Thursday, July 24, 2014

மறைந்து கிடக்கும் மர்மம்!

Latent mystery!
ஹோம் கார்டன்வீட்டுத்தோட்டம் அமைக்கும் முன் சில முக்கிய விஷயங்களை கவனத்தில் கொள்ள வேண்டும். சுற்றுச்சூழல் மாசு மற்றும் பாதுகாப்பு, நாம் வளர்க்கவிருக்கும் செடிகளின் நீர் தேவை, வறட்சி தாங்கி வளரும் திறன், எளிய பராமரிப்பு, அதன் சத்து மற்றும் சந்தை மதிப்பு, வளர்க்கப்படும் காலம் என நீண்ட பட்டியலிடலாம். இவற்றுள் முக்கியமானது செடிகளின் நீர் தேவை! இதுபற்றி விரிவாக விளக்குகிறார் தோட்டக்கலை நிபுணர் பா.வின்சென்ட்.

நீர் மேலாண்மை மூலம் நீர் தேவையை சிறப்பாக நிர்வாகம் செய்யலாம்.


1. மழை நீர் சேமிப்பு
    மழைக் காலங்களில் கிடைக்கின்ற நீரைச் சேமித்து, பின் செடிகளுக்குத் தருவது. மழைநீர் செடிகளுக்கு உகந்ததே.

2. சொட்டுநீர் பாசனம்
    மிகக் குறைந்த செலவில் தெளிப்பு நீர் அல்லது சொட்டுநீர் பாசனக் கருவிகளை அமைப்பதன் மூலம் நீர் சிக்கனத்தை நடைமுறைப்படுத்தலாம். வேனிற்காலங்களில் ஒரு சிறிய குழாயை வேரின் அருகில் அமைத்து, இவற்றில் தண்ணீர் ஊற்றினால் வெகுவாக நீர் தேவையை குறைக்க இயலும்.

3. மூடாக்கு இடுதல்
    காய்ந்த இலைச்சருகுகளை மண்ணின் மேல் இடுவதால், நீர் ஆவியாதல் தடுக்கப்பட்டு மண்ணின் ஈரம் காக்கப்படுவதால், செடிகள் நன்கு வளரும். அவை மக்கும் போது உரமாக மாறிவிடும்.

4. வறட்சியை தாங்கி வளரும் தாவரங்களைத் தேர்ந்தெடுத்தல்
    பொதுவாக நீர் தேவை குறைந்த அல்லது வறட்சி தாங்கி வளரும் முருங்கை, தவசிக்கீரை, லச்சை கெட்ட கீரை, கறிவேப்பிலை, அகத்தி, தானியக்கீரை, சிறுதானியங்கள் போன்றவற்றை வளர்க்கும்போது நீர் தேவை சற்று குறைவதோடு பராமரிப்பும் எளிமையாகிறது.

5. காய்ச்சலும் பாய்ச்சலும் முறை
    நகரங்களில் நீர் பற்றாக்குறை இருக்கும் போது, கோடை காலத்தில் செடிகளுக்கு காய்ச்சலும் பாய்ச்சலும் முறையில் நீர் தந்தால் சிக்கனம் என்பதோடு, நமக்குப் பயன் தரும் செடிகளும் ஆரோக்கியமாக இருக்கும். அச்செடிகளோடு அதிகமாக நீரை விரும்பும் மென்மையான தண்டுகளுடைய செடிகளையும் சேர்த்தே வளர்ப்பது நல்லது. ஈரப்பதம் தொட்டியிலோ மண்ணிலோ முற்றிலும் உலரத் தொடங்கும் முன் இந்தச் செடிகளின் இலைகள் தளர்ந்து வளைந்து கீழே தொங்க ஆரம்பிக்கும். அப்போது நீர் விட்டால் சற்று நேரத்தில் பழைய நிலைமையை அடைந்துவிடும். நீர் ஊற்றிக்கொண்டே இருக்க வேண்டிய அவசியம் இல்லை. பால்சம், கோலிஸ் வகை செடிகள் இதற்கு ஏற்றவை.

6. டைமர் கருவி மூலம் நீர் பாய்ச்சும் நேரம் மற்றும் அளவைக் கட்டுப்படுத்துதல்
    இந்த நேரக்கருவியில் ஒரு நாளைக்கு எவ்வளவு முறை நீர் விடவேண்டும் அல்லது எவ்வளவு நாட்களுக்கு ஒரு முறை நீர் விடவேண்டும் என்று பதிவு செய்தால், அதன்படி நீர் பாய்ச்சுதல் நடைபெறும். எவ்வளவு நாட்கள் வேண்டுமானாலும் வெளியூர் பயணம் செய்யும் வாய்ப்பு நமக்குக் கிடைக்கும். இந்தக் கருவியே நமது விருப்பப்படி செடிகளுக்கு நீர் பாய்ச்சிவிடும்.

7. தென்னைநார் கழிவுகள் பயன்பாடு
    தென்னைநார் கழிவுகளை பயன்படுத்தும்போது நீரை உறிஞ்சி தக்கவைத்துக் கொள்வதோடு, மண்ணும் பொலபொலவென இருப்பதால் வேர்கள் நன்கு வளர்ந்து, செடிகள் ஆரோக்கியமாக இருக்கும். வெர்சுவல் வாட்டர் என்னும் மறைந்துள்ள நீர் விவசாயத்திலும் தொழிற்சாலைகளிலும், ஒவ்வொரு பொருளுக்கும் பின்னால் அதனை உற்பத்தி செய்யத் தேவைப்படும் நீரை ‘மறைந்துள்ள நீர்’  (க்ஷிவீக்ஷீtuணீறீ கீணீtமீக்ஷீ)   என்கிறோம். இந்த வெர்சுவல் வாட்டர் முறையை உலகுக்கு உணர்த்தியவர் லண்டன் கிங்ஸ் கல்லூரிப் பேராசிரியர் ஜான் அந்தோணி அலன்.

வெர்சுவல் வாட்டர் அடிப்படையிலேயே நமது வீட்டுக்குத் தேவையான செடிகளை வளர்க்க வேண்டும். மேலைநாடுகள் இம்முறையை பயன்படுத்தி ஏற்றுமதி, இறக்குமதி கணக்கீடு களைக்கூடச் செய்கின்றனர். அதற்கேற்ப அவர்களால் பயிர் முறையை மாற்றி நீர் சேமிப்பு செய்கின்றனர். அல்லது நீர் அதிகமாக எடுக்கும் உணவுப் பொருட்களை இறக்குமதி செய்கின்றனர். வருங்காலத்தில் இந்த வெர்சுவல் வாட்டர் முறைதான் விவசாயத்தில் பெரும்பங்கு ஆற்றப்போகிறது!

ஒவ்வொரு உணவுப்பொருள் உற்பத்திக்கும்

தேவைப்படும் நீரின் அளவு! 


அரிசி                     1 கிலோ     3,400 லிட்டர்

கோழி இறைச்சி     1 கிலோ      3,900 லிட்டர்

மக்காச்சோளம்     1 கிலோ      900 லிட்டர்

கோதுமை                  1 கிலோ      1,300 லிட்டர்

காபி                 125 மி.லி.     140 லிட்டர்

டீ                250 மி.லி.     30 லிட்டர்

ரொட்டித்துண்டு     1     50 லிட்டர்

வாழைப்பழம்     1     40 லிட்டர்

No comments:

Post a Comment