Thursday, July 24, 2014

தங்கமான சேமிப்பு!

Gold savings!
மழை பொழியும்போது
நாம் செய்ய வேண்டிய
முக்கியமான விஷயம்...
அதை பொழிய விடுவதே!


- ஹென்றி வேட்ஸ்வொர்த் லாங்ஃபெலோ


நாம் செய்ய வேண்டிய அதிமுக்கியமான சேமிப்பு ஒன்று உண்டு. இது நம் வீட்டு இரும்பு பீரோக்களிலுள்ள சேமிப்புகளையும் நம் வங்கி சேமிப்பு  களையும் காட்டிலும் கூடுதல் மதிப்புடையது. ஆம்... மழைநீர் சேகரிப்பு கட்டமைப்புகளை அமைப்பது குறித்து தான் பேசப் போகிறோம். ஏற்கனவே  இந்த அமைப்பு செயல்பட்டுக் கொண்டிருக்கும் பழைய வீடுகளில் அவ்வப்போது தேவைப்படும் பராமரிப்புப் பணிகளைச் செவ்வனே செய்து  கொள்ளுங்கள். புதிய வீடு எனில் மழைநீர் சேகரிப்பு கட்டமைப்புக்கு முக்கியத்துவம் கொடுப்பது அவசியம்!

மழை நீர் சேகரிப்பு... எப்படிச் செய்வது?


கட்டிடத்தின் மொட்டை மாடியில் இருந்து மழைநீரை தரைப்பகுதிக்கு கொண்டு செல்ல மழைநீர் வடிகுழாயினை அமைக்க வேண்டும். வடிகுழாய்க்கு அல்லது கட்டிடங்களின் அருகில் தரைப்பகுதியில் 1 மீட்டர் நீளம், 1 மீட்டர் அகலம் மற்றும் 1.5 மீட்டர் ஆழத்துக்கு கசிவு நீர்க்குழி ஒன்றை  செங்கல் கொண்டு கட்ட வேண்டும். அதன் பின் குழியை கூழாங்கற்கள் அல்லது கருங்கல் ஜல்லி கொண்டு1 மீட்டர் ஆழத்துக்கு நிரப்ப வேண்டும்.மொட்டை மாடியில் இருந்து வரும் மழைநீரை வடிகுழாய் மூலம் கசிவு நீர் குழியின் மேற்பரப்பில் விழுமாறு செய்ய வேண்டும். இதுபோன்று  முறையாக கசிவு நீர்குழி அமைத்தால் மொட்டை மாடியில் விழும் மழை நீரை நேரடியாக பூமிக்குள் ஊறச் செய்யலாம். 

கசிவு நீர்குழியை சிமென்ட் மூடி கொண்டு மூட வேண்டும். கட்டிடம் அமைந்துள்ள இடம் களிமண் பகுதியாக இருந்தால் உரிய முறையில் மழைநீர்  சேகரிப்பு கட்டமைப்புகளை ஏற்படுத்த வேண்டும். நீரூட்டல் கிணற்றை அனைத்து வகை பகுதிகளிலும் அமைத்திடலாம். கட்டிட வளாகத்தில்  பயன்பாட்டில் இருக்கும் திறந்தவெளி கிணற்றையும் மழைநீர் சேகரிக்க பயன்படுத்தலாம். கட்டிடத்தில் இருக்கும் மழைநீர் வடிகுழாய்களை இணைத்து  கிணறு இருக்கும் பகுதிக்கு கொண்டு செல்ல வேண்டும். வடி கட்டும் தொட்டி அமைத்தால், மொட்டை மாடியில் விழும் மழைநீரை வடிகுழாய் மூலம்  பயன்பாட்டுக் கிணற்றில் செலுத்தி மழைநீரை ஊறச் செய்யலாம்.பெரும்பாலும் நாம் காம்பவுண்டின் உள்ளே உள்ள மண்தரைப் பகுதிகளை சிமென்ட்  தளங்களால் மூடிவிடுகிறோம். இதனால் என்ன பிரச்னை? மழைநீர் வீட்டை விட்டு வெளியேற வேண்டிய நிலை ஏற்படுகிறது. 

அதோடு, வீட்டைச் சுற்றி மழைநீர் உறிஞ்சப்படுவதற்கான வாய்ப்புகளும் குறைந்துவிடுகிறது. சிலர் தங்களது வீடுகளின் தாழ்வான பகுதிகளில்  ஆழமான தொட்டி களை அமைத்து சரியான வடிகட்டுதலுடன் மழைநீரைச் சேமிக்கின்றனர். குஜராத்தில் உள்ள காந்தியின் பூர்வீக வீட்டில் கூட  இத்தகைய அமைப்பு இருந்ததாம். இது ஆண்டு முழுவதுக்குமான குடிநீர் தேவையைப் போக்கியிருக்கிறது. நம் பகுதிகளில் உள்ள குடிநீர் வாரிய  அலுவலகத்தைத் தொடர்பு கொண்டு இதற்கான வழிமுறைகளை அறியலாம். சென்னைக் குடிநீர் வாரிய மேலாண்மை இயக்குனர் அளித்த தகவல் 
இது... 

சமையலறை மற்றும் குளியலறையிலிருந்து வெளியேறும் கழிவுநீரை என்ன செய்யலாம்? (Grey water disposal)

பெருநகரங்களில் சமையலறை மற்றும் குளியலறையிலிருந்து வெளியேறும் கழிவுநீர்க்கான குழாய்கள் நேரடியாக சாக்கடைகளுடன் / பாதாளச்  சாக்கடைகளுடன் இணைக்கப்பட்டுள்ளன. கிராமப்புறங்களிலோ, சிறுநகரங்களிலோ பக்கவாட்டுகளில் மரங்களுடன் கூடிய வீடு உங்களுடையது  என்றால்?

வீட்டிலுள்ள மரங்களுக்கு சற்றே அருகாமையில் உறிஞ்சுத் தொட்டிகள் அமைத்து உங்களது வீட்டு கழிவுநீரை அதனுள் விட்டுக் கொள்ளலாம்.  இதனால் தெருவில் ஓடும்சாக்கடைகளையும் அதனால் ஏற்படும் கொசுத்தொல்லை மற்றும் சுகாதாரக் கேடுகளையும் தவிர்க்க முடியும்.  அது  மட்டுமல்ல... மரங்களுக்கான தண்ணீர் தேவையையும் இவை சமன் செய்கின்றன... நிலத்தடி நீரின் மட்டமும் இதனால் ஓரளவுக்கு அதிகரிக்கும்  வாய்ப்புண்டு. செப்டிக் டாங்குகளிலிருந்து வெளியேறும் வடிகட்டப்பட்ட நீருக்கான ‘லீச் பிட்’டுகளை (leach pits) அமைப்பது போன்றே  இவ்வுறிஞ்சு குழாய்களையும் அமைக்கலாம்.

உறிஞ்சுத் தொட்டிகளை அமைப்பது எப்படி?


இக்குழிகள் சுமார் ஆறடி ஆழம் வரை இருக்க வேண்டும். அளவில் சற்றே சிறியதான கிணற்று உறைகளை இத்தொட்டிகளை அமைக்க பயன்படுத்தலாம். கிணற்று உறைகள் வேண்டாமெனில்.  செங்கல் கொண்டு தொட்டிகளாகவே கட்டிக் கொள்ளலாம். இப்போது இத்தொட்டியை ஓரளவுக்கு  நிரப்ப வேண்டும். 

எப்படி நிரப்புவது?

அடிப்பாகத்தில் மணல்... அதன் மேல் மணலைக் காட்டிலும் சற்றே அளவில் கூடுதலான ஜல்லி, சிறு ஜல்லியின் மேலே அதனைக் காட்டிலும்
பருமனான ஜல்லி என நிரப்பிக்கொண்டே வரவேண்டும். மேல் அடுக்கில் சுருக்கியையோ (செங்கல் ஜல்லி), அளவில் பெரியதான கற்களையோ  போட்டு, குழியை மூடி விட வேண்டும். குழியை மூடுவதற்கு முன்னரே, கழிவுநீர் குழாய்கள் இந்த உறிஞ்சுத் தொட்டிகளுடன் இணைக்கப்பட்டிருத்தல்  வேண்டும். அவ்வளவுதான்... உறிஞ்சுத் தொட்டி ரெடி. இனி நம் வீட்டிலிருந்து வெளியேறும் கழிவுநீர் வீணாகப் போகாது. மறுசுழற்சி முறையில் நம்  மரங்களை வாழ வைக்கும் இந்த கழிவுநீர். எனினும் கடுமையான நச்சுத்தன்மை நிரம்பிய ஆசிட்கள் முதலியவற்றை குளியலறையில்  பயன்படுத்துவதை தவிர்க்க வேண்டும். தேவை ஏற்படுகையில் இத்தொட்டியில் உள்ள பழைய கற்கள் மற்றும் மணலை அகற்றிவிட்டு புதுமணல்  மற்றும் புது கற்களைப் போட்டுப் பராமரித்தல் வேண்டும்.

பாதுகாவலர் அறை


அளவில் பெரியதான வீடுகளைக் கட்டுகிறீர்கள்... கூடவே வாயில்காப்பாளரையும்   நியமனம் செய்கிறீர்கள்... அவர் அமர்ந்து கொள்ளவும் சிறிது  ஓய்வெடுக்கவும் தனது பொருட்களை வைக்கவும் சிறிய அறை ஒன்று வேண்டுமே... இதற்காகவே பிரத்யேகமாக வடிவமைக்கப்பட்டு ஆயத்த வடிவில்  கிடைப்பவையே பாதுகாவலர் அறைகள் prefabricated security cabins. இவை மரம், ஸிசிசி சுவர்கள் மற்றும் றிசிசி இரும்பு  வகைகளில் சந்தையில் கிடைக்கின்றன. இவற்றை எந்த இடத்திலும் எளிதாக நிறுவிக் கொள்ளஇயலும். இடம் மாற்றுவதும் எளிது. செங்கல்  கட்டிடங்களைக் காட்டிலும் கூடுதல் வேகத்துடன் நிறுவிக்கொள்ள இயலும். பார்வைக்கு அழகாகவும் இருக்கும். பெரிய பட்ஜெட் வீடாக இருந்தால் இது  கட்டாயத் தேவை. இத்தகைய ரெடிமேட் அறைகளில் விருப்பம் இல்லை என்றால், மதிற்சுவர் கட்டும்போதே பிரதான வாயிலுடன் ஒட்டியே ஒரு  சிறிய அறையை அமைக்கலாம். 

துளசி மாடம்
மதிற்சுவர்களின் உள்ளே வீட்டுக்கு வெளியே வரும் இன்னொரு அமைப்பு துளசி மாடம். நம் தனிப்பட்ட விருப்புகளைச் சார்ந்து துளசி மாடம்  அமைத்துக் கொள்ளலாம். இது அழகியல்,ஆன்மிகம், மன அமைதி, ஆரோக்கியம் என பல விஷயங்களைத் தொட்டுச் செல்கிறது. மாடத்தை சுற்றி  வருதல் நாளமில்லா சுரப்பிகளுக்கான ஒரு சிறந்த பயிற்சி என்கிறார்கள். அதோடு, அதிகாலைக் குளியலும் கட்டாயமாகிறது. தினசரி தொழுதல் ஒரு  ஒழுங்குமுறையைக் கடைப்பிடிக்க வாய்ப்பளிக்கிறது. துளசிச்செடியின் மருத்துவ குணங்களும் இதில் அடக்கம். அழகுக்கு அழகு... அமைதிக்கு  அமைதி... வீடு கட்டும்போதே மாடத்தையும் கட்டிக் கொள்ளலாம்... அல்லது ஆயத்த நிலையில் கிடைக்கும் துளசி மாடம் வாங்கி பொருத்திக்  கொள்ளலாம்.

No comments:

Post a Comment