Thursday, October 30, 2014

அரிசியும் நோய் தீர்க்கும்

Rice is the most important food of the South Indian population. For most of us, have a velaiya eats the rice.

தென்னிந்திய மக்களின் மிக முக்கிய உணவுப்பொருள் அரிசி. நம்மில் பெரும்பாலானோருக்கு ஒரு வேளையாவது அரிசி சாதம் சாப்பிட்டே ஆகவேண்டும். அண்மைக்காலமாக அரிசிக்குப் பதில் அல்லது அரிசியைக் குறைத்துக்கொண்டு கோதுமையை அதிக உணவாகப் பயன்படுத்தும் பழக்கம் பெருக ஆரம்பித்திருக்கிறது. அரிசியை முழுமையாகத் தவிர்க்க வேண்டும் என்று சிந்திப்பதே தவறு. அகத்தியர் குணவாகடம், பதார்த்தகுண சிந்தாமணி போன்ற மருத்துவ நூல்களில் 25க்கும் மேற்பட்ட அரிசி வகைகள் மருந்தாகவும், உணவாகவும் பயன்படும் முறை விளக்கப்பட்டுள்ளது.

ஆதிச்சநல்லூர் அகழ்வாராய்ச்சியில் 3 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே நெல் மற்றும் அரிசியின் பயன்பாடும் நம் முன்னோர்களிடையே இருந்ததற்கான சான்றுகள் கிடைத்துள்ளன. அரிசியையும் மற்ற தானியங்களையும் அவற்றின் தன்மைகளுக்கேற்ப எப்படிப் பயன்படுத்த வேண்டும் என்பதை தெரிந்து கொண்டு அதற்கேற்ப உணவாக்கிக் கொள்வது நல்லது. அரிசி என்றால், மேலோட்டமாய் புழுங்கல் அரிசி, பச்சரிசி, பாசுமதி அரிசி, சிகப்பரிசி இவைகளைத்தான் நம்மில் பலர் அரிசி என்று தெரிந்து வைத்திருக்கிறோம். இவைதவிர வெவ்வேறு சூழல்களில் வளரக்கூடிய பல்வேறு வகையான நெல் வகைகள் அந்தந்தச் சூழலின் மண்ணின் தன்மையையும் சிறந்த மருத்துவ குணங்களையும் கொண்டிருப்பதை நாம் அறிந்திருக்கவில்லை.

கருங்குறுவை என்றொரு அரிசி கறுப்பு நிறத்திலும் செங்குறுவை என்றொரு அரிசி சிகப்பு நிறத்திலும் இருக்கும். இவைபோல வண்ண அரிசி வகைகளும் நம் பாரம்பரியத்தில் இருந்தன. அரிசியில் மட்டுமல்ல, எந்தப்பொருளிலுமே நிறமிகளிருந்தால் அவற்றில் ஆன்டி ஆக்சிடென்ட் தன்மை நிறைவாக இருக்கும் என்பதை நாம் மனதில் கொள்ள வேண்டும். அரிசியின் மேல் இருக்கும் தவிடு, உமி, அன்னக்காடி இவை எல்லாவற்றிலும் நல்ல மருத்துவ குணங்களும் உடலுக்குத் தேவையான சத்துக்களும் நிறைந்துள்ளன. பருமனாக இருக்கும் அரிசியில் நார்ச்சத்து அதிகம் இருக்கும். இவ்வகை பருமனான அரிசி சமைக்க அதிக நேரம் எடுக்கும் என்பதும் அதேபோல் செரிமானத்துக்கும் அதிக நேரம் எடுத்துக்கொள்ளும் என்பதும் குறிப்பிடத்தக்கது.

இவை ரத்தச் சர்க்கரையைக் கட்டுப்படுத்தக் கூடிய தன்மைக் கொண்டவை உதாரணத்துக்கு மணிச்சம்பா அரிசியை கூறலாம். இதுபோல், மாப்பிள்ளைச் சம்பா அரிசியில் சாதம் சமைத்து மதிய உணவு சாப்பிட்டால் இளவட்டக்கல்லைத் தூக்கும் அளவுக்கு உடல் உறுதியும், வலிமையும் பெறலாம். புரதச்சத்து, நார்ச்சத்து, தாதுச்சத்து, உப்புச்சத்து எல்லாம் இந்த அரிசியில் நிரம்ப உள்ளன. விஷமுறிவுக்கு கருங்குருவை, பாலூட்டும் தாய்மார்களுக்கு நீளச்சம்பா, பொலிவான தோற்றத்திற்கு அன்னம் அழகி, வாதத்தை போக்க (கெட்ட நீரை போக்க) சீரகச்சம்பா உள்ளிட்ட அரிசிகள் உள்ளன. வயிறு தொடர்பான பிரச்னைகள் இருந்தால் பச்சரிசிச் சாதம் சாப்பிடக்கூடாது.

கைக்குத்தல் அரிசி என்பது தவிடு பிரியாமல் இருக்கக்கூடியது. இதில் நார்ச்சத்து அதிகம் உள்ளது. கூடவே ஆன்ட்டி ஆக்சிடென்ட் தன்மையும் உள்ளது. புழுங்கல் அரிசி எளிதில் ஜீரணமாகும். மலச்சிக்கல் ஏற்படுத்தாது. அரிசி சாதம் மட்டுமல்ல அரிசிப் பொரியும் பித்தத்தைச் சமப்படுத்தக்கூடியது தான். அவல் வாதத்தைச் சமப்படுத்தும் மாவுச்சத்து மிகுந்தது. அரிசியை முற்றிலுமாகத் தவிர்க்காமல் அதனூடாகவே மற்ற பல தானியங்களையும் உணவில் சேர்த்துக்கொள்ள வேண்டியது அவசியம். 

No comments:

Post a Comment