வீடு கட்ட நம்மில் பெரும் பாலானோருக்குக் கைகொடுப்பது வங்கிக் கடன். மற்ற கடன்களைக் காட்டிலும் வீட்டுக் கடனுக்குச் சில சலுகைகள் உண்டு. அவற்றில் முக்கியமான ஒன்று, கடனைத் திருப்பிச் செலுத்துவதற்குத் தரப்படும் நீண்ட கால அவகாசம்.
நாம் வாங்கும் கடனைப் பல மாதங்கள் தவணைகளாகத் திருப்பிச் செலுத்த முடியும். அதாவது வீட்டுக் கடனை 5 ஆண்டுகளில் இருந்து 25 ஆண்டுகளிலும், சில நேரங்களில் 30 ஆண்டுகளிலும் திருப்பிச் செலுத்தக்கூடிய வசதி இருக்கிறது.
கடனைத் திருப்பிச் செலுத்த நீணட காலத் தவணைகள் இருந்தாலும், சில நிபந்தனைகள் உண்டு. அதாவது கடன் பெறும் நபர், பணியிலிருந்து ஓய்வுபெறுவதற்குள் இ.எம்.ஐ. (மாதத் தவணை) முடிந்துவிடுமா என்பதை வங்கிகள் பார்க்கும். ஒருவேளை ஓய்வுபெற்ற பிறகும், இ.எம்.ஐ. செலுத்துவதற்கான வருமானம் இருக்கும்பட்சத்தில் வங்கிகள் கடன் அளிக்கும்.
அதாவது அவரது ஓய்வூதியம் இ.எம்.ஐ. செலுத்தப் போதுமானதாக இருக்குப்பட்சத்தில் கடன் அளிக்க வங்கிகள் முன்வரும். அதே சமயம் கடன் பெறுபவர், 60 வயதைக் கடந்த பிறகு கடனை அடைப்பதற்கு அவகாசம் கோரினால், அவரது வாரிசுகள் இந்தக் கடனுக்கு எழுத்துபூர்வமாக உத்திரவாதம் அளிக்க வேண்டும்.
கடனைத் திருப்பிச் செலுத்தும் வகையில் நமது வருமானம் இருக்கிறதா என்பதையும் வங்கிகள் பரிசீலிக்கும். நமது மாத வருமானத்தில் இருந்து உத்தேச வீட்டுக் கடனுக்கான தவணைத் தொகை, உள்ளிட்ட அனைத்து வகைப் பிடித்தங்களும் போக, குறைந்தபட்சம் 35 சதவீதமாவது குடும்பச் செலவுகளுக்காக எடுத்துச் செல்கிறோமா என்பதை வங்கிகள் உறுதிசெய்கின்றன.
இதற்குக் காரணம் தவணை செலுத்துவதால் நமது அன்றாட குடும்பச் செலவுக்குப் பணத் தட்டுப்பாடு ஏற்பட்டுவிடக் கூடாது. அச்சமயம் நம்மால் தவணையைச் சரியாகச் செலுத்த முடியாமல் போகலாம்.
வங்கிகள் கேட்கும் ஆவணங்கள்
# பூர்த்தி செய்யப்பட்ட கடன் விண்ணப்பப் படிவம்
# விண்ணப்பதாரரின் புகைப்படம்
# புகைப்படத்துடன் கூடிய அடையாளச் சான்று
# முகவரிச் சான்று
# வருமானச் சான்று
# மனைப் பத்திரம் (சார்பதிவாளர் அலுவலகத்தில் பதிவு செய்த பத்திரம்)
# தாய்ப் பத்திரம் (இப்போதைய பத்திரத்துக்கு முந்தைய மனைப் பத்திரம்)
# 13 ஆண்டுகளுக்குக் குறையாத வில்லங்கச் சான்றிதழ் (ஈ.சி)
# விற்பனைப் பத்திரத்தின் நகல்
# சட்ட வல்லுநரின் கருத்து (லீகல் ஒபீனியன்)
# உரிய அதிகாரியிடன் (சி.எம்.டி.ஏ அல்லது டிடிசிபி அதிகாரிகளிடம்) பெறப்பட்ட மனைக்கு உண்டான வரைபடம் அங்கீகார நகல்.
# கட்டுமானச் செலவு அல்லது வீட்டின் மதிப்பீடு பற்றிய பொறியாளர் அறிக்கை (வேல்யூவேஷன் ரிப்போர்ட்)
வங்கிக் கடன் விண்ணப்பிக்கும் முன் இவற்றை வங்கிகளில் ஒரே நேரத்தில் தாக்கல் செய்துவிட்டால், கால தாமதத்தைத் தவிர்க்கலாம்.

http://tamil.thehindu.com/society/real-estate/%E0%AE%B5%E0%AF%80%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%9F%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3-%E0%AE%B5%E0%AF%87%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B7%E0%AE%AF%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/article6469654.ece