நடுத்தர மற்றும் வறுமைக் கோட்டுக்கு கீழே உள்ள மக்களுக்கு, அவர்களின் பொருளாதார நிலைக்கு ஏற்ற வகையிலான விலையில் வீடுகள் கிடைக்குமா? குறைந்த விலை வீடுகளின் எண்ணிக்கையை அதிகரிக்க மத்திய - மாநில அரசுகள் என்னென்ன நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் என்பதைப் பார்ப்போம்...
உறுதி செய்யுமா அரசு?
குடிசை மாற்று வாரியம், நகர்ப்புற வறுமை ஒழிப்புத்துறை ஆகியவற்றின் மூலம் குறைந்த விலையில் வீடு கிடைக்கப் பெறுபவர்களின் எண்ணிக்கையும் குறைவு. அந்தத் துறைகளின் மூலம் மேற்கொள்ளப்படும் திட்டங்களும் குறைவு. தனியார் கட்டுமான நிறுவனங்கள்தான் அதிக அளவில் வீடுகளைக் கட்டுகின்றன. எனவே, இவர்களை அரவணைத்து மேற்கொள்ளப்படும் திட்டங்கள் மற்றும் கொள்கை ரீதியான முடிவுகள் மட்டுமே, குறைந்த விலை வீடுகளின் எண்ணிக்கையை அதிகரிக்க முடியும். குறிப்பாக, அரசின் சார்பில் வீட்டு மனைகள் கட்டுவதற்காக வழங்கப்படும் நிலங்களில் குறைந்தது 25 சதவீதமும், அதிகபட்சமாக 50 சதவீதமும், குறைந்த விலையிலான வீடுகள் கட்டப்படுவதை அரசு உறுதிப்படுத்த வேண்டும்.
மாற்றுத் திட்டங்கள்
அடுத்தபடியாக, நகரில் உள்ள பழமையான கட்டிடங்களை மறுசீரமைப்புத் திட்டங்கள் மூலம் மேம்படுத்தி, அவற்றை பொருளாதார நிலையில் பின்தங்கிய குடும்பங்களுக்கு ஏற்ற விலையில் மாற்றித் தர வேண்டும். பெருநகரங்களில் நிலத்தின் விலை அதிகரித்து கொண்டே இருப்பதால், புறநகர்ப் பகுதிகளில் மக்கள் குடியேறுவதற்கு ஏற்ற வகையில், போக்குவரத்து வசதி, அடிப்படை வசதிகளையும் மத்திய, மாநில அரசுகள் மேம்படுத்த வேண்டும். அப்போதுதான், பெருநகரங்களில் பணியாற்றினாலும், அதையொட்டியுள்ள புறநகர்ப் பகுதிகளில் வசிக்க மக்கள் முன்வருவார்கள். புறநகர்ப் பகுதிகளை மேம்படுத்துவதன் மூலமே பெருநகரங்களை போக்குவரத்து நெரிசலில் இருந்தும், மக்கள் தொகை பெருக்கத்தால் ஏற்படும் பாதிப்புகளில் இருந்தும் காப்பாற்ற முடியும்.
அரசு மற்றும் தனியார் பங்களிப்பை மேம்படுத்துவது ஒருபுறம் நடைபெற்றாலும், தனியார் நிறுவனங்கள் குறைந்த விலை வீடுகளை அதிகளவில் கட்டுமானம் செய்யத் தேவையான சூழலை உருவாக்க அரசு சில முடிவுகளை எடுக்க வேண்டும். குறிப்பாக, வருவாய் குறைந்த குடும்பங்கள் மற்றும் பொருளாதார ரீதியாக பின்தங்கியவர்களுக்கு வங்கிக் கடன் அளிப்பதில் முன்னுரிமை அளிக்கும் கொள்கைகளை மத்திய- மாநில அரசுகள் வகுக்க வேண்டும்.
பெரு நிறுவனங்கள் சார்பில் மேற்கொள்ளப்படும் பிரம்மாண்ட கட்டுமானத் திட்டங்களுக்கு, உதாரணமாக ஆயிரம் முதல் 2 ஆயிரம் வீடுகளை உள்ளடக்கிய ஒரு திட்டத்திற்கு, அரசின் தரப்பில் இருந்து அனுமதி பெறுவதில் பல்வேறு சிக்கல்களும், பிரச்சினைகளும் இருக்கின்றன. இதில், 40 முதல் 60 கட்டுப்பாட்டு அமைப்பு மற்றும் துறைகளைச் சேர்ந்த 150க்கும் அதிகமான அதிகாரிகளிடம் தனியார் கட்டுமான நிறுவனங்கள் அனுமதி பெற வேண்டியிருக்கிறது. இதனை துரிதப்படுத்த நடவடிக்கை எடுப்பதுடன், நடுத்தர குடும்பங்களுக்கான குறைந்த விலை வீடுகளை அதிகளவில் கட்டித் தரத் திட்டமிடும் தனியார் நிறுவனங்களுக்கு விரைவில் அனுமதி வழங்கப்படும் என மத்திய, மாநில அரசுகள் அறிவிக்கலாம். இதன் மூலமும் குறைந்த விலை வீடுகளின் கட்டுமானம் குறிப்பிடத்தக்க அளவு உயரும்.
சலுகைகள் தேவை
இதுமட்டுமின்றி, மத்திய, மாநில அரசுகள் அதிகளவில் வீட்டு வசதித் திட்டங்களை நடைமுறைப்படுத்த முன்வர வேண்டும். இதற்கு தனியாரின் ஒத்துழைப்பையும் அரசு பெற வேண்டும். உதாரணமாக அரசின் சார்பில் கட்டுமான நிறுவனங்களுக்கு சலுகை விலையில் நிலங்களை வழங்க அரசு முன்வரும் போது, தனியார் கட்டுமான நிறுவனங்களுக்கு சில நிபந்தனைகளையும் அரசு முன்வைக்கலாம். அதாவது, மானிய விலையில் வழங்கப்பட்ட நிலங்களில் கட்டப்படும் வீடுகளில் சுமார் 70 சதவிகிதம் விலை குறைந்த வீடுகள் கட்டுவதற்கு பயன்படுத்தப்பட வேண்டும் என விதிமுறை கொண்டு வரலாம். இந்த 70 சதவிகித இடத்தில் கட்டப்படும் வீடுகளுக்கு அரசு சார்பில் மானியம் வழங்கப்படுவதுடன், வரிச் சலுகைகள் உள்ளிட்ட இதர சலுகைகள், அதாவது பத்திரப் பதிவு செலவுகளை வழக்கத்தில் இருப்பதைவிட குறைவாக நிர்ணயிப்பது போன்றவற்றை அறிவிக்கலாம்.
இதன் மூலம் ஏழை, எளிய மக்களுக்கு குறைந்த விலையில் கிடைக்கும் வீடுகளின் எண்ணிக்கை அதிகரிக்கும். தனியார் நிறுவனங்களும் மீதமுள்ள 30 சதவிகித இடத்தில் வாடிக்கையாளர்களின் விருப்பத்திற்கு ஏற்ப வீடுகளைக் கட்டிக் கொடுத்து லாபம் பெறலாம். எனவே, மத்திய- மாநில அரசுகள் தாமாக முன்வந்து நடவடிக்கை எடுத்தால் மட்டுமே, நாட்டில் உள்ள அனைவருக்கும் குறைந்த விலையில் வீடு கிடைக்கும்.