Thursday, July 24, 2014

முகப்பு என்கிற முகம்

Home of the face
இனிய இல்லம்

வீடென்பது செங்கல்லும் சிமென்ட்டும் இரும்புக் கம்பிகளும் மணலும் மட்டுமே நிறைந்ததன்று. அதற்கும் மூச்சுண்டு... இதயமுண்டு... ரத்தமும்  சதையுமுண்டு. செங்கல்லால் ஆனதைவிட அது உணர்வு சார்ந்த மனிதர்களால் ஆனது. இதனைப் புரிந்து கொண்டாலே, வீடென்பதை வாழும்  இல்லமாக்கிட முடியும்!  

பாரசீகப் பழமொழி

அகமும் புறமும் ஆணோ, பெண்ணோ அவர் உடலின் முதல் வசீகரம் எதுவெனக் கேட்டால் உடனே பதிலுரைப்போம்... ‘முகம்’ என்று. அகத்தின் அழகு  முகத்தில் தெரியும் என்றுதானே சொல்லிச் சென்றிருக்கின்றனர் நம் மூதாதையரும்! ஆங்கிலமும் அதே தத்துவத்தைத்தான் கற்றுத் தருகிறது  Face  is the index of the mind  என. வீட்டின் முகப்பென்பதும் அப்படியேதான்... அதன் முகப்பே அதன் முகம்... அதனாலேயே அதற்காகக் கூடுதலாக  மெனக்கிட வேண்டியிருக்கிறது.

ஒரு நெடுந்தொலைவுப் பயணம்... பேருந்திலோ மகிழுந்திலோ மேற்கொள்கிறீர்கள். வழி நெடுக பல வகை வீடுகளைக் கடக்கிறீர்கள். இதில்  பார்த்தவுடனேயே ஈர்க்கும் சில வீடுகளும் உண்டு (என்னைப் போன்றவர்கள் ஆங்காங்கே வாகனத்தை நிறுத்தி புகைப்படங்களும் எடுத்துக்  கொள்கிறோம்).  வீட்டின் உள்பகுதியானது எப்படி இருக்கும் என்பது நமக்குத் தெரியாது... எனினும் அவ்வீட்டின் வெளி வடிவமைப்பை வைத்தே  அவ்வீட்டின் உள் வடிவமைப்பும் அழகாகத்தான் இருக்கும் என நீங்களே தீர்மானித்துக் கொள்கிறீர்கள். மனதில் முதலில் பதிவது அதன் முகமாகிய  முகப்பே. இதையே   elevation என்கிறோம்.

இந்த வார்த்தைக்கு ‘உயர்த்திக் காட்டுதல்’ எனும் பொருளும் உண்டு. இப்படி, ஒரு வீட்டினை எல்லா வகையிலும் உயர்த்திக் காட்டக்கூடிய ஒரு  வடிவாக அதன் முகப்பு அமைகிறது. கேரள வீடுகளின் முகப்பில் இருக்கும் முதல் கட்டுக்குப் ‘பூமுகம்’ என்றே பெயர். அந்தளவு நம் இந்தியச் சூழலில்  இதனை மங்கள முகமாக பார்க்கிறோம்.

சில பழைய வீடுகளைப் பார்த்திருப்பீர்கள். அவை களையிழந்து ஒளியிழந்து காணப்படும். உள்ளே சென்று பார்த்தால், வீட்டின் உள்ளேயும் அங்கணமே  ஒளியிழந்து கிடப்பதைப் பார்ப்பீர்கள். நெருங்கிய நட்பொன்றின் திருமணம் அவர்களது வீட்டின் களையிழந்த தன்மையால் நின்று போனது. ‘விருத்தி  இல்லை’ என மாப்பிள்ளை வீட்டார் சொல்லிச் சென்று விட்டார்களாம். பொங்கல், திருமணம் என விழாக்களின் போது வீட்டுக்கு வெள்ளையடிப்பதின்  பின் இருக்கும் காரணமும் இதுவாகவே இருக்கக் கூடும். சினிமாக்களில் பார்த்திருப்பீர்கள்... பேய் வீடுகளின் புறத்தோற்றத்தை... ஆம்... களையான  ஒளி நிரம்பிய வீடு மகிழ்ச்சியையும் புத்துணர்வையும் இணைத்தேதான் வழங்குகிறது நமக்கு!

முகப்பு எப்படி?


வீட்டின் முகப்பானது எளிமையாக அதே நேரம் பயனுள்ளதாகவும் இருக்க வேண்டும். எப்படி? விளக்குகிறார் கட்டிடவியல் பொறியாளர்  தமிழ்ச்செல்வன்...

கடினமான, குழப்பங்கள் நிறைந்த, அதிக அலங்காரங்கள் உடைய தெளிவற்ற வகையில் முகப்பினை வடிவமைத்துக் கொள்ளாதீர்கள். simple straight  lines  என்பதே உங்களது வடிவமைப்புக் கொள்கையாக இருக்கட்டும்.

வீட்டின் தன்மைக்கேற்றவாறு வண்ணம் அடித்துக் கொள்ளலாம். காற்றோட்டமான, வெளிச்சமான தன்மையுடன் வீடானது திகழ்வதற்கு, அதன்  முன்பக்க ஜன்னல்கள் முக்கிய பங்கு வகுக்கின்றன. அதனால் போதிய அளவில் முன்பக்க ஜன்னல்களை அமைத்துக் கொள்ளுங்கள்.

aesthetics   (அழகியல்) விட functional   (பயன்பாட்டுத் தன்மை) கூடுதலாக இருக்குமாறு பார்த்துக் கொள்ளுங்கள்.  வீட்டின் முன்னே கோலம்  போடுவதற்கான இடம், காலை வேளையில் செய்தித்தாள்கள் படிப்பதற்கான இடம், மாலை வேளையில் அமர்ந்து காபி அருந்துவதற்கான இடம்,  செடிகொடிகளுக்கான இடம், வாகனங்கள் நிறுத்துவதற்கான இடம் என தேவைக்கேற்ற இடங்களை முதலிலேயே தீர்மானித்துக் கொள்ளுங்கள். இவை  அனைத்தும் இணைந்ததே வீட்டின் முகப்பு!

வளப்படுத்தும் வண்ணங்கள்!


கட்டப்போகின்ற புதிய வீடுகளுக்கு மட்டுமல்ல... பழைய வீடுகளுக்கும் முகப்பென்பது முக்கியமானதே. ஏற்கனவே கட்டப்பட்ட வீடுகளில் சிவில்  (கட்டிடத்துறை சார்ந்த) மாற்றங்கள் ஏதேனும் கொண்டுவர முடியாது போனாலும், தகுந்த வண்ணங்களை பயன்படுத்துவதன் மூலம் அதன்  முழுப்பார்வையையும் நம்மால் மேம்படுத்த இயலும். தேவை ஏற்படின் பழைய வீடுகளில் வசிப்போர் fresh coat of paint பயன்படுத்தி, வீட்டின்  அழகை யும் அமைப்பையும் உயர்த்திக் கொள்ளலாம்.

நாம் வடிவமைக்க உள்ள பாணியின் அடிப்படையிலும், பட்ஜெட்டின் அடிப்படையிலும், அந்த ஊரின் அடிப்படையிலும் நம் முகப்பானது மாறுபடு கிறது.  கிராமத்தில் குறைந்த விலையில் கட்டப்போகின்ற வீட்டின் முகப்பானது அதிகளவு வேலைப்பாடுகளுடனும் மிக அடர்த்தியான வண்ணங்களுடனும்  இருக்கலாம். நகரத்தில் அப்படிச் செய்ய இயலாது. நகர வீடுகள் பெரும்பாலும் மெல்லிய வண்ணங்களுடனேயே இருக்கின்றன. கிராமங்களில்  பயன்படுத்தப்படுகின்ற பெரும்பாலான வண்ணங்கள், நகரங்களில் உள்ள மக்களின் பார்வைக்கு வந்திருக்குமா என்பதே சந்தேகம்தான். அந்த அளவுக்கு  பெரும் வித்தியாசங்கள் உள்ளன.

எனினும், என் தனிப்பட்ட மகிழ்ச்சி... கிராமத்து வீடுகள் பல வண்ணங்களில் ஒரு கலைடாஸ்கோப்பாக ஜொலிக்கின்றன. அவர்களுக்கு வண்ணங்களது  பயன்பாட்டில் முழுச் சுதந்திரமும் இருக்கிறது. எந்த வண்ணமென்றாலும் யோசிக்காது பயன்படுத்திட முடிகிறது. Real play of colours என்பது  கிராமங்களில் மட்டுமே உண்டு! செட்டிநாட்டு பாணி வீடுகளுக்கென தனி வண்ணம், முன் பக்க அமைப்பு என அத்தனையும் மாறுகிறது. அது போலவே  கேரள பாணி வீடுகளுக்கும். நம் வீடு எவ்வகையைச் சார்ந்தது என்பதைப் பொறுத்து, அதற்கான வண்ணங்களையும் பிற வடிவமைப்புகளையும் செய்து  கொள்ளலாம்.

No comments:

Post a Comment