Saturday, October 25, 2014

இடப்பற்றாக்குறையை எப்படிச் சமாளிக்கலாம்?

அதற்காக நீங்கள் சிறிது மெனக்கெட வேண்டும், சில ஒழுங்குசெய்யும் ஏற்பாடுகளைச் செய்ய வேண்டும் அவ்வளவுதான்.
இந்த ஒழுங்குசெய்யும் வேலைகளைத் தினமும் பதினைந்து நிமிடங்கள் செய்துவந்தாலே போதும். அதனால், ஒருநாளின் அதிக நேரத்தை நீங்கள் மிச்சப்படுத்தலாம். அதற்கான சில வழிமுறைகள் இதோ...
சாவிகளையும் பைகளையும்தான் வீட்டில் வைத்த இடத்தை மறந்து விட்டுப் பெரும்பாலான நேரத்தில் தேடுவோம். இதைத் தவிர்ப் பதற்குச் சிறிய அளவிலான க்ளோஸ்டு அலமாரி ஒன்றை வாசல் கதவிற்கு அருகில் வைத்துக்கொள்ளுங்கள்.
அதில் சாவிகளையும், பைகளையும் போட்டுக்கொள்ளுங்கள். இதனால் சாவிகளையும், கைப்பைகளையும் வெளியே கிளம்பும்போது தேடுவது குறையும். ஷு ரேக்கிற்கும் இதேமாதிரி ஒரு சின்ன க்ளோஸ்டு அலமாரி வாங்கிக்கொள்ளலாம்.
பல பயன்பாட்டு மேஜை இன்றைய நவீன வீடுகளுக்கு ஏற்றது. கம்ப்யூட்டர் வைத்துக்கொள்ள, குழந்தைகள் எழுதுவதற்கு, க்ராப்ட் வேலை செய்வதற்கு என இந்தப் பல பயன்பாட்டு மேஜை உங்களுக்கு நிறைய உதவும்.
டிராயர்கள் இணைந்த கட்டில்களை வாங்குவதால் தலையணைகள், போர்வை என அனைத்தையும் அதற்கு உள்ளே வைத்துக்கொள்ளலாம். அதோடு சீசனுக்குப் பொருந்தாத ஆடைகளையும் அதற்கு உள்ளே வைத்துக்கொள்ளலாம். இதனால் நிறைய இடம் மிச்சமாகும்.
முக்கியமான ஆவணங்களையும், பில்களையும் வைப்பதற்காகவே தனியாக இரண்டு டிராயர்களை ஒதுக்கிக்கொள்ளுங்கள். ஒவ்வொரு மாதக் கடைசியிலும் தேவையில்லாத பில்களையும், ஆவணங்களையும் இதனால் எளிதாக நீக்கிவிடலாம்.
சமையலறைப் பாத்திரங்களை அன்றாடத் தேவைகளுக்கு ஏற்ற வகையில் அடுக்கிக்கொள்ளுங்கள். தினமும் பயன்படுத்துவது, ஸ்டீல், நான்-ஸ்டிக், டம்ளர்கள், காபி கோப்பைகள், கண்ணாடி பாத்திரங்கள், விழா பாத்திரங்கள் என பயன்பாட்டிற்கு ஏற்ற மாதிரி வரிசையில் அலமாரியில் அடுக்கி வைத்துக்கொள்வது சமைக்கும் நேரத்தை மிச்சமாக்கும்.
உங்கள் நகைகளை ஒழுங்கமைத்துக் கொள்வதால் ஒரு நாளில் பல மணி நேரத்தை நீங்கள் சேமிக்கலாம். கொக்கி மாடல் காதணிகள், சாதாரண காதணிகள், நெக்லேஸ்கள் எனப் பிரித்து வைத்துக்கொண்டால் தேடாமல் வேண்டியதை எடுத்துக்கொள்ளலாம்.
குழந்தைகளின் ஸ்டேஷ்னரி பொருட்களை வைத்துக்கொள்ள சுவரில் தொங்கவிடக்கூடிய அடுக்குப் பைகள் சிறந்த தேர்வு. சணல், துணி, காகிதம் போன்றவற்றாலான இந்தப் பைகள் கடைகளில் கிடைக்கின்றன.
குளியலறைச் சுவரிலும், கதவிலும் கொக்கிகள் வைத்து பொருட்களை அதில் தொங்கவிடுவது நிறைய இடத்தை மிச்சப்படுத்தும்.
உங்கள் அறைக்கலன்களின் நிறமும், சுவர்களின் நிறமும் ஒன்றாக இருப்பதும் வீட்டில் நிறைய இடம் இருப்பதைப் போன்ற தோற்றத்தை அளிக்கும்.

No comments:

Post a Comment