வீட்டை அழகாகவும் எடுப்பாகவும் காட்டுவதில் பெயிண்டுகளுக்கு முக்கிய இடம் உண்டு. வீட்டைக் கட்டும்போதுகூட ஆர்வம் காட்டாதவர்கள், பெயிண் டைத் தேர்வு செய்யும்போது மட்டும் மூக்கை நுழைப்பார்கள். அந்தளவுக்கு வண்ணங்களின் மீது அனைவருக்கும் விருப்பம் அதிகம். கட்டுமானத் துறையில் புதிய தொழில்நுட்பங்கள் பெருகி வருவதுபோல நவீனமயமான பெயிண்டுகளும் சந்தைக்கு வரத் தொடங்கியுள்ளன. இதுபோன்ற பெயிண்டுகள் வீட்டை அழகாகக் காட்டுவதுடன், பாதுகாப்பு அரணாகவும் விளங்குகின்றன. நீர் கசிவதைத் தடுப்பது, தூசி படிதல், தட்பவெட்பத்தை உட்புகாமல் தடுத்தல் போன்ற பாதுகாப்பு அம்சங்களைத் தற்போது பெயிண்டுகளின் வாயிலாகவும் பெற முடியும்.
ஒளிரும் வண்ணம்
இரவில் ஒளிரும் வகையிலான பெயிண்டுகள்தான் தற்போது சந்தையைக் கலக்கி வருகின்றன. சிறுவர்கள், பெரியவர்கள் என இருத்தரப்பினரிடையேயும் இதற்குத் தனி வரவேற்பு உண்டு. வீட்டின் வரவேற்பறை, சிறுவர்களுக்கான அறை போன்ற அறைகளில் இந்த வண்ணங்கள் அதிகம் பூசப்படுகின்றன. டைல்ஸ், மார்பிள் பதித்த இடங்களில் ஒளிரும் வண்ணங்களைப் பூசினால் அழகு கூடுகிறது. புகைப்படங்கள், ஓவியங்கள் மாட்டப்பட்டுள்ள இடத்திலும் ஒளிரும் வண்ணங்களைப் பூசினால் தனி அடையாளம் கிடைக்கிறது. ஒளிரும் வண்ணத்தைக் குழந்தைகள் விந்தையாகக் கருதுகின்றனர். அவர்களைக் குஷிப்படுத்த அவதார், டின்டின் போன்ற அனிமேஷன் படங்களில் வருவது போன்று பிரம்மாண்டமாகப் பூசலாம்.
தீமை கிடையாது
இந்த ஒளிரும் வண்ணங் களால் தீமைகள் ஏதும் உள்ளதா? நிச்சயம் இல்லை என்கிறார்கள் கட்டுமானப் பொறியாளர்கள். இரவில் கிடைக்கும் சிறிய ஒளியைக் கொண்டு இவை பிரகாசமாக மின்னுகின்றன. பிளோரசண்ட், பாஸ்பரசண்ட், ரேடியோலிமியஸ்டிக், ரேடியம் போன்ற பல மூலப் பொருட்களை அடிப்படையாகக் கொண்டு இவை சந்தைகளில் கிடைக்கின்றன.
ஒளிரும் ஓவியங்கள்
பிளோரசண்ட் வகையிலான வண்ணங்கள், டியூப்லைட் மூலம் கிடைக்கும் சிறிய வெளிச்சத்தை அதிகளவில் பிரதிபலிக்கும் தன்மை கொண்டவை. இவற்றைக் கொண்டு தற்போது வீடுகளில் ஓவியங்கள் வரையும் போக்கு அதிகரித்திருக்கிறது. இதன்மூலம் வரையப்பட்ட ஓவியங்கள் ஒளிரச் செய்ய மெல்லிய பிளோரசண்ட் விளக்குகள் இதன் மீது பொருத்தினால் மோதும், ஓவியங்கள் ஒளிரும்.
பாஸ்பரசண்ட் ஒளி
இதேபோலப் பாஸ்பரசண்ட் பெயிண்ட் பொதுவாகப் பாஸ்பரசை அடிப்படையாகக் கொண்டு ஒளிரும் பெயிண்ட். இது இரவில் எந்த விளக்குகளின் துணையும் இல்லாமல் ஒளிரும். இதைக் கொண்டு வீடுகளில் கலைநுட்பம் மிகுந்த ஓவியங்களை வரையலாம்.
ரேடியம் ஒளி
ரேடியோலிமியஸ்டி வண்ணங் கள் ரேடியோ ஆக்டிவி ஐசோடோ முறையில் ஒளிர்கின்றன. இவற்றைப் பெரும்பாலும் முழு நீளச் சுவர்களில் தீட்டலாம். இவை முழு சுவர்களையும் ஒளிரச் செய்யும் என்பதால், வீட்டுக்கும் அழகு கூடும். இதற்கும் சிறிய அளவிலான வெளிச்சம் தேவையே. சிறுவர்களுக்கான அறைகளில் இந்த ரேடியம் பெயிண்டைப் பூசலாம். இந்த வகை பெயிண்டுகள் மூலம் மெல்லிய தூரிகைகள் உதவியுடன் ஓவியம் வரையலாம்.