தைக் குறைப்பதில் முக்கியப் பங்காற்றுகிறது. இது வெண்ணெய், ஆரஞ்சுப்பழம், முட்டை மஞ்சள் கரு, பப்பாளிப் பழம் போன்றவற்றில் உள்ளது. இது கண்களில் ஏற்படும் பார்வைக் குறைபாடுகளைப் போக்குவதில் முக்கியப் பங்காற்றுகிறது.

லைகோபீன் என்ற வகை கரோடினாய்டும் சில வகையான கேன்சரைத் தடுப்பதில் உதவுகிறது. LDL கொலஸ்டிராலைக் குறைக்கிறது. ரத்த அழுத்தத்தைக் குறைக்கிறது. இவை அடர்த்தியான பச்சை நிறமுள்ள கீரைகள், கொய்யா, தர்பூசனிப் பழம், தக்காளி போன்றவற்றில் உள்ளது. இவற்றை கொழுப்புடன் சேர்த்து உணவாகத் தயாரிக்கும் போதும் சீஸுடன் சாப்பிடும் போதும் இதன் பயோஅவைலபிலிட்டி அதிகரிக்கிறது.

லூட்டின் மற்றும் ஜீசாந்தின் வகை கரோடினாய்டுகள் கண்கள் ஒளியை சரியாக கிரகிக்கவும் ஃபிரீ ராடிகல்ஸ்களில் இருந்து கண்களைப் பாதுகாக்கவும் உதவுகிறது.

நுரையீரல், வயிறு மற்றும் பல இடங்களில் உருவாகும் புற்று நோயை வர விடாமல் தடுப்பதுல் வைட்டமின் A முக்கியப் பங்காற்றுகிறது.  தொடர்ச்சியாக தினமும் பச்சை மற்றும் மஞ்சள் நிறமுள்ள காய்கறிகளை உண்பது, கேன்சர் வருவதைத் தடுக்கும்.

வைட்டமின் B

ஆரோக்கிய வாழ்வுக்கான வைட்டமின்களும் மினரல்களும்
********************************

வைட்டமின் B காம்ப்ளக்ஸ்
***********************

வைட்டமின் B காம்ப்ளக்ஸ் என்ற உடலின் வளர்சிதை மாற்றத்திற்குத் தேவையான, சக்தியை உடலுக்குக் கொடுப்பதில் முக்கியப் பங்கு வகிக்கும், உடல் நலத்துக்கும் மன நலத்துக்கும் முக்கியக் காரணமான வைட்டமினைப் பற்றிப் பார்ப்போம்.

இந்த வைட்டமின் B என்பது கீழ்க்கண்ட 11 வகையான B வைட்டமின்களின் தொகுப்பு. அனைத்து B வைட்டமின்களை சேர்த்து பி காம்ப்ளக்ஸ் என்று அழைக்கிறார்கள்.

.  B1 தையமின் (Thiamine)
.  B2 ரிபோஃப்ளேவின் (Riboflavin)
.  B3 நியாசின் மற்றும் நியாசினமைட் (Niacin and Niacinamide)
.  B5 பேண்டோதெனிக் ஆசிட் (Pantothenic acid)
.  B6 பைரிடாக்சின் (Pyridoxine)
.  B7 பயோட்டின் (Biotin)
.  B9 ஃபோலிக் ஆசிட் (Folic acid)
.  B10 பாரா-அமினோபென்சாயிக் ஆசிட் (Para-aminobenzoic acid)
.  B12 கோபாலமின் (Cobalamin)
.  கோலின் Choline
.  ஐனோசிடால் Inositol

இவையல்லாமல் B17 போன்ற வகை வைட்டமின்களும் உள்ளன.

பொதுவாக இந்த பல வகையான வைட்டமின் B க்கள் அனைத்தும் உண்ணும் உணவில் சேர்ந்து கலந்தே உள்ளது. இது ஒரு தண்ணீரில் கரையக்கூடிய வைட்டமின் வகையாகும். இவை பெரும்பாலும் உடலில் சேமித்து வைக்கப்படாமல் உடலால் வெளியேற்றப் படும். அதனால் உடல் இந்த வைட்டமின் சப்ளிமெண்டுகளை அதிக பட்சம் உபயோகிக்க இரண்டு வேளையாக எடுப்பது நல்ல பனைத் தரும். அதாவது ஒரு நாளுக்கு 1000 மில்லி கிராம் வைட்டமின் எடுக்க வேண்டும் என்றால் காலையில் 500மிகி இரவில் 500மிகி என்று எடுக்க வேண்டும்.

எஸ்டிரோஜன் தெரபி மற்றும் குழந்தைப் பிறப்பைக் கட்டுப் படுத்தும் மருந்துகள் - போன்ற ஹார்மோன்களைச் சரி செய்யும் மருந்துகள் எடுக்கும் போது உடலுக்கு வைட்டமின் B அதிகம் தேவைப்படும். ஆண்டிபயாடிக்குகள் எடுக்கும் போதும் கூடவே வைட்டமின் பி12 மாத்திரை ஒன்றை எடுக்க வேண்டும். பெரும்பாலும் நீரிழிவு வியாதிக்காரர்கள் அனைவரும் வைட்டமின் B12, B1 அல்லது பி காம்ப்ளக்ஸ் மாத்திரைகளை எடுப்பது தவறில்லை என்றாலும், ரத்தப் பரிசோதனையில் வைட்டமின் B பரிந்துரைக்கப்பட்ட அளவை விட அதிகமாக இருந்தால் உடனடியா நிறுத்தவோ அல்லது டோசேஜ் குறைக்கவோ வேண்டும்.

வைட்டமின் B யானது, ஈரலின் செயல்பாட்டுக்கு உதவி செய்வது, கால்கள் மரத்துப் போதல் பிரச்சினையைச் சரி செய்வது, தைராய்ட் சுரப்பியின் செயல்பாட்டுக்குக்கு உதவுவது, மூளையின் வேதிச் செயலின் ஸ்திரத்தன்மைக்கு உதவுவது, புரதம்-கொழுப்பு-மாவுச்சத்துகளை உடல் சக்தியாக மாற்றும் வளர்சிதை மாற்றத்தில் உதவுவது போன்ற உடலின் முக்கியச் செயல்களுக்குக் காரணமாகிறது.

வைட்டமின் பி குறைபாட்டால், பசியின்மை, எரிச்சலான மனப்பான்மை, நோயெதிர்ப்பு சக்தியின்மை, தூக்கமின்மை, சர்க்கரை மீதான ஏக்கம் (Sugar Cravings), நரம்பு மண்டலப் பிரச்சினைகள் போன்றவைகள் ஏற்படும்.

வைட்டமின் B1 - தையமின்
***********************

இப்போது வைட்டமின் பி தொகுப்பில் உள்ள முதல் வைட்டமினான B1-தையமின் பற்றிப் பார்ப்போம்.

இந்த B1 - தையமின் வைட்டமின் என்பது, நவரத்தினங்களில் வைரம் போல, உடலுக்கான நுண்சத்து தேவைகளில் மதிப்பு மிக்க ஒன்றாகும்.

இந்த தையமின் வைட்டமின், உண்ட உணவிலிருந்து சக்தியை விடுவித்து உடலுக்கு அளிப்பதில் உதவி செய்கிறது. இந்த சக்தி விடுவிப்பு செயலைச் செய்வதால் உடலின் முக்கியச் நிகழ்வுகளான பசி, ஜீரனம் மற்றும் நரம்பு மண்டலச் செயல்பாடுகளில் முக்கியப் பங்காற்றுகிறது. இந்த தையமின் இருக்கும் உணவுகளில் மற்ற வகையான நுண் சத்துகளும் செறிந்து காணப்படும்.

நம்ம அபிஷேக் பையன் நல்ல படிப்பாளி, ஜிம்முக்கு எல்லாம் போய் நல்லா உடம்பை மெய்ண்டெய்ன் செய்யும் ஒரு டீனேஜர். ஆனா கடந்த ஆறு மாசமா அவனோட நடவடிக்களால அவனோட ஃபிரண்ட்ஸ் கடுப்பாகி யாரும் அவனோட பேசறதே இல்ல. போன வாரம் அவனோட அம்மா ஏதோ சொல்லப் போய் கோபம் வந்து டீவியத் தூக்கிப் போட்டு உடைச்சிட்டான். இது ஒரு சம்பவம்.

நம்ம கோகிலா டீச்சர், செய்யும் ஆசிரியர் தொழிலில் நல்ல ஈடுபாடு உள்ள, கடமையில் எந்தத் தவறும் செய்யாத, அடுத்தது தலைமையாசிரியையாகப் போகும் ஒரு குடும்பத்தலைவி. இவங்க கொஞ்சம் குண்டாவும் இருக்கறதால சாப்பாட்டைக் குறைச்சு, சிப்ஸ், சாக்கலேட் மற்றும் கூல் டிரிங்க்ஸ்னு ஏதோ ஒன்ன சாப்பிட்டுக்கிட்டு ஒழுங்கான சாப்பாட்டைச் சாப்பிடாம ரொம்ப பிசியா இருக்கறவங்க. ஒரு நாள் திடீர்னு பசியே எடுக்காம போய் எடையிழப்பும் ஆக ஆரம்பிச்சது. இது இன்னொரு சம்பவம்.

நம்ம ஸ்டீஃபன் ராஜ் ஒரு ஓட்டப் பந்தைய வீரன், கொஞ்சம் ரவுடிப் பயலும் கூட. அடிக்கடி தகறாரு ஆகி விழுப்புண்கள் ஏற்படறதும் காயங்கள் ஆறுவதும் சகஜம். ஒரு நாள் அப்படி சாதாரனமா ஆன ஒரு காயம் ரொம்ப நாளா ஆறவே இல்ல. இது மூனாவது சம்பவம்.

மூனு பேரும் டாக்டரைப் பார்க்கப் போனாங்க. டாக்டர் என்ன சொன்னாருன்னு சரியா யூகிச்சிருப்பீங்க. அதான் சார், இந்த மூனு பேரோட பிரச்சினைகளுக்கும் காரணம் தையமின் என்று சொல்லப்படும் வைட்டமின் B1 குறைபாடு. வைட்டமின் B1 சப்ளிமெண்டுகளை கொடுத்ததும் படிப்படியா அவங்க பிரச்சினை சரியாக ஆரம்பிச்சது. உடலின் ஒவ்வொரு செல்களிலும் நடக்கும் ஆக்சிடேஷன் செயல்பாட்டில் B1 முக்கியப் பங்கு வகிக்கிறது. முக்கியமாக நரம்பு மண்டலச் செயல்பாட்டில்.

அதிகப் படியான சர்க்கரை சாப்பிடுவதும் B1 செயல்பாட்டையும் உடலின் B1 வைட்டமின் கிரகிப்புத் தன்மையையும் குறைக்கும். இதனால் நரம்பு மண்டலக் கோளாறுகள் ஏற்பட்டு ஞாபக சக்தி போன்ற மூளையின் செயல்பாடுகளையும் குறைக்கும். இதனால் பிஹேவியரல் குறைபாடுகள் எனப்படும் நடத்தையின் மாற்றங்களைக் கொண்டு வரும். திடீரென மூர்க்கமாக நடந்து கொள்ளுதல் போன்றவை இதில் அடங்கும். ஆம், Big Boss நிகழ்ச்சியில் கஞ்சா கருப்பு அவர்கள் தீயனைப்பு சிலிண்டரை எடுத்து பரணியை அடிக்கப் போனதற்கு B1-தையமின் குறைபாடும் காரணமாக இருக்கலாம்.

டயட் இருக்கிறேன் பேர்வழி என்று சரியான சத்துகள் உள்ள உணவுகளைச் சாப்பிடாமல் போனாலும் B1 குறைபாடு வரும். உடல் உஷ்னம் தொடர்ச்சியாக குறைந்திருந்தால் அது B1 குறைபாடாக இருக்கலாம். மாவுச்சத்து சக்தியாக மாற்றப்பட தையமின் அவசியம் தேவை. நீங்கள் குளூக்கோஸேயே சாப்பிட்டாலும்,  தேவையான தையமின் உடலில் இல்லையென்றால் குளூக்கோஸ் சாப்பிடதுக்கு உண்டான சக்தி உடலில் சேராது. முக்கியமாக குடிப்பழக்கம் உள்ளவர்களுக்கு தையமின் உடலில் சேராது. உடலில் இருக்கும் தையமினையும் குடிப்பழக்கம் அழித்து விடும்.

மிக மோசமான தையமின் குறைபாடு -  தசைகள் கட்டுப்பாடிழப்பு, ஞாபக சக்தி இழப்பு, ஏற்கனவே இருக்கும் உடல் நலக் கோளாறுகளை மேலும் அதிகரிப்பது போன்றவற்றை ஏற்படுத்தி Wernicke-Korsakoff syndrome எனப்படும் மூளை பாதிப்பை உருவாக்கும்.

நரம்பு மண்டலக் கோளாறுகளை உடலில்
நிரந்தரமாக ஏற்படுத்தும்.

மாவுச்சத்து சக்தியாக மாற்றப்படும் போது உருவாகும் லாக்டிக் ஆசிட் சரியாக வெளியேற்றப் படாத போது கால்களில் அசௌகர்யமான ஒரு உணர்வு ஏற்பட்டு Restless Leg Syndrome (RLS) என்ற நிலை வருவதற்குக் காரணம் தையமின் குறைபாடே.  இது உடலின் வேறு பகுதிகளிலும் ஏற்படும். கடுமையான உடற்பயிற்சியின் போது ஏற்படும் வலி சரியாவதற்கும் வைட்டமின் பி1 ஐ எடுக்கலாம்.

தையமின் குறைபாடு ஏற்படும் போது ஒவ்வொரு கட்டத்திலும் விதவிதமான அறிகுறிகள் தோன்றும். முதல் நிலையில் சக்தி இல்லாத உணர்வும் சோர்வும் ஏற்படும். மன அழுத்தமும், எரிச்சலான மன நிலையும் ஏற்படும். பசியின்மை ஏற்படும். இதைச் சரி செய்யாத போது அடுத்த நிலையில் இந்த உடல் ரீதியான அசௌகர்யங்கள் அதிகமாகும். தலைவலி, ஜீரனக் கோளாறுகள் போன்றவை ஏற்படும். இதயத் துடிப்பு அதிகமாகும். இதன் அதிக பட்ச குறைபாட்டில் நரம்பு பாதிப்பு ஏற்பட்டு பெரிஃபெரல் நியூரிடிஸ் (peripheral neuritis) என்ற நிலை ஏற்படும். இதனால் கால்களில் மிகுந்த சோர்வு ஏற்பட்டு குறக்களி பிடித்தல், எரியும் உணர்வு, மரத்துப் போதல் போன்றவை ஏற்படும். இந்த அறிகுறிகள் இருந்தால் தையமின் குறைபாடு உள்ளது என்று தெரிந்து கொள்ளலாம். இவை சரி செய்யப் படாத போது உச்ச கட்டமாக பெரிபெரி நோய் ஏற்படும்.

வைட்டமின் பி1 குறைபாடு அதிகமாக இருந்தால் வருவது பெரிபெரி (beriberi) நோய். இந்த நிலையில் இதயத் துடிப்பு அதிகமாக இருக்கும். இந்த நிலை மோசமானால் என்லார்ஜ்ட் ஹார்ட் எனப்படும் இதயம் வீங்குவது போன்றவை ஏற்பட்டு மாரடைப்புக்குக் காரணமாகும். இதில் வெட் பெரிபெரி (wet) மற்றும் டிரை  பெரிபெரி (dry) என்ற இரண்டு வகை உள்ளது.  உடல் அதிக நீர்ச் சத்தைத் தேக்கி வைத்துக் கொண்டும், இதயக் கோளாறுகளை ஏற்படுத்துவதும் வெட் டைப் பெரிபெரி. நரம்பு மண்டலம் மற்றும் தசைகளில் ஏற்படும் தையமின் குறைபாடு அறிகுறிகள் டிரை டைப் பெரிபெரி. இதற்குச் சரியான சிகிச்சை எடுக்காவிடில் இறப்பு வரை கொண்டு போகும். இதில் வெட் ஃபார்ம் என்பதை சப்ளிமெண்டுகள் மூலம் முற்றிலும் சரிப்படுத்தலாம். ஆனால் டிரை ஃபார்ம் கோளாறுகளை அவ்வாறு முற்றிலும் சரி செய்ய முடியாது. அது உடலில் நிரந்திரமான பாதிப்பை ஏற்படுத்தும்.

பி1 குறைபாடு இருந்தால் உடலில் உள்ள நரம்புகளைச் சுற்றி உள்ள myelin எனப்படும் பாதுகாப்பு உறை சிதையும். இந்தக் குறைபாடு இருக்கும் போது இப்படி சிதைந்த myelin ஐ மறு சீரமைக்க முடியாது. இந்த நிலையில் விரல்கள், கைகள், கால்கள் மற்றும் பாதங்கள் மரத்துப் போகும் நிலை அல்லது டிங்கிளிங் எனப்படும் கூச்ச உணர்வும் ஏற்படும். இதனால் நீரிழிவு நோய் உள்ளவர்களுக்கு பெரிஃபெரல் நியூரோபதி எனப்படும் நரம்பு மண்டலக் கோளாறு வைட்டமின் பி1 குறைபாட்டால் ஏற்படும். 

***நீரிழிவு நோய் உள்ளவர்களுக்கு சராசரி மனிதர்களை விட 15 மடங்கு அதிகமாக வைட்டமின் பி1 தேவைப்படும்.

வைட்டமின் பி1 குறைபாட்டால் தலையைத் திருப்பும் போது கண் பார்வை ஒத்துழைக்காமல் போகும். உதாரணத்துக்கு ஒரு பேனாவைப் பார்த்துக் கொண்டு உங்கள் தலையைத் திருப்பினால், தலை போகும் திசைக்கு எதிர்த்திசையில் கண் விழி நகர்ந்து பார்க்கும் பொருள் மீது நிலை கொள்ளும். இதற்கு காதுகளின் உட்புறத்தில் உள்ள நரம்புகளின் ஒருங்கினைப்பால் நடக்கிறது.  அதற்கான நரம்புகளின் சமிக்ஞையில், பி1 குறைபாடு இடையூறு செய்கிறது. இதனால் கண் ல்விழி அலைபாயும் நிலை ஏற்படும். இந்த நிலைக்குப் பெயர் Nystagmus. வைட்டமின் பி1 சரியான அளவில் எடுப்பதால் இந்நிலை சரி செய்யப்படும்.

அதிகப்படியான ஸ்டிரெஸ் என்று சொல்லப்படும் மன அழுத்தம் பி1 குறைபாட்டை ஏற்படுத்துகிறது.

இந்த முக்கியமான பி1 (தையமின்) வைட்டமினின் பரிந்துரைக்கப்பட்ட ஒரு நாள் அளவு பின் வருமாறு:

உடல் ரீதியான பிரச்சினைகள் எதுவும் இல்லையென்றால்:

குழந்தைகளில் இருந்து 18 வயதுக்கு உட்பட்டவர்களுக்கு : 0.2 முதல் 1.4 மில்லி கிராம் (மருத்துவர்களிடம் ஆலோசனை பெற்றே பி1 சப்ளிமெண்ட் எடுக்க வேண்டும்)

18 வயதுக்கு மேல் : ஆண்களுக்கு 1.2 மிகி, பெண்களுக்கு 1.1 மிகி.

பாலூட்டும் தாய்மார்களுக்கு : 1.4 மிகி

தையமின் குறைபாடு இருந்தால்: 50 மிகி வரை மாத்திரையாகவோ அல்லது ஊசி மூலமாகவோ எடுக்க வேண்டும்.

குடிப்பழக்கம் நிறுத்தியவர்களுக்கு அவர்களின் வித்டிராயல் அறிகுறிகளைச் சரிப் படுத்துவதற்காக 100 மிகி ஊசி மூலம் கொடுக்கப்பட வேண்டும்.

நீரிழிவு உள்ளவர்களுக்கு 18 முதல் 20 மில்லி கிராம் வரையில் பி1 தேவை.

தையமின் சப்ளிமெண்ட்டை எடுப்பதன் மூலம் கொசு போன்ற சிறு பூச்சிகள் அணுகுவதில் இருந்து தப்பிக்கலாம். பூண்டு அதிகம் சேர்ப்பதும் கொசுக்கடிகளில் இருந்து தப்பிக்க வைக்கும்.

கீழ்க்கண்ட அறிகுறிகள் தெரிந்தால் உங்கள் உடலில் வைட்டமின் B1 குறைபாடு உள்ளது என்று அர்த்தம்.

.  மனக் குழப்பம்
.  பசியின்மை
.  சோர்வு
.  ஞாபகமறதி
.  தலைவலி
.  எரிச்சலான மற்றும் பதட்டமான மன நிலை
.  மன அழுத்தம்
.  இதயத்துடிப்பு அதிகமாதல்
.  தூக்கமின்மை
.  நரம்புக் கோளாறுகள்

தினசரி ஆல்கஹால் குடிக்கும் பழக்கம் உள்ளவர்களின் மூர்க்கமான செயல்பாடுகள் தையமின் குறைபாட்டினால் ஏற்படுவதே.

கீழ்க்கண்டவைகள் வைட்டமின் பி1 குறைபாட்டை உருவாக்கும்.

.  ஆல்கஹால்
.  ஆண்டிபயாடிக்ஸ்
.  காஃபி மற்றும் டீ
.  சிறுநீரகப் பிரச்சினைக்குக் கொடுக்கப்படும் மருந்துகள்
.  கருத்தடை மாத்திரைகள்
.  சர்க்கரை
.  உணவுகளில் சேர்க்கப்படும் ரசாயனங்கள்
.  ஆஸ்த்துமாவுக்குக் கொடுக்கப்படும் தியோஃபைலின் மருந்துகள்

இதே தையமின் அதிகமாக எடுத்தால் உடலின் வைட்டமின் பி6ஐயும் மக்னீசியம் குறைபாட்டையும் உருவாக்கும்.

வைட்டமின் பி1 உள்ள உணவுகள்:

.  நட்ஸ் எனப்படும் கொட்டை வகைகள்
.  மாமிசம் மற்றும் ஈரல்
.  பூண்டு

வைட்டமின் B1 உள்ள உணவுகளை தினசரி சேர்ப்பதன் மூலம் வைட்டமின் B1 சம்பந்தமான பிரச்சினைகள் உடலுக்கு வராமல் பாதுகாப்போம்.

நன்றி