Saturday, October 25, 2014

ஜென் வீடு

வேகமும் பரபரப்புமாக வாழ்க்கை மாறிவருகிறது. அதனால் நாள் முழுவதும் ஓடிவிட்டு இளைப்பாறுவதற்குத் திரும்பும் நமது வீடு அமைதியாகவும், மனதுக்குப் புத்துயிரூட்டுவதாகவும் திகழவேண்டும். நிதான மான அமைதியான ரசனையான வாழ்க்கைக்கு நமது வீட்டை ஜென் வீடாக மாற்றுவது அருமையான வழிமுறையாகும்.
வீட்டு அலங்காரத்தைப் பொறுத்தவரை ஜென்னின் தாரக மந்திரம் ஒன்றே ஒன்றுதான். குறைவான அறைக்கலன்கள், இயற்கையான வண்ணங்கள், ஆடம்பர எளிய சுவர்கள் கொண்டதுதான் ஜென் வடிவமைப்பு. நீர், நிலம், தீ, மரம் மற்றும் உலோகம் ஆகியவற்றைச் சேர்த்து உருவாக்கப்பட்டதுதான் ஜென் வீடு.
எல்லாவற்றையும் குறையுங்கள்
உங்கள் வீட்டை ஜென் வீடாக மாற்ற எதையெல்லாம் குறைக்க முடியுமோ அதையெல்லாம் குறைப்பதே முதல் படி. அமைதியும் எளிமையும்தான் ஜென்னின் அடிப்படைகள்.
வீட்டின் உள்புற அறைகளுக்கும், வெளிப்புறத்துக்குமான தடுப்பை முடிந்தளவு குறையுங்கள். அறைக்கலன்களைப் பொறுத்தவரை தேவையானவற்றை மட்டுமே இட்டு, நிறைய காலி இடம் இருக்குமாறு பார்த்துக்கொள்ளுங்கள். பொருட்கள் நிரம்பிய இடமும், காலியாக இருக்கும் இடமும் சமநிலையில் இருக்க வேண்டும்.
உங்களிடம் இருக்கும் புகைப்படங்கள், ஓவியங்கள், நினைவுப் பொருட்கள் எல்லாவற்றையும் அறையில் அடுக்க வேண்டும் என்ற அவசியம் இல்லை. அலங்காரப் பொருட்கள், வண்ணத்திரைகள் போன்றவற்றைக் கூடுமானவரை அகற்றுங்கள்.
இயற்கையோடு கூடிய உறவு
அகத்துக்கும் புறத்துக்கும் இடையிலான பிரிவுகளை இல்லாமலாக்குவதே ஜென் அழகியல் ஆகும். பக்கவாட்டில் நகரும் கண்ணாடிக் கதவுகள், பிரெஞ்ச் பாணி ஜன்னல்கள் போன்றவை அறைகளை வெளியோடு தொடர்பு கொள்ளவைக்கும். வீட்டுக்கு வெளியே கொஞ்சம் இடம் இருந்தால் ஒரு சிறிய குளத்துடன் கூடிய தோட்டத்தை அமைக்கலாம். அங்கு கல் மற்றும் மரத்தாலான எளிய இருக்கைகளில் அமர்ந்து ஏகாந்தமாகவும் அமைதியாகவும் நேரத்தைக் கழிக்கலாம்.
கடல் நீலம், தாவரப் பச்சை, மணல் நிறம் போன்ற கண்ணைப் பறிக்காத நிறங்களில் அறைகள் இருந்தால் அமைதியான உணர்வைத் தரும். இடுகலன்களுக்குக் கூடுமானவரை மரப்பொருட்களையே தேர்ந்தெடுங்கள். திரைகளுக்கும், தடுப்புகளுக்கும் மூங்கில்களைப் பயன்படுத்தலாம். திண்டுகளுக்குக் கற்களையும் பாறைகளையும் பயன்படுத்தலாம். பாய்களை விரிப்புகளுக்குப் பயன்படுத்தலாம். ஜன்னல் திரைகள் மற்றும் விளக்குத் துணிக்குப் பட்டுத் துணிகளைப் பயன்படுத்தலாம்.
ரைஸ் பேப்பரால் சுற்றப்பட்ட விளக்குகள் அறையை அமைதியாகவும் குளிர்ச்சியாகவும் காட்டும். இயற்கைக் காட்சிகளையும், சிக்கனமான கோட்டுச் சித்திரங்களையும் சுவர்களில் தொங்கவிடலாம். அறைகளில் மூங்கில் செடித் தொட்டிகளை அமைக்கலாம். அறைக்குள்ளேயே நீருற்று ஒன்றையும் அமைத்தால் மனம் நிச்சலனமாகும் அனுபவத்தை உணர்வீர்கள். கூழாங்கற்களை ஆங்காங்கே பானைகளில் அடுக்கி வைக்கலாம்.
இப்போது உங்கள் வீடு ஜென் வீடு

No comments:

Post a Comment