Thursday, July 24, 2014

நீங்களே தயாரிக்கலாம் இயற்கை உரம்!

To produce a natural fertilizer for yourself!
ஹோம் கார்டன்

இன்றைய வீட்டுத் தோட்டத்தை பராமரித்து விளைச்சலை எடுக்க வேண்டுமானால் பயிரின் வளர்ச்சிக்குத் தேவையான சத்துகளை அறிந்து அளிக்க  வேண்டும். 1960களுக்குப் பின் ரசாயன உரங்கள் பெருகி னாலும், இப்போது சூழல் மாறுகிறது. உலகெங்கும் பல்வேறு காரணங்களினால் ரசாயன  உபயோகம் குறைக்கப்பட்டு, இயற்கை உரங்கள் மக்களிடையே பிரபலமாகி வருகிறது’’ என்கிற தோட்டக்கலை நிபுணர் பா.வின்சென்ட் இது பற்றி  விரிவாகப் பேசுகிறார்... 

மண்ணுக்கு மாற்றுப் பொருட்கள் வந்தபின் அவற்றை வளமாக்குவதில் இயற்கை உரங்கள் பெரும் பங்கு வகிக்கின்றன. பொதுவாக தாவரங்களுக்கு  ழிறிரி என்று அழைக்கப்படும் தழைச்சத்து-மணிச்சத்து-சாம்பல் சத்து அதிகம் தேவை. இவை தவிர கால்சியம், மெக்னீசியம், சல்பர், இரும்பு, மாங்கனீசு,  துத்தநாகம், போரான் போன்ற வையும் தேவை. இவற்றை நாம் எளிய வளர்ச்சி ஊக்கிகள் மூலமே பெறலாம். இவற்றை மேம்படுத்தி அதிக பலன் பெற  நுண்ணுயிர் உரங்களும் உதவும்.

மண்புழு உரம், பஞ்சகவ்யம், அமிர்த கரைசல், ஜீவாமிர்தம், மீன் கரைசல், தேமோர், அரப்பு மோர் கரைசல்... இப்படி இதற்கு ஒரு நீண்ட அட்டவணையே  தரலாம்! பெரும்பாலும் கிராமப்புறங்களில் கால்நடைகள் இருப்பதால் மண்புழு உரம், பஞ்சகவ்யம், அமிர்த கரைசல், ஜீவாமிர்தம் போன்றவைற்றை  எளிதாகத் தயாரிக்கலாம். நகரத்தில் இருப்பவர்கள் சமையலறைக் கழிவிலிருந்து மண்புழு உரம் தயாரிக்கலாம் (சற்று கவனம் தேவை). தேங்காய்ப்  பாலுடன் இளநீர், புளித்த மோர் ஊற்றி 7 நாட்கள் நொதிக்க வைத்தால் தேமோர் கரைசல் தயார். 

அரப்புத்தூளுடன் மோர், இளநீர் சேர்த்து 10 நாட்கள் நொதிக்க வைத்தால் அரப்பு மோர் கரைசல் தயார்.இவற்றை குறைந்த அளவில் அதிக நீருடன்  கலந்து செடிகளுக்கு அளிக்க வேண்டும். மீன் கரைசல் கூட மீன் கழிவுகளுடன் கரும்புச் சர்க்கரை சேர்த்து 20 நாட்கள் நொதிக்க வைத்தால்  தயாராகிவிடும். நொதிக்கும் போது ஆரம்ப நாட்களில் துர்வாசம், பக்குவம் எனப் பார்த்து செய்ய வேண்டும். இவை அனைத்தும் இப்போது  அங்காடிகளிலும் கிடைக்கின்றன.

நுண்ணுயிர் உரங்கள்

மண்ணில் வாழும் நுண்ணுயிரிகளில் சில வகைகள் நன்மை தருபவை. இவற்றில் சில நுண்ணுயிர்கள் பயிருக்குத் தேவையான தழைச் சத்தை  (Nitrogen) அளிக்கும் வகையில் வளி மண்டலத்தில் உள்ள வாயுவை உரமாக மாற்றும் திறன் படைத்தவை. சில மண்ணில் பயிருக்கு பயன் படாத  வகையில் இருக்கும் சத்தை பயன்படும் வகையில் மாற்றி தரும். சில நுண்ணுயிரிகள் பயிர் வளர்ச்சி ஊக்கியை உற்பத்தி செய்து பயிரின் வளர்ச்சிக்கு  உதவும்.

ரைசோபியம்

வளிமண்டலத்தில் 78% தழைச்சத்து இருந்தாலும், பயிரினால் நேரடியாக அச் சத்தை எடுக்க இயலாது. ரைசோபியம் என்பது பயிறு வகை செடிகளின்,  வேர்களின் உள்ளே முடிச்சு ஏற்படுத்தி அதனுள் வாழும். இந்த வகை உறவால் பயிர் மற்றும் நுண்ணுயிர் இரண்டும் பயன்பெறுகின்றன.  நுண்ணுயிருக்கு உணவும் இடமும் கிடைக்கிறது. நன்றிக்கடனாக - அதனுள் வாழும் ரைசோபியம் வளிமண்டலத்தில் உள்ள தழைச்சத்தை உரமாக்கி  பயிருக்குக் கிடைக்கச் செய்கிறது.

அசோஸ்பைரில்லம்

இவை பெரும்பாலான பயிர்களின் வேருக்கு அருகில் வளர்ந்து வளிமண்டல தழைச்சத்தை நிலைப்படுத்துவதுடன், வேர்களை நன்கு வளரச் செய்யும்  ஊக்கிகளையும் உற்பத்தி செய்கிறது.

பாஸ்போ பாக்டீரியா

மண்ணிலுள்ள மணிச்சத்தை (phosphorus) கரைத்து பயிருக்குக் கொடுக்கும். மற்ற உரங்களின் தேவையை குறைக்கும். இந்த வகை  நுண்ணுயிர்களில் சில, திரவம் அல்லது பொடி வடிவங்களில் அங்காடிகளில் கிடைக்கின்றன.

இதர வகைகள்... 

0.1% பிராசினோலைட்ஸ் என்னும் ஊக்கி ஒரு வகை கடுகுச்செடியின் மகரந்தத்திலிருந்து எடுக்கப்படுகிறது. ஆரோக்கியமான வளர்ச்சியை செடிக்கு  அளிப்பதோடு  பூ, பிஞ்சு உதிர்வதைத் தடுத்து, அதன் நிறம், தரம் ஆகியவற்றை அதிகரிக்கச் செய்கிறது. தாவரத்தின் நோய் எதிர்ப்புத் தன்மையை  அதிகரிக்கச் செய்கிறது.

E.M . என்னும் திற நுண்ணுயிரி 

Effective microorganisms என்பதின் சுருக்கமே ணி.வி. ஜப்பான் நாட்டில் 1980களில் அறிமுகப்படுத்தப்பட்டது இந்த திற நுண்ணுயிரி. இன்று 120  நாடுகளில் விவசாயம், சுற்றுச்சூழல், கால்நடைப் பராமரிப்பு துறைகளில் பயன்படுகிறது. இது இயற்கை இடுபொருள் என Ecocert அமைப்பு சான்று  தந்துள்ளது. E.M 1 என்பது உறங்கும் நிலையிலுள்ள நன்மை செய்யும் நுண்ணுயிர்களின் தொகுப்பாகும். இது நொதித்த பிறகே பயன்படுத்தப்பட  வேண்டும். 1:1:20 என்ற விகிதத்தில் E.M.1 : வெல்லம்(அ)கரும்புச் சர்க்கரை: குளோரின் கலக்காத நீரில் 5-10 நாட்கள் பிளாஸ்டிக் கலன்களில்  காற்று புகாமல் நிழலில் நொதிக்க வைக்க E.M 2 தயார். 

உருவாகும் வாயுவை வெளியேற்ற தினமும் 1 நொடி மூடியை திறந்து மூட வேண்டும். ஒரு மாதத்துக்குள் பயன்படுத்திவிட வேண்டும். நொதிக்க  வைக்க கண்ணாடிக் கலன்களை தவிர்க்கவும். வீட்டின் சமையலறை, குளியலறை போன்ற இடங்களிலும் E.M 2 உதவும். இவ்விடங்கள் விரைவாக  உலர்ந்து, ஈரமின்றி இருப்பதுடன் ஈக்களும் வராது... துர்வாசனையும் நீங்கும். வீடு துடைப்பதற்கும் உபயோகிக்கலாம். வாகனங்கள் சுத்தம்  செய்வதற்கும், சிறு குழந்தைகளின் உள்ளாடைகளை சுத்திகரிப்பதற்கும் மிகவும் ஏற்றது. செலவு மிகமிகக் குறைவு என்பதோடு, இது மிகச்சிறந்த  இயற்கை ஈடுபொருள். பூனா, கோவை மாநகராட்சிகள், மாநகரத்தின் கழிவுகளை ணி.வி. கொண்டுதான் மக்கச் செய்து மறுசுழற்சி செய்கிறார்கள்!

விவசாயம், சுற்றுச்சுழல், கால்நடைப் பராமரிப்பு போன்ற துறைகளில் இது உபயோகமாகும் முறைகளைக் காணவும், ணி.வி. பயன்படுத்தி ‘பொக்காஷி’,  E.M.5 போன்றவற்றை தயாரிக்கவும் www.agriton.nl/higa.html வலைப்பக்கத்தைக் காணுங்கள்.

வேம் (VAM) என்னும் வேர் பூஞ்சானம்

Vesicular Arbuscular Mycorrhiza என்பதன் சுருக்கமே க்ஷிகிவி. இது தாவரங்களுக்கு பயன் அளிக்கக்கூடிய வேர் பகுதியில் காணப்படும் ஒரு வகை  பூஞ்சானம். தாவர வேர்களில் ஒட்டிக்கொண்டு வேரையும் மண்ணையும் இணைத்து மண்ணிலுள்ள பாஸ்பரஸை நேரடியாகவும், மறைமுகமாக மற்ற  சத்துகளையும், நீரையும் எளிதாக உறிஞ்சி தாவரங்களுக்கு தரவல்லது. இது வேர்களை அதிக அளவில் உண்டாக்குவதால் விளைச்சல் அதிகரிக்க  உதவுகிறது. அதோடு, வேர் பகுதி அதிக அளவில் இருப்பதால் தாவரங்கள் ஸ்திரமாக நிலத்தில் இருக்கும். 

வேர்களுக்கு மண்ணிலுள்ள நீரையும் சத்துகளையும் (குறிப்பாக பாஸ்பரஸ்) எளிதில் உறிஞ்ச உதவுகிறது. மண்ணிலுள்ள நோய் உண்டாக்கும்  பாக்டீரியா மற்றும் பூஞ்சை தாக்காமல் தாவரங்களைப் பாதுகாக்கிறது. நாற்றங்காலில் இருந்து மாற்றும்போது ஏற்படும் பயிர் எண்ணிக்கை இழப்பையும்  குறைக்கிறது. வேர்களைத் தாண்டியுள்ள பகுதிகளிலிருந்து சத்துகளையும் நீரையும் ஹைபே (Hyphae) உதவியால் தாவரங்களுக்கு அளிக்கிறது.  அதனால், தாவரங்கள் வறட்சியை சற்று தாங்கி வளரும். உர அளவை குறைப்பதுடன் விளைச்சலை அதிகப்படுத்த உதவுகிறது. நாற்றுப்  பண்ணைகளில் - குறிப்பாக மரப்பயிர்களுக்கு அவசியம் தேவையானது இந்த வேர் பூஞ்சானம். அங்கு வேர்கள் நன்கு உருவாவதால் மரங்கள் நல்ல  வளர்ச்சி பெறும்.

ஹுயுமிக் அமிலம்

இது திரவ வடிவிலும், குருணை அல்லது பொடி வடிவிலும் அங்காடிகளில் கிடைக்கிறது. மண்ணில் கரிமச் சத்தை அதிகரிக்க உதவுகிறது.

இயற்கை உரங்களால் என்ன நன்மை?

1.    சத்துகளை செடிகள் அதிகம் எடுக்கும்.
2.    குறைந்த அளவு உரமே போதுமானது.
3.    வறட்சியைத் தாங்கும் சக்தி அதிகரிக்கும்.
4.    மண்ணில் நன்மை தரும் நுண்ணுயிர்களின் பணி அதிகமாக இருக்கும்.
5.    முளைப்புத்திறன் கூடுவதால் அதிக நாற்றுகள் கிடைக்கும்.
6.    அதிக வேர் வளர்ச்சியை உண்டாக்கும்.
7.    செடிகள் ஆரோக்கியமாகவும் பசுமையாகவும் இருக்கும்.


நன்றி குங்குமம் தோழி

No comments:

Post a Comment