Saturday, October 25, 2014

ஆன்லைனில் வீடு வாங்கலாமா? - கேள்வி - பதில்

கேள்வி : இருந்த இடத்திலேயே ஆன்லைன் மூலம் வீடோ, மனையோ வாங்குவது நம்பகமானதா?
- ஆர்.மகேந்திர செல்வன்,
சாய்பாபா காலனி, கோவை
இதற்குப் பதிலளிக்கிறார் இந்தியா ப்ராபர்ட்டி.காம் சி.இ.ஓ. கணேஷ் வாசுதேவன்.
இந்திய ரியல் எஸ்டேட் துறையில் வெளிப்படைத்தன்மை மிகவும் குறைவுதான். எனவே வீடு கட்டும் கட்டுநர்கள் மற்றும் இடைத்தரகர்களின் நம்பகத்தன்மையைச் சந்தேகத்துடனேயே பார்க்கும் நிலை இங்கு உள்ளது. இந்தப் போக்குதான் ஆன்லைன் மூலம் மனையோ வீடோ வாங்குவதற்கு முதல் தடையாகவும் உள்ளது. இதில் நம்பகத்தன்மை அம்சம் என்பது, நாம் வாங்கும் வீடு, மனை எல்லாவற்றையும் சட்டப்பூர்வமாக ஆராய்வதில்தான் உள்ளது.
உதாரணமாக நீங்கள் ஒரு வீடு வாங்க விரும்புகிறீர்கள். அந்த வீட்டை நேரடியாகச் சென்று பார்த்து வாங்கும் போது உங்களுக்கு நம்பிக்கை ஏற்பட்டுவிடும். ஆனால் ஆன்லைனில் வீடு வாங்கும்போது அந்த வெளிப்படைத்தன்மையைச் சொல்வது கொஞ்சம் கஷ்டமாகிவிடுகிறது.
நாம் இன்னொரு விஷயத்தையும் கவனத்தில் கொள்ள வேண்டும். அதாவது, பெரும்பாலான வீட்டுமனைகள் மற்றும் சொத்துகள் யார் வசம் உள்ளன என்ற ஆவணங்கள் இங்கு கணினியமயமாக்கப்படவில்லை. அப்படி இருந்தால் ஆன்லைனிலேயே நீங்கள் எல்லாவற்றையும் பார்த்துவிட முடியும். அந்த நிலை இல்லாத காரணத்தால் நீங்கள் ஆன்லைனில் சொத்துகள் வாங்கும்போதுகூட எல்லாவற்றுக்கும் நேரடியாகச் செல்வது தவிர்க்க முடியாததாகவே உள்ளது.
கேள்வி: வீட்டுக் கடனைத் திருப்பிச் செலுத்த முடியாமல் வங்கிகள் எடுத்துக் கொள்ளும் வீட்டை, ஏலத்தில் விடும்போது அதில் யார் வேண்டுமானாலும் கலந்துகொள்ள முடியுமா?
- ஆர். ஆறுமுகம்,
காரப்பாக்கம், சென்னை
இதற்குப் பதிலளிக்கிறார் ஓய்வு பெற்ற வங்கி அதிகாரி கோபாலகிருஷ்ணன்.
நிச்சயம் முடியும். வீட்டை வங்கிகள் ஏலம் விட்டால், அதை ஏலத்தில் எடுக்க யார் வேண்டுமானாலும் கலந்து கொள்ளலாம். ஏலத்தை வங்கிகள் நேரடியாக நடத்தாது. அரசால் அங்கீகரிகப்பட்ட ஒரு ஏலம் நிறுவனம் மூலம் வீடு ஏலத்தில் விடப்படும். முதலில் வீடு அமைந்துள்ள பகுதியில் தண்டோரா மூலம் வீடு ஏலத்தில் விடப்படும் விஷயம் தெரிவிக்கப்படும். நோட்டீஸ் விநியோகிப்பார்கள். சில வங்கிகள் பத்திரிகை விளம்பரமும் செய்வதுண்டு.
முதலில் ஏலத்தில் கலந்துகொள்ள சிறிய அளவில் முன் பணம் கட்டச் சொல்வார்கள். ஏலத்தில் கலந்துகொள்வதற்காக செலுத்தப்படும் தொகை இது. ஒருவேளை ஏலத்தில் உங்களுக்கு வீடு கிடைத்துவிட்டால், வீட்டின் மதிப்பில் 25 முதல் 30 சதவீதத் தொகையை அங்கேயே கட்டிவிட்டு ரசீது பெற்றுக் கொள்ள வேண்டும். பிறகு குறிப்பிட்ட காலக் கெடுவுக்குள் எஞ்சிய பணத்தைக் கட்டி விட வேண்டும். காலக் கெடுவுக்குள் பணம் செலுத்தாமல் போனாலோ, பணம் இல்லை என்று கைவிரித்தாலோ தானாகவே ஏலத்தில் எடுத்த வீடு ரத்தாகிவிடும்.
வீடு ஏலத்திற்கு வரும் போது வங்கி சட்ட வல்லுநர்கள் துருவி துருவி விசாரிப்பார்கள். பத்திரங்களை ஆய்வு செய்வார்கள். பத்திரங்களில் எந்தவிதக் குறைபாடோ, வில்லங்கமோ இல்லை என்பதை உறுதி செய்த பிறகே வீடு ஏலத்திற்குக் கொண்டு வரப்படும்.
வங்கிகள் வீட்டை ஒரு நன்மை உள்ளது. வீட்டை வாங்குவதில் சட்ட ரீதியாக எந்தப் பிரச்சினையும் எழாது. வீட்டைப் பொது ஏலத்திற்கு வங்கியிடம் இருந்து எடுப்பதால் விலை நியாயமாக இருக்கும். வீடு ஏல விற்பனை விதிமுறைகளுக்கு உட்பட்டதாக இருக்கும்.
- தொகுப்பு: டி. கார்த்திக்

No comments:

Post a Comment