Sunday, December 21, 2014

மீன் வளர்ப்பில் அதிக வருமானம்




மீன் வளர்ப்பில் அதிக வருமானம் கிடைப்பதால்மாற்று தொழில் விரும்பும் விவசாயிகள்

தஞ்சாவூர்:தஞ்சாவூர் மாவட்டத்தில், நெல் சாகுபடியை விட, மீன் வளர்ப்பு மூலம், 10 மடங்கு லாபம் கிடைப்பதாக, விவசாயிகள் தெரிவித்தனர்.
தஞ்சை மாவட்டத்தின் பல பகுதிகளில், மீன் வளத்துறை அறிவுரைப்படி, விவசாயிகள் மற்றும் மகளிர் சுயஉதவிக் குழுவினர் பலர் நன்னீர் மீன் வளர்ப்பு தொழிலில் ஈடுபட்டு வருகின்றனர்.
திட்டை பகுதியில், மீன் குஞ்சு உற்பத்தி மற்றும் வளர்ப்பு தொழிலில் ஈடுபட்டு வரும் விவசாயி சுரேஷ்ராஜா கூறியதாவது:
தஞ்சை அடுத்த திட்டையில் கடந்த, 20 ஆண்டுகளாக, மீன் குஞ்சு உற்பத்தி மற்றும் வளர்ப்பு தொழிலில் ஈடுபட்டு வருகிறேன். இதற்காக, ஒரு ஹெக்டேர் விவசாய நிலத்தை ஆழப்படுத்தி குட்டையாக மாற்றியுள்ளேன். அதில் கட்லா, மிர்கால், ரோகு, புல்கெண்டை, பொட்லா ஆகிய நன்னீர் மீன் குஞ்சுகளை உற்பத்தி செய்து, விற்பனை செய்து வருகிறேன். ஒரு ஹெக்டேர் நிலத்தில் நெல் சாகுபடி செய்தால், ஆண்டுக்கு அதிகபட்சமாக, 50 ஆயிரம் ரூபாய் கிடைப்பதே அரிது. ஆனால், ஒரு ஹெக்டேர் பரப்பளவு கொண்ட குட்டையில், மீன் குஞ்சு உற்பத்தி செய்து விற்பனை செய்வதன் மூலம், ஐந்து லட்சம் ரூபாய் வரை லாபம் கிடைக்கிறது. தற்போது கட்லா, 50 ஆயிரம், மிர்கால், 25 ஆயிரம், ரோகு, 70 ஆயிரம், புல்கொண்டை, 35 ஆயிரம், பொட்லா, 12 ஆயிரம் மீன் குஞ்சுகள் விற்பனைக்கு தயாராக உள்ளது.
மீன் குஞ்சு உற்பத்தி செய்யவும், வளர்க்கவும் தேசிய வேளாண் அபிவிருத்தி திட்டத்தில், மீன்வளத்துறை மூலம் ஆண்டுக்கு, ஒரு லட்சத்து, 12 ஆயிரத்து, 500 ரூபாய் வீதம் மானியம் கிடைக்கிறது. நன்னீர் மீன் வளர்ப்பு லாபகராமானது மட்டுமின்றி அவசியமானது என்பதால், இது குறித்து விவசாயிகள் மற்றும் மகளிர் சுயஉதவிக் குழுவினர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறேன்.
நன்னீர் மீன்வளர்ப்பு தொழிலில் ஈடுபட்டுவரும் கார்த்திகாதேவி கூறியதாவது:
திட்டை பகுதியில் கடந்த, ஐந்து ஆண்டுகளாக மீன் குஞ்சு உற்பத்தி மற்றும் வளர்ப்பு தொழிலில் ஈடுபட்டு வருகிறேன். ஒரு ஹெக்டேர் நிலத்தில் மீன் வளர்ப்பதற்காக, மீன் குஞ்சுகள் வாங்கவும், மீன் தீவனம் மற்றும் தொழிலாளர்களுக்கு கூலி வழங்கியது உட்பட, ஒரு லட்சத்து, 73 ஆயிரம் செலவானது. இவை தவிர, குளம் வெட்டிய வகையில் நான்கு லட்சத்து, 17 ஆயிரம் ரூபாய் செலவழித்துள்ளேன். ஆறு மாதத்தில் மீன் குஞ்சு விற்பனை மூலம், ஒரு லட்சத்து ஐந்தாயிரம் ரூபாய், வளர்ந்த மீன் விற்பனை மூலம், ஐந்து லட்சத்து 65 ஆயிரம் வருமானம் கிடைத்தது.
மீன் குஞ்சு உற்பத்தி மற்றும் வளர்ப்புக்காக, தேசிய புரத உணவு செறிவூட்டு திட்டத்தில், அரசு மானியமாக, ஒரு லட்சத்து, 54 ஆயிரம் வழங்கியது. நெல் சாகுபடியை விட அதிக லாபம் கிடைப்பதால், மீன் குஞ்சு உற்பத்தி மற்றும் வளர்ப்பில், நானும் என் குடும்பத்தினரும் அதிக கவனம் செலுத்தி வருகிறோம்.
அதே பகுதியில் மீன் வளர்ப்பு தொழிலில் ஈடுபட்டுவரும் விவசாயி பழனிவேல், மகளிர் சுயஉதவிக்குழு உறுப்பினர் ஜெயமாலினி ஆகியோரும் மீன் வளர்ப்பு தொழிலில், பல மடங்கு லாபம் கிடைப்பதாக தெரிவித்தனர்.

No comments:

Post a Comment