Monday, November 24, 2014

இரண்டாவது வருமானம்... கைகொடுக்கும் ஈஸி ஃபார்முலா!

இரண்டாவது வருமானம்... கைகொடுக்கும் ஈஸி ஃபார்முலா!
இரா.ரூபாவதி படம்: ப.சரவணகுமார்
இன்றைய சூழ்நிலையில் ஒருவரின் வருமானத்தை வைத்து குடும்பத் தேவைகள் அனைத்தையும் நிறைவேற்றுவது கொஞ்சம் சிரமமான காரியம் தான். எனவேதான் கணவன், மனைவி இருவரும் வேலைக்குப் போகவேண்டிய சூழ்நிலையில் பல குடும்பங்கள் உள்ளன. இன்றைக்கு கிடைக்கக்கூடிய வருமானம், இன்றைய தேவை களை மட்டுமே நிறைவேற்றக் கூடியதாக உள்ளது. எதிர்காலத் தேவைகளை நிறைவேற்றுகிற மாதிரியான வருமானம் இன்றைக்கு பலருக்கும் இல்லை.
ஆனால், குடும்பத்தின் தேவை என்பது நாளுக்குநாள் அதிகமாகிக்கொண்டே செல்கிறது. குழந்தைகளின் உயர்கல்வி, திருமணம், மருத்துவச் செலவுகள் போன்ற தேவைகளை நிறைவேற்ற கடன் வாங்கவேண்டிய நிலை ஏற்படு கிறது. இதுபோன்ற சமயங்களில் ஏற்கெனவே கிடைத்துவரும் சம்பளம் தவிர, கூடுதலாக இன்னொரு வருமானம், அதாவது இரண்டாவது வருமானம் கிடைத்தால் நன்றாக இருக்கும் எனத் தோன்றும். இரண்டாவது வருமானம் கிடைப்பதற்கான எளிய வழிமுறை களைச் சொல்ல முடியுமா என நிதி ஆலோசகர் யூ.என்.சுபாஷிடம் கேட்டோம். விளக்கமாக எடுத்துச் சொன்னார் அவர்.
“இன்றைக்கு, வேலைக்குப் போகிறவர்களில் பெரும்பாலானவர்கள் கூடுதல் வருமானத்துக்கான வழிகள் என்ன என்பதைத் தேடிக்கொண்டுதான் இருக்கிறார்கள். இதன் விளைவாக, இன்ஷூரன்ஸ் ஏஜென்ட், எம்எல்எம் பிசினஸ் போன்றவற்றைச் செய்கிறார்கள். புதுமையாக யோசித்து அதைச் செயல்படுத்த முடியாதவர்கள் இதுமாதிரியான ரிஸ்க் குறைந்த வேலைகளைச் செய்வதன் மூலம் ஓரளவுக்கு சம்பாதிக்க முடியும்.
இதுபோன்ற பல வாய்ப்புகள் இன்று உள்ளன. அதாவது, அனிமேஷன் தெரிந்தவர்கள் அலுவலக வேலை முடிந்தவுடன், பகுதி நேரமாக வேறு சில வேலைகளை  செய்வதன் மூலம் கூடுதல் வருமானம் ஈட்ட முடியும். இதன் மூலமாகக் கிடைக்கும் பணத்தை இன்றைய தேவைக்குப் பயன்படுத்தாமல் எதிர்காலத்தில் இரண்டாவது வருமானத்துக்காக முதலீடு செய்யலாம்.
இப்போது நீங்கள் சம்பாதிக்கும் பணம் தவிர, கூடுதலாக மாதம் 5 ஆயிரம் ரூபாய் சம்பாதிக்க முடியும் எனில், அந்தப் பணத்தை சுமார் 12% வருமானம் தரக்கூடிய மியூச்சுவல் ஃபண்ட் திட்டங் களில் அடுத்த இருபது வருடங்களுக்கு முதலீடு செய்தால், சுமார் 80 லட்சம் ரூபாய் கிடைக்கும். இந்தப் பணத்தைத் தேவைப்படும்போது எடுத்து வங்கி ஃபிக்ஸட் டெபாசிட்டில் முதலீடு செய்தால், வருடத்துக்கு ரூ.7 லட்சம் ரூபாய் கிடைக்கும். ஆக, மாதத்துக்கு 60-70 ஆயிரம் ரூபாய் கிடைக்க வாய்ப்புள்ளது.
ஹாபி:
சிலருக்கு பாட்டு, நடனம், செஸ் போன்ற ஹாபிகள் இருக்கும். இதன் மூலமாகவும் வருமானத்தை ஈட்ட முடியும். கவுரவம் பார்க்காமல் பக்கத்து வீடுகளில் இருக்கும் குழந்தைகளுக்கு இதைச் சொல்லிக்கொடுத்து குறைந்தபட்ச வருமானம் சம்பாதிக்க முடியும். அதாவது, மாதம் ஆயிரம் ரூபாய் கிடைத்தால்கூட அதை எஸ்ஐபி முறையில் மியூச்சுவல் ஃபண்டில் முதலீடு செய்யலாம். 12 சதவிகித வருமானம் கிடைக்கும் திட்டங்களில் அடுத்த 20 வருடங்களுக்கு முதலீடு செய்தால் சுமார் 10 லட்சம் ரூபாய் கிடைக்க வாய்ப்புள்ளது.
கார் மூலம் வருமானம்:
பெரும்பாலான வீடுகளில் கார் என்பது தவிர்க்க முடியாத ஒன்றாக மாறிவிட்டது. ஆனால், காரை தினசரி பயன்படுத்துபவர்களின் எண்ணிக்கை மிகவும் குறைவு. இந்த காரை வாடகைக்கு விடுவதன் மூலமாக குறிப்பிட்ட அளவு தொகை வருமானமாக ஒவ்வொரு மாதமும் கிடைக்க வாய்ப்புள்ளது. மேலும், நம்பகமான டிராவல் அல்லது நிறுவனத்தைக் கண்டுபிடித்து வாடகைக்கு விடுவது நல்லது.
விவசாய நிலம் மூலம் வருமானம்:
சென்னை போன்ற பெருநகரங்களில் வாழ்க்கையை அமைத்துக் கொண்டவர் களுக்கு பூர்வீக சொத்து அல்லது முதலீடு நோக்கில் வாங்கி வைத்த விவசாய நிலம் இருந்தால், அதில் நீண்ட கால பயிர்களைப் பயிரிடுவதன் மூலமாக குறிப்பிட்ட அளவு வருமானம் கிடைக்க வாய்ப்புள்ளது. சவுக்கு, தென்னை மற்றும் மரப் பயிர்களைப் பயிரிட்டு அதன் மூலமாக வருமானம் ஈட்ட முயற்சி செய்யலாம். பண்ணை விவசாயம், இயற்கை விவசாயத்தின் மூலமாகவும் குறிப்பிட்ட அளவு வருமானம் ஈட்ட முடியும்.
வீடு மூலம் வருமானம்:
ஏற்கெனவே வீடு உள்ளவர்கள் அல்லது இரண்டு வீடு வாங்க தகுதி உடையவர்கள் அதன் மூலமாகவும் வருமானம் ஈட்ட முடியும். ஒரு வீட்டை வாடகைக்கு விடுவதன் மூலமாக ஒவ்வொரு மாதமும் வாடகை  கிடைக்க வாய்ப்புள்ளது. ஆனால், வீட்டின் மூலமாகக் கிடைக்கும் வருமானம் அதிக அளவில் இருக்கும் என்று சொல்ல முடியாது.  அதாவது, ஒரு கோடி ரூபாய் மதிப்புடைய வீடு இருக்கிறது என வைத்துக்கொள்வோம். அந்த வீட்டை வாடகை விடுவதன் மூலம் அதிகபட்சமாக மாதத்துக்கு 15-20 ஆயிரம் ரூபாய்தான் வருமானம் கிடைக்கும். இதுவே, ஒரு கோடி ரூபாயை 8% வருமானம் தரக்கூடிய ஃபிக்ஸட் டெபாசிட்டில் முதலீடு செய்தால், வருடத்துக்கு ரூ.9 லட்சம் வருமானம் கிடைக்கும். ஆனால், வாடகை மூலமாக வருடத்துக்கு அதிகபட்சமாக ரூ.2.4 லட்சம்தான் கிடைக்கும்.
காலி மனை மூலம் வருமானம்:
நகர மைய பகுதி அல்லது முக்கியமான இடத்தில் காலி மனை வைத்திருக்கிறீர்கள். அதில் தற்போது வீடு கட்டுவதற்கு வசதி இல்லை என்றால் அந்த காலி இடத்தில் கார் நிறுத்த, குடோன் அமைக்க வாடகைக்கு விடுவதன் மூலம் வருமானம் ஈட்டலாம். இப்படி பல வழிகளில் வருமானத்தை ஈட்ட முடியும்” என்றார்.
கூடுதலாக பணம் சம்பாதிக்க இன்றைய நிலையில் பல வழிகள் உள்ளன. இந்த வழிகளைப் பயன்படுத்தி இரண்டாவது வருமானத்தை எளிதாகப் பெறலாம். எதிர்காலத் தேவைகளையும் நிறைவேற்றிக் கொள்ளலாம்.

No comments:

Post a Comment