Thursday, July 24, 2014

வாழ்க்கையை வளப்படுத்தும் லாண்ட்ஸ்கேப்பிங்!

Lantskeppin améliore la vie !
பல காரணங்களுக்காக நான் செடிகளை வளர்க்கிறேன்... என் கண்களைக் குளிர்விக்க என் ஆன்மாவைக் குளிர்விக்க என் பொறுமைக்கு சவால் விட இயற்கைக்கு சவால் விட புதுமைக்காக அல்லது பழமைக்காக இப்படி பல காரணங்களுக்காக...  இவை எல்லாவற்றையும் விட மற்றொரு வலிமையான  காரணமொன்றும் இருக்கிறது... அது  இன்னொரு சக உயிர்  என்னுடன் கூடவே வளரும் அச்சந்தோஷத்தைக் காண்பது! 

- டேவிட் ஹாப்சன்

லாண்ட்ஸ்கேப்பிங் செய்யும்போது நாம் பயன்படுத்தும் செடிகளை எத்தனை வகையாகப் பிரித்துக் கொள்ளலாம்?இரு வகையாகப் பிரித்துக் கொள்ளலாம்...

1. தனிச்செடி வகை (single specimen plants) 

ஒரு தோட்டத்தில் அல்லது ஒரு புல்வெளியில் ஒரு குறிப்பிட்ட இடத்தின் அழகை மேலும் அதிகப்படுத்திக்காட்டவே நாம் சிங்கிள் ஸ்பெசிமென் செடிகளை நடுகிறோம். பரந்த புல்வெளி... அத்தகைய புல்வெளியின் நடுவே ஒரு ஒற்றை ராயல் பாம்ஸோ, ஒரு ஃபவுன்டன் பாம்ஸோ, ஒரு பூக்கும் மரமோ நடும்போது, அது அச்சூழலின் அயர்வுத்தன்மையையே மாற்றிவிடுகிறது. ஒரு திருமண விழாவில் கூட்டமான சுடிதார் பெண்களின் நடுவே தாவணி அணிந்து வரும் அந்த ஒற்றைப்பெண் நம் அனைவரின் பார்வையையும் கவர்ந்துவிடுகிறாள் இல்லையா? அதுபோலத்தான் இதுவும்! 

‘வீட்டின் முன் பத்துக்கு பத்து அடி இடம் மட்டுமே இருக்கிறது. என்னாலும் இந்த மாதிரியான தனி அழகூட்டும் செடிகளை நட முடியுமா? என் வீட்டு குட்டித் தோட்டத்துக்கு ஒரு ஃபேஸ் லிஃப்ட் கொடுக்க முடியுமா என உங்களில் பலர் யோசிப்பது புரிகிறது. கண்டிப்பாக முடியும்! ஒரு சிறிய மெக்சிகன் புல்வெளி... அதன் நடுவே ஒரு புத்தர் சிலையும் அவரைச் சுற்றி ஒரு சில மூங்கில் செடிகள் மற்றும் சில வகையான புற்கள் என அமைத்துப் பாருங்கள். கண்களுக்கு மட்டுமல்ல... மனதுக்கும் அவை விருந்தாகும். ராயல் பாம்ஸ், ஃபாக்ஸ்டைல் பாம்ஸ், ஃபவுன்டன் பாம்ஸ் போன்றவை சிங்கிள் ஸ்பெசிமன் செடிகளின் சில வகைகள். இந்த வகை செடிகளை நட மூன்றுக்கு மூன்றடி இடம் போதுமானது,

2. கூட்டுச்செடி வகை (Group Specimen Plants)

புல்வகை இப்பிரிவின் கீழ்தான் வருகிறது. வளைந்து நெளிந்த அமைப்பிலான தோட்டம், ஆங்காங்கே கூட்டமான செடிகள் என்பவையே கூட்டுச்செடி அமைப்பு முறையின் அடிப்படை. இவற்றை நட ஒரு அடிக்கு ஒன்றரை அடிஎன்கிற அளவு இடம் போதுமானது. இருவகையான தோட்ட அமைப்புகள் யாவை?

நம் இட வசதி பொறுத்து இரு வகையான தோட்டங்களை அமைத்துக் கொள்ளலாம். ஒன்று முகலாய தோட்டங்கள்... மற்றொன்று ஜப்பானிய தோட்டங்கள்... 

முகலாய தோட்டங்கள் - அலை போன்ற வளைவுத்தன்மை(undulance) கொண்டவை. சமதள தோட்ட அமைப்பாக இல்லாமல் மேடு பள்ளம், இவற்றுடன் நீர்நிலைகள், கற்சிற்பங்கள் மரங்கள், செடிகள் கொடிகள், காப்பி மேசைகள் என அனைத்து விதமான அழகியல் அம்சங்களும் நிறைந்தவை. எனினும் அதிக ஆக்ரமிப்பைச் செய்பவை புல்வெளிகளே!

எந்த புல் சிறந்த புல்?

இரு வகையான புற்கள் சந்தையில் கிடைக்கின்றன. மெக்சிகன் புல் மற்றும் கொரியன் புல். இதில் மெக்சிகன் புல்லே சிறந்தது. காரணம்... 

மெக்சிகன் புல்வெளியை பராமரிப்பது எளிது.  
அதிகமான சூரிய உஷ்ணத்தையும் தாங்க வல்லது.
நாமே னீஷீஷ்  செய்து கொள்ள இயலும்.
உப்புத் தண்ணீருக்கும் செழித்து வளரும்.
பூச்சித் தொல்லைகள் அதிகம் இருக்காது. 

ஜப்பானிய ஜென் தோட்டங்கள் 


நீர்நிலைகள் மற்றும் கற்படுக்கைகள், சிற்பங்கள், சின்னச்சின்ன நீரூற்றுகள், அதிகப்படியான மூங்கில் செடிகள் - இவை அனைத்தின் ரசனையான கலவையே ஜப்பானிய ஜென் தோட்டங்கள். தோட்டத்தின் ஏதோ ஒரு மூலையில் அல்லது தேவையான இடங்களில் சிறுசிறு அழகிய குளங்களும் உண்டு. இத்தோட்டங்களில் கூழாங்கற்களின் பயன்பாடு அதிகம். கூடவே உயரம் குறைந்த குத்துச்செடிகளையும் (low level foliage shrubs)  அதனிடையே பயன்படுத்திக் கொள்ளலாம்.

தோட்டத்துக்கான கூழாங்கல் படுக்கை அமைப்பு (pebble bed concept)

இவ்வகை படுக்கை அமைக்க, கண்டிப்பாக கூழாங்கற்களின் அளவினை கவனத்தில் கொள்ள வேண்டும். கற்கள் 25 னீனீ  30 னீனீ அளவில் இருத்தல் நலம். எனினும் 4060 னீனீ வரை அதிகப்படுத்திக் கொள்ளலாம். இங்கு தனிச்செடி வகைகளை மட்டுமே வளர்க்க இயலும். உதாரணத்துக்கு... அஸ்பாரகஸ். மயூரி, லில்லி, சக்யூலண்ட்ஸ், கற்றாழை வகைகளை வளர்க்கலாம்.

தோட்டத்தில் குளங்கள் அமைப்பது எப்படி?

மூன்று அடி நீளமும் ஒன்றரை அடி அகலமும் போதும் ஒரு சிறிய அல்லிக்குளம் அமைக்க. நம் வசதிக்கேற்ப ஆழப்படுத்திக் கொள்ளலாம். அல்லி, தாமரை போன்ற நீர்த்தாவரங்களை வளர்க்க இயலும். அம்ப்ரெல்லா கிராஸ், நாச்சுரல் கிராஸ், மூங்கில் செடி ஆகியவற்றை குளத்தினைச் சுற்றி வளர்த்தோமேயானால் நிஜக்குளமே தோற்றுவிடும். பட்டி யக் கல்லினால் ஆன சில கல் பெஞ்சுளையும் அமைத்துக்கொள்ளலாம். மனம் அயர்வான பொழுதுகளில் ஒரு கோப்பை தேநீருடன் இங்கே வந்து அமர்ந்து பாருங்கள்... உங்களை அதுகாறும் உருக்குலைத்த துன்பம் எல்லாம் உருகியே ஓடிவிடும். கூடவே மனசுக்கும் உடலுக்கும் செம ரிலாக்ஸ்... இத்தகைய குட்டிக் குட்டி குளங்கள்!லாண்ட்ஸ்கேப்பிங்கில் மக்களின் பொதுவான எதிர்பார்ப்பு எப்படி இருக்கிறது என லாண்ட்ஸ்கேப்பிஸ்ட் மணிமாறனிடம் கேட்டோம். 

மேடு பள்ள தோட்ட அமைப்பு

தோட்ட ஏரியா கூடுதலாக உள்ள வீட்டுக்காரர்கள் சமநிலையற்ற, மேடு பள்ளங்களுடன் கூடிய அலை போன்ற வளைவுத்தன்மை நிரம்பிய தோட்ட அமைப்பையே பொதுவாக விரும்புகின்றனர். அதிலும் புல் மேடுகளை அதிகம் விரும்புகிறார்கள். 

பசுமைப் புல்வெளி

பரப்பளவு கம்மியாக உள்ள வீடுகளில் குறைந்தபட்சம் ஒரு சிறிய புல்வெளியாவது வேண்டும் என நினைக்கின்றனர். அதனுடன் சில தனிச்செடி வகைகள் மற்றும் ஓரிரு சிலைகள், குட்டியாக ஒரு நீரூற்று என விரும்புகின்றனர். 

வளைந்து செல்லும் நடைபாதை

அடுத்து அவர்கள் பெரிதும் விரும்புவது தோட்டத்தின் ஊடாக செல்லும் நடைபாதைகளை... அதுவும் நடைபாதைகளில் பாவியிருக்கும் கற்கள் சதுர வடிவில் இருப்பதைக் காட்டிலும் செவ்வக வடிவில் இருப்பதை அதிகம் விரும்புகிறார்கள்.

இதமான இருக்கைகள்

ஆங்காங்கே அமரும் இருக்கைகள் கண்டிப்பாக வேண்டும். அதுவும் பாலீஷ் செய்யப்படாத கரடுமுரடான கல் இருக்கைகள் என்றால் மக்களுக்குக் கூடுதல் பிரியம். சிலர் கிரானைட் இருக்கைகளையும் இன்னும் சிலரோ wrought iron மற்றும் மர இருக்கைகளையும் விழைகின்றனர். பிரகாசமான ஒளி அமைப்பு ஒளி அமைப்பில் அதிக கவனம் செலுத்துகிறார்கள். பெரும்பாலான மக்கள் spider lights (விரிந்து அடிக்கும் வெளிச்சம்) அல்லது ஃபோகஸ் விளக்குகளை விரும்புகின்றனர். focus light களை பெரிய மரங்களின் வேர்ப்பகுதியில் அல்லது குறிப்பிட்ட செடிகளின் கீழ் அமைத்துக் கொள்ளலாம். நம் வசதிக்கேற்றவாறு இவ்விளக்கின் திசைகளை மாற்றிக் கொள்வதோடு மட்டுமல்லாது, விலாசமான செடிகளை அல்லது அழகியல் பொருட்களை தனித்துக் காண்பிக்கவும் இவை உதவி செய்யும். 

உடன் தவழும் இசை அமைப்பு

சிலர் தோட்டத்தின் நடைபாதை ஓரங்களில் இசை சார்ந்த தொழிற்நுட்ப அமைப்புகளை ஏற்படுத்திக் கொள்கின்றனர். இசைக்கான உணவை விரும்பாதார் யார்? எனினும் வணிகக் கட்டிடங்களின் தோட்டங்களிலேயே இவை பெரும்பாலும் அமைக்கப்படுகின்றன.தனித்த செடி வகைகள் 10 அடியிலிருந்து 25 அடி வரை வளரும் செடி வகைகளை அதிகம் விரும்புகின்றனர். 

மனம் மயக்கும் மரங்கள்

செடிகளோடு செடிகளாக மரங்களை வைத்துக் கொள்ள விரும்பும் மக்களும் இருக்கிறார்கள். பெரும்பாலான மக்கள் பூக்கும் மரங்களான அட்ஸ்டோனியா மில்லங்க்டோனியா போன்ற மரங்களை விரும்புகிறார்கள். வேம்பு, புங்கை போன்ற மரங்களை பல்வேறு உடல்நலக் காரணங்களுக்காக வேண்டிக் கேட்டுக் கொள்ளும் மக்களும் இருக்கத்தான் செய்கிறார்கள்.

கண்டிப்பாக காஃபி டேபிள்

யந்திரகதியான இவ்வுலகில் தோட்டத்திலும் தனக்கான ஒரு பிரத்யேக இடத்தை மக்கள் விரும்புகிறார்கள். இந்த இடம் குடும்ப உறுப்பினர்கள் அனைவரும் ஒரே நேரத்தில் கூட ஏதுவாக இருப்பதோடு மட்டுமல்லாது கூடவே பல கதைகளும் பேசி ஒரு காப்பியோ அல்லது தேநீரோ அருந்த தோதுவாகவும் இருக்க வேண்டும் என நினைக்கிறார்கள்... மக்கள் பெரும்பாலும் விரும்புவது இயற்கையான கல்லினால் அமைந்த காப்பி மேசையே... இதன் நீளம் ஐந்து அடியும் அகலம் ஒன்றரை அடியும் இருந்தால் போதுமானது. சிலர் கட்டிடக் கலை அடிப்படையிலும் (நீவீஸ்வீறீ நீஷீஸீநீமீஜீt) காப்பி மேசைகளை அமைத்துக் கொள்ள விரும்புகின்றனர். மரமேசைகளும் அமைக்கலாம். எனினும் அவற்றில் பராமரிப்புத் தேவை கூடுதலாக இருக்கும்.

பெர்கோலா

சிவில் கான்செப்ட்டின் அடிப்படையில் பெர்கோலாவும் ஆங்காங்கே அமைத்துக் கொள்ளலாம். எனினும் இவை அனைத்தும் நம் இட வசதி பொறுத்தே...

வேறு என்ன என்ன அமைத்துக் கொள்ளலாம் ?


குட்டி திரையரங்கு வானம் பார்த்த ஒரு சிறு மேடை (பிறந்த நாள் மற்றும் வேறு சில சிறு விழாக்களை நடத்த வசதியாக) சிறு குடில் (GAZEBO) சிறு பாலம் மரங்களைச் சுற்றிலும் பிணைக்கப்பட்ட இருக்கைகள் நீச்சல் குளம் ஊஞ்சல் குழந்தைகளுக்கான விளையாட்டு இடம் பறவைகளுக்கான கூண்டுகள் சிறு தியானக் கூடங்கள் திறந்தவெளி சாப்பாட்டு அறை ஆகியவற்றையும் இடவசதிக்கேற்ப அமைத்துக் கொள்ளலாம் 

லாண்ட்ஸ்கேப்பிஸ்டின் பணிகள் யாவை?

தோட்டம் அமைத்துத் தருவது மட்டுமல்ல... பராமரிப்பு பணிகளையும் இவர்களே செய்து தருகிறார்கள். வாரக்கணக்கு, மாதக்கணக்கு, ஆண்டுக்கணக்கு என பலவகை பராமரிப்புத் திட்டங்களை வைத்திருக்கிறார்கள்.

எவ்வளவு செலவாகும் ?


இப்போதைய சூழலின்படிக்கு 1,000 சதுர அடிக்கு ரூ.90,000த்திலிருந்து ரூ.ஒன்றரை லட்சம் வரை கட்டணம்.லாண்ட்ஸ்கேப்பிங் துறையில் மறக்க முடியாத அனுபவம்  ‘‘கும்பகோணம் டாக்டர் ஒருவர் மனம் நெகிழ்ந்து கை கொடுத்ததை மறக்கவே முடியாது’’ என்கிறார் லாண்ட்ஸ்கேப்பிஸ்ட் மணிமாறன்.   

மருத்துவர் அவ்வீட்டுக்கு குடிவந்து 2 வருடங்கள் ஆகியிருந்தும் எவ்வித மன நிம்மதியும் இல்லாதபடிக்கே அவரும் குடும்பத்தினரும் இருந்திருக்கின்றனர். வீட்டிலும் ஏகப்பட்ட குறைபாடுகள். புறத்தே தெரிந்த குறைகள் அனைத்தையும் தோட்டக்கலை கொண்டு சரி செய்து கொடுத்திருக்கிறார் மணிமாறன். குறைகளைச் சரிசெய்து வீட்டின் பார்வையை செப்பனிட்டது மட்டுமல்லாது, உளவியல் ரீதியாகவும் ஆக்கபூர்வமான மாற்றம் ஒன்றினை அவர்தம் வாழ்வில் கொண்டு வர முடிந்திருக்கிறது.  பச்சையம் தயாரிக்கும் பசுமையான செடிகள் மருத்துவரின் வாழ்க்கையை மட்டுமல்ல... நம் வாழ்க்கையையும் வளப்படுத்தக் கூடியதே... இன்றே முயற்சி செய்து பார்க்கலாம்!

(பழகுவோம்... படைப்போம்!)

No comments:

Post a Comment