Tuesday, December 2, 2025

வெளிநாடுகளில் பணிபுரியும் அனைவருக்குமே விடுமுறையில் ஊருக்கு செல்வது


வெளிநாடுகளில் பணிபுரியும் அனைவருக்குமே விடுமுறையில் ஊருக்கு செல்வது அலாதி இன்பம் தான். சொல்லப்போனால் அந்த விடுமுறையை நோக்கி தான் எல்லா நாட்களும் நகரும். ஓய்வெடுக்கலாம் என்ற எண்ணத்தோடு ஊருக்கு போவோம். ஆனால் ஊரும் வீடும் நம்மை எப்போதும் பிஸியாகவே வைத்திருக்கும். 

வெளிநாட்டில் இருக்கையில், நிமிடங்கள் ஒவ்வொன்றும் வருடங்களாக கழியும். ஆனால் ஊரில் இருக்கையில் வருடங்களும் நிமிடங்களாக கழிந்து மறைந்து விடும். ஆம் நேரமானது,  சிறகு முளைத்த வண்ணத்துப்பூச்சி போல பறந்துக்கொண்டேயிருக்கும்.

ஒவ்வொரு முறை விடுமுறைக்கு செல்லுகையிலும் முதல் முறை போலவே தோன்றும். தெரிந்த விஷயத்தை கூட பலமுறை நண்பர்களிடத்தில் கேட்டு உறுதிப்படுத்திக்கொண்டேயிருப்போம்.

விடுமுறை ஒப்புதல் கிடைத்தது முதல் பணிக்கு திரும்பும் நாள் வரை ஒவ்வொன்றும் மறக்க முடியாத நினைவுகளை தரக்கூடிய விலைமதிப்பில்லா பொக்கிஷங்கள். அதுவரை ராக்கெட் வேகத்தில் நகரும் நாட்கள், விடுமுறை தேதி அறிந்ததும்   ஆமை வேகத்தில் நகரும்.

கடிகார முட்களை யானைகளை கொண்டு நகர்த்தலாமா? என யோசிக்க வைக்கும் !!! 
    
வீட்ட்டார்களுக்கும் நண்பர்களுக்கும் தேவையான பொருட்கள் வாங்கி நண்பர்கள் தரும் பார்சல்களையும் வாங்கி அதனை தனித்தனியாக பெட்டிக் கட்டி , அனுமதிக்கப்பட்ட அளவை விட அதிகப்படியான எடையிருந்தால் கார்கோ போட்டு விட்டதும் ஓரளவு ரிலாக்ஸாயிடும்.

கோடாளி தைலம், தங்க பஸ்பம், பேரீத்தம் பழம், பாதாம், பிஸ்தா, முந்திரி பருப்பு, கிழியோபாட்ரா சோப்பு, மாடு சாக்லேட், தேங்காய் பூ சாக்லேட், நிடோ பால் மாவு, இந்தோனேசியா கைலி, பச்சை பட்டை பெல்ட், பிறைப் போட்ட துப்பட்டா, ஜரிகை கோடு சேலை, மார்ட்டின் சட்டை, வலை பனியன், ஸ்பான்ச் செருப்பு ( உம்ரா செருப்பு ), கேஸியோ வாட்ச்,ஜன்னத்துல் பிர்தவுஸ்  அத்தர், யார்லி பவுடர், டேங்க் பொடி, ப்ரூட், ஒன் மேன் ஷோ, ராயல் மிராஜ் சென்ட் என சொந்தக்காரர்களுக்கு விளம்புவதற்க்கென்று தனி பட்டியல் உண்டு. 

இன்றைய கால பட்டியலில் கைப்பேசி, மின்னணு சாதனங்கள், ஆன்லைன் ஷாப்பிங் சாதனங்கள் புர்கா என பல பொருட்கள் சேர்ந்துள்ளன. 

என்னதான் விலை கூடின டிராலி வைத்திருந்தாலும், வாங்கிய பொருட்களை நேர்த்தியாகவும், பாதுகாப்பாகவும் அடுக்க அட்டை பெட்டி தான் வசதியாக இருக்கும். அதுபோக டிராலி மூன்று, நாலு கிலோ இருக்கும். அட்டை பெட்டியில் கொண்டு போனால், அந்த மூணு, நாலு கிலோவிற்கும் சாமான் வாங்கலாம்..

ஒவ்வொரு அறையிலும் பெட்டி கட்டுவதில் நிபுணர் ஒருவர் இருப்பார். அட்டைப்பெட்டியில் எல்லா பொருட்களையும் நேர்த்தியாகவும் பாதுகாப்பாகவும் அடுக்கி பக்காவாக கயிறு போட்டுக் கட்டி பெட்டியை செப்பு மாதிரி தயார் செய்து விடுவார்கள். அதிலும் 

அந்த கயிறு கட்டும் ஸ்டைல் வேற லெவலில் இருக்கும். பெட்டியை சுற்றிலும் நைலான் கயிறுக்கொண்டு வலை போல பின்னி விடுவார்கள். பெட்டியை தூக்குவதற்கு ஏதுவாக கைப்பிடி முதற்கொண்டு பின்னி விடுவார்கள்.  அதனை பார்ப்பதற்கே அத்தனை அழகு. ஊரில் சென்று அதனை பிரிக்கும் பொழுது கட்டு சீக்கிரம் அவிழ்ந்து விட்டால் கட்டியவருக்கு வாழ்த்தும் , கட்டை பிரிப்பதில் சிரமம் ஏற்பட்டால் கட்டியவருக்கு திட்டும் கிடைக்கும். 

இப்போதெல்லாம் பெரும்பாலும் கயிறு காட்டுவதில்லை. கண்ணாடி பேப்பர் வைத்து Wrap செய்து விடுகிறார்கள். 

விடுமுறைக்கு முந்திய நாள் விசேஷ சிகையலங்காரம் எல்லாம் முடித்து கண்மூடினால்,  தாமதமாக வரும்  கனவில் கூட உறவு மற்றும் ஊர் நினைவுகள் தான். ஆம் எண்ணத்தின் பிரதிபலிப்பு தானே கனவுகள். 

அறையிலேயே பயணத்தொழுகை தொழுது விட்டு மூன்று மணிநேரம் நேரம் முன்பே விமான நிலையத்தை நண்பர்கள் புடைசூழவோ இல்லை தனியாகவோ அடைவோம். நண்பர்கள் வந்தால் அவர்களே தள்ளுவண்டியை எடுத்து பெட்டிகளை அடுக்கி நம்மை புது மாப்பிள்ளை போல பாவித்து , போர்டிங் பாஸ் எடுக்கும் கவுண்டர் வரை தள்ளிக்கொண்டு வருவார்கள்.  கூட்டம் குறைவாகவுள்ள வரிசையில் சென்று ஐக்கியமாகி,  குணா கமல் அபிராமியை காணுவது போல நாம் அதிகாரியை  பார்த்துக்கொண்டே நகர்வோம். 

அதுவரை வேகமாக வேலை பார்த்தவர் , தேநீர் குடிக்கவோ இல்லை இயற்கை தேவைகளை நிறைவேற்றவோ எழுந்து சென்று விடுகையில் நமக்கு வரும் கடுப்பையும் எரிச்சலையும் சில பல நல்ல வார்த்தைகள் மூலம் வெளிப்படுத்தி விட்டு அமைதியாக நம்முடைய முறைக்கு காத்திருக்கும் நேரம், ஆசை சாக்லேட் கவர் மாதிரி நீண்டுக்கொண்டே போகும். 

ஒரு வழியாக போர்டிங் காரியங்கள் முடிந்து நண்பர்களுடன் புகைப்படங்கள் எடுத்து பின்னர் இமிக்கிரேஷன் பரிசோதனை எல்லாம் சுமூகமாக முடிந்ததும் நண்பர்களை தொலைபேசியில் அழைத்து எல்லாம் நல்ல படியாக முடிந்தது என தகவலை பரிமாறி பின்னர் போர்டிங் பாஸில் குறிப்பிடப்பட்ட நுழைவு வாயிலை அடைந்து , ஓரமாக ஒரு இருக்கையை தேடி பிடித்து அமர்ந்து நம்மை கொஞ்சம் ஆசுவாசப்படுத்திக் கொள்வோம். 

காத்திருப்பு அறையில் நமக்கு தெரிந்த யாராவது இருக்கிறார்களாவென்று ஒரு நோட்டம் விட்டுட்டு, இருந்தால் அவர்களோடு பேசிக்கொண்டிருப்போம்.  இல்லையென்றால் 

நண்பர்களுடன் எடுத்த புகைப்படத்தை முகப்புத்தகத்திலும் புலன குழுமத்திலும் பகிர்ந்து விடுமுறை செய்தியை உலகத்துக்கே சொல்லி, அதில் நண்பர்கள் பதிவிடும் மாஷா அல்லாஹ் , பீ அமானில்லாஹ் உள்ளிட்ட  பின்னூட்டங்களுக்கு பதிலளித்து கொண்டு கைப்பேசியின் சார்ஜுடன் சேர்த்து நேரத்தையும் கரைத்துக் கொண்டிருப்போம் . 

ஒரு இலக்கிலிருந்து பயணிகளை ஏற்றி வந்த இயந்திர பறவை அவர்களை இறக்கி விட்டு நம்மை தூக்கிச்செல்ல தயாராகயிருக்கும். அதனை அறிவிப்பு மூலம் உறுதி செய்தபின் கால்கள் அனிச்சையாக விமானத்தை நோக்கி நகரும். இறக்கைகளை விரித்து நிற்பது விமானம் மட்டுமில்ல !! நம் எண்ணங்களும் தான் !!! 

அபு பர்ஹானா

No comments:

Post a Comment