Saturday, November 23, 2019

பிராய்லர் கோழி

பிராய்லர் கோழி பற்றிய தவறான செய்திகள்...
மீண்டும் மீண்டும் ஒரே பொய்யை சொல்லிக்கொண்டே இருந்தால் உண்மையாகி விடும் என்ற கோயபல்ஸ்  தியரியை  உபயோகித்து தொடர்ந்து ப்ராய்லர்  கோழிகள் மீது அவதூறு பரப்பி வரும் சகோதர சகோதரிகளுக்கான  பதிவு இது. 

நாட்டுக்கோழி என்றால் என்ன??

சுமார் நாற்பது வருடங்களுக்கு முன்பு வரை தமிழகத்தில் ,ப்ராய்லர் யுகம் ஆரம்பிக்கும் முன்பு, வீடுகளில் கோழிகள் வளர்க்கப்படும் . அவை நாம் கொடுக்கும் தானியங்கள், மற்றும் மேய்ந்து கிட்டும் புழுக்கள் போன்றவற்றை உண்டு வாழும். 

நல்ல நாள் பெரிய நாள்களுக்கு அவற்றை அறுத்து உண்போம். 
அவைகளை நாட்டுக்கோழி என்று அழைக்கிறோம். ஆங்கிலத்தில் அவை free range country chicks என்று அழைக்கிறோம். 

---

ப்ராய்லர் கோழிகள் என்றால் என்ன??

உலகத்தின் ஜனத்தொகை மிக வேகத்தில் பல்கிப்பெருகிக்கொண்டே செல்லும் போது அதற்கு ஈடான வேகத்தில் நாம் உணவுகளையும் உற்பத்தி செய்தாக வேண்டிய சூழல் உருவாகிற்று. 

நமது இந்தியாவின் 1970 ஜனத்தொகை 58 கோடிகள்
அடுத்த 50 ஆண்டுகள் கூட ஆகவில்லை , நமது ஜனத்தொகை இருமடங்கு பெருகி தற்போது 120 கோடி என்ற அளவில் இருக்கிறது. 

மேலும் மனிதர்களே புறாக்கூண்டு போன்ற வீடுகளில் வாழப்பழகி விட்டதால், கோழிகளை ஃப்ரீ ரேஞ்சாக வளர்க்க இடமுமில்லை ஆட்களுமில்லை. 

எனவே, நன்றாக வளரும் கோழியினங்களில் இருந்து ஹைப்ரிட் வெரைட்டியாக உருவாக்கப்பட்டதே ப்ராய்லர் கோழியினம்.

இவ்வகை கோழிகள் , கூட்டமாக பண்ணைகளில் அடைக்கப்பட்டு உணவாக ப்ராட்டீன் கால்சியம் கலந்த தீவணங்கள் கொடுக்கப்பட்டு கொழு கொழுவென வளர்க்கப்படுகின்றன. 

சுமார் 6 முதல் 8 வாரங்களில் இந்த கோழியினம் முழு வளர்ச்சி அடைந்து அறுபட தயாராகின்றது. 

---

இப்படி செய்வது நல்லதா??
இந்த கறி மனிதனுக்கு நன்மையா தீமையா?? 

நமது ஜனத்தொகை பசி பட்டினி என்று மாண்டு போவதற்கு மாற்றாக அறிவியலைக் கொண்டு சில மாற்றங்கள் செய்வதில் தவறில்லை. 

தானியங்களிலும் காய்கறி கனி வகைகளிலும் ஹைப்ரிட் வகைகள் இதே காரணத்திற்காக தான் வந்தன. 

பாலின் கொள்முதலைக் கூட்ட பசுக்களுக்கு இடையே கலப்பினம் தோன்றியதும் இதனால் தான். 

மரபணுக்களில் மாற்றங்களை புகுத்துகையில் அது பல்வேறு நல்ல விசயங்களையும் தீமைகளையும் சேர்த்தே கொண்டு வருகிறது. 

ஆனால் நாம் நன்மைகளையும் தீமைகளையும் சீர்தூக்கிப்பார்த்து ஆய்வு செய்ய வேண்டும். 

ப்ராய்லர் கோழி என்பது ஒருவகை கலப்பினம் தான் . 
அந்த கறி நமக்கு தீமை விளைவிப்பதில்லை. 

---

ப்ராய்லர் கோழி நன்றாக வளர்வதற்கு ஈஸ்ட்ரோஜென் ஊசி போடப்படுகிறதா???

 அது ஒரு கட்டுக்கதை

ப்ராய்லர் கோழியோ பண்ணை நாட்டுக்கோழியோ அவை யாவும் பண்ணைகளில் மிக சிறிய இடத்தில் அடைக்கப்பட்டு வளர்க்கப்படுகின்றன.

ஒரு கோழிக்கு சீக்கு வந்தால் மற்ற கோழிகளுக்கு எளிதில் பரவும் வாய்ப்பு உள்ளது . ஆகவே கோழிகளுக்கு ஆண்டிபயாடிக்குகள் ஊசிகளாக போடப்படுகின்றன. ஆனால் இது மனிதனுக்கு பிரச்சனை ஏற்படுத்துவதில்லை.  கோலிஸ்டின்  எனும் ஆண்ட்டிபயாடிக்கை  கடந்த ஜூலை முதல் இந்திய அரசாங்கம் கால்நடைகளில் உபயோகிக்க தடை விதித்து  விட்டது. 

கோழி கறியை சமைத்து உண்பதால் நமக்கு அதன் பாதிப்பு இருப்பதில்லை.

ஈஸ்ட்ரோஜென் ஊசிகள் என்பது ஏன் கட்டுக்கதை என்கிறேன் என்றால்.. அத்தனை கோழிகளுக்கும் ஈஸ்ட்ரோஜென் ஊசி போட்டால் வரும் செலவு அந்த கோழிகளை விற்றால் கிடைக்கும் லாபத்தை விட அதிகமாகும். யாரேனும் நட்டத்துக்கு தொழில் நடத்த முடியுமா? 

மேலும், வெறும் ஈஸ்ட்ரோஜென் போட்டால் உடல் குண்டாகாது.. கூட இன்சுலின் போட வேண்டும் இன்சுலின் தான் வளர்ச்சிக்கான anabolic hormone . அது மட்டும் பத்தாது.. உடல் ஏற கடினமான பயிற்சி செய்ய வேண்டும்.  

பண்ணைகளில் அடைத்து வளர்க்கப்படும் கோழிகள் என்ன உடற்பயிற்சி செய்கின்றன??

ஆகவே, ஈஸ்ட்ரோஜென் ஊசி என்பது பொய் கதை. 
மேலும் அதனால் பெண்கள் சீக்கிரம் பூப்பெய்துகிறார்கள்  என்பதும் கட்டுக்கதை  தான். 

---

இப்போது கிடைக்கும் நாட்டுக்கோழிகள் ஃப்ரீ ரேஞ்ச் நாட்டுக்கோழிகள் தானா??

இப்போது சந்தையில் கிடைக்கும் நாட்டுக்கோழிகள் பெரும்பான்மை ஃப்ரீ ரேஞ்ச் முறையில் வளர்க்கப்படுபவை அல்ல. 
அவையும் பண்ணைகளில் வளர்க்கப்படுபவையே. ஆனால் , அவை ப்ராய்லர் கிடையாது. நமது நாட்டு வகை கோழி இனம். 

அவற்றையும் ப்ராய்லர் கோழிகள் போல பண்ணைகளில் அடைத்து தீவனம் போட்டு தான் வளர்க்கின்றனர். 
-----

ப்ராய்லர் தின்பதால் தான் பெண்கள் சீக்கிரம் வயசுக்கு வருகிறார்களாமே??

இல்லை. இதுவும் கட்டுக்கதை தான் . 
நமக்கு முந்தைய தலைமுறையில் ஒரு பெண் பத்து குழந்தைகளை பெற்றெடுப்பார். 
வீட்டில் ஒருவர் சம்பாதித்து பனிரெண்டு பேர் உண்ண வேண்டும். 
ஆகவே சத்தான உணவுகள் அனைவருக்கும் கிடைத்திருக்க வாய்ப்பில்லை.

இப்போது, வீட்டில் தாய் தந்தை இருவரும் சம்பாதித்து, ஒரு குழந்தை இரு குழந்தை தான் இருப்பதால், சத்துள்ள உணவு கிடைக்கிறது. அதனால் பெண்கள் சீக்கிரம் பூப்பெய்துகின்றனர் 

அடுத்த காரணம்..

அந்த காலத்தில் இத்தனை தீனிகடைகள் கிடையாது. குளிர்பானங்கள் , மெக்டொனால்டு, பர்கர், பாஸ்ட் புட் , சோயா கலந்த உணவுகள் எல்லாம் கிடையாது . அவற்றை முழுப்போடு போடுதால் தான் பெண்கள் சீக்கிரம் பூப்பெய்து கின்றனர். 

----

உண்ணச்சிறந்தது நாட்டுக்கோழியா ப்ராய்லர் கோழியா??

சிறந்தது வீட்டில் வளர்க்கப்பட்ட ஃப்ரீ ரேஞ்ச் நாட்டுக்கோழி தான் 

ஆனால் எளிதாக உண்ணக்கிடைப்பது 
ப்ராய்லர் கோழி தான். 

ப்ராய்லர் கோழிகளை ஓரிடத்தில் அடைத்து வைத்து சத்தான தீவணம் போட்டு நோய் வராமல் பாதுகாத்து வளர்ப்பதால் கொழுத்து வளர்கின்றன. 

இத்தகைய வளர்ச்சி அந்த கோழிகளுக்குத் தான் பிரச்சனையே ஒழிய அதை கறியாக உண்ணும் நமக்கல்ல.

ஏனெனில் நமது உடல் , அதன் கறியை புரதமாகவும், கொழுப்பாகவும் தான் கிரகித்துக்கொள்கிறது. 

பின்குறிப்பு 

கோழியின் உள்ளே இருக்கும் குடல், கல்லீரல், போன்றவற்றை தவிர்ப்பது நல்லது.

ஃபைனல் பாய்ண்ட்

தொடர்ந்து இந்தியாவில் லட்சக்கணக்கில் குழந்தைகள் புரதச்சத்து  குறைபாட்டால்  இறந்து வரும்  சூழ்நிலையில் 
வாரம் ஒரு முறையேனும் ஒரு ஏழை சம்சாரி வீட்டில் வசிக்கும் பிள்ளைககளுக்கு  தரமான புரதம் பெற வழிவகை செய்யும் செலவு குறைவான வழி தான் - ப்ராய்லர் கோழி 

அதையும் வதந்திகள் பரப்பி தடுப்பது நல்லது இல்லை 

இனியும் பழைய வதந்திகளையும் வாட்சப் வதந்திகளையும் நம்பாதீர்கள். 

பரப்பாதீர்கள் 

----
நன்றி 

Dr.A.B.ஃபரூக் அப்துல்லா
பொது நல மருத்துவர் 
சிவகங்கை

No comments:

Post a Comment