Tuesday, July 1, 2014

மெடிக்ளைம் பாலிசி

“எனக்கும், என் குடும்பத்தாருக்கும் மெடிக்ளைம் பாலிசி எடுக்க விரும்புகிறேன். எது நல்ல பாலிசி? எப்படித் தேர்வுசெய்வது? ஆலோசனை கூறுங்கள்.”

ஸ்ரீதரன்,
காப்பீடு மூத்த ஆலோசகர்,
ஃபண்ட்ஸ் இந்தியா டாட் காம்

“இதுதான் சிறந்த பாலிசி என்று கூறுவது சரியாக இருக்காது. ஆனால், ஒரு பாலிசி எடுப்பதற்கு முன்பு கவனிக்க வேண்டிய விஷயங்களைப் பற்றி நீங்கள் தெரிந்துகொள்வது நல்லது. முதலில் அந்தக் கம்பெனியின் நம்பகத்தன்மை, பின்புலம் மற்றும் வாடிக்கையாளர்களுக்குப் பணத்தைத் திரும்பச் செலுத்திய விதம் பற்றித் தெரிந்துகொள்ள வேண்டியது மிகவும் அவசியம். அதன் பிறகு, பாலிசியின் சிறப்பு அம்சங்கள் பற்றி அலச வேண்டும். என்ன என்ன பாதிப்புகளுக்கு எல்லாம் கவரேஜ் கிடைக்கும், எதற்கு எல்லாம் கிடைக்காது, ஏற்கெனவே உள்ள பாதிப்புக்கு கவரேஜ் உண்டா, எத்தனை காலத்துக்குப் பிறகு கவரேஜ் கிடைக்கும் என்பதைத் தெரிந்துகொள்ளவேண்டும். இதற்கு அடுத்தபடியாக, அந்தக் காப்பீட்டு நிறுவனம் எந்தெந்த மருத்துவமனைகளுடன் தொடர்பில் இருக்கிறது, முதல்நிலை நகரங்கள் மட்டுமின்றி சிறு நகரங்களில் எல்லா மருத்துவமனைகளுடன் தொடர்பில் உள்ளதா என்று பார்க்க வேண்டும்.

அடுத்ததாக, ஒருவர் ஒரு லட்சத்துக்குக் காப்பீடு எடுத்திருந்தால், எந்தெந்த நோய்க்கு எவ்வளவு சதவிகிதம் கவரேஜ் கிடைக்கும் என்று பார்க்க வேண்டும். மேலும், சில நிறுவனங்கள் குறிப்பிட்ட சதவிகிதம் மட்டுமே கிளைம் கொடுக்கும். மீதிப் பணத்தை வாடிக்கையாளர்தான் செலுத்த வேண்டியிருக்கும் (கோ&பேமென்ட்). அது எவ்வளவு என்று ஆராய வேண்டும்.

இதற்கு அடுத்தபடியாக எத்தனை வயது வரை பாலிசியைப் புதுப்பிக்க முடியும் என்பதைப் பார்க்க வேண்டும். சில பாலிசிகளை 60 ஆண்டுகள் வரை மட்டுமே புதுப்பிக்க முடியும். ஆனால் பொதுவாக, நோய்கள் 60 வயதைக் கடக்கும்போதுதான் அதிகமாகவரும். அந்த நேரத்தில் பாலிசி புதுப்பிக்க முடியாது என்றால், இத்தனை ஆண்டுகள் புதுப்பித்ததே வீணாகப் போய்விடும். எனவே, வாழ்நாள் முழுக்கப் புதுப்பிக்கக்கூடிய பாலிசியாக இருப்பது நல்லது. இவை அனைத்தும் திருப்தியாக இருந்தால் மட்டுமே கட்டணம் பற்றிப் பார்க்க வேண்டும். இவ்வளவு வசதிகளும் கிடைத்துக் கட்டணம் சற்று அதிகம் என்றாலும் அதைப் பொருட்படுத்தாமல் பாலிசி எடுத்துக்கொள்வது நல்லது.”

Doctor Vikatan

No comments:

Post a Comment