கட்டடத் துறையில் இன்றைக்குப் பரவலாகப் புழங்கும் ஒரு சொல் ‘ஜீரோ எனர்ஜி வீடு’. இது என்ன ஜீரோ எனர்ஜி எனக் கேட்கிறீர்களா? இயந்திரம், மின்சாரம் போன்ற ஆற்றல்களைக் குறைந்த அளவில் பயன்படுத்தி கட்டடப் பணிகளை மேற்கொள்ளும் தொழில் நுட்பம்தான் இது. ஆற்றல்கள் இல்லாமல் எதுவும் சாத்தியமில்லை. ஆனால் இயற்கையைப் பயன்படுத்தி நாம் கூடியவரை செயற்கையான ஆற்றலைத் தவிர்க்கலாம்.
இது இத்தாலி பொறி யாளர்கள் கண்டுபிடித்த ஒரு தொழில்நுட்பமாகும். முடிந்த வரை இயந்திரங்களைப் பயன்படுத்துவதைக் குறைத்து, மின்சாரத்தை எதிர்பார்ப்பதையும் தவிர்க்க வேண்டும். வெப்பத்தைப் பயனுள்ள விதத்தில் பயன்படுத்துவதற்காக அதை இழக்காமல் இருக்க வழி காண வேண்டும்
பொதுவாகக் கான்கிரீட்டைப் பக்குப்படுத்த செயற்கையான வெப்பம் இப்போது பயன் படுத்தப்பட்டு வருவது நடைமுறையில் உள்ளது. ஆனால் சிமென்ட்டைத் தண்ணீருடன் சேர்க்கும்போது வெப்பம் வெளிப்படும். இந்த வெப்பத்தையே கான்கிரீட்டைப் பக்குவப்படுத்துவதற்குப் பயன்படுத்தலாம். அதில் உள்ள வெப்பம் குறையாமல் இருப்பதற்காக வெப்பத்தைக் கடத்தாத கோணிப்பைகளைக் கொண்டு போர்த்தலாம்.
இதுமாதிரியான பல எளிய வழிமுறைகளைப் பின்பற்றுவதால், கிடைப்பதைப் பயனுள்ள வகையில் பயன்படுத்திக் கொள்ளலாம். கொஞ்சம் கவனம் செலுத்தினால் வேறு பல வேலைகளையும் தேவைகளையும் குறைக்கலாம். அதன் மூலம் செலவுகளையும் குறைக்க முடியும். இதைப் பற்றி விரிவாக ஆராய்ச்சி செய்திருக்கிறார்கள்.
ஜீரோ எனர்ஜி சிஸ்டம் வழிமுறையைப் பின்பற்றுவதால் கான்கிரீட்டுக்கு நீடித்த உழைப்பும் தரமும் கூடுகின்றன. தேவைப்படும் மூலப் பொருட்களின் அளவையும் கணிசமாகக் குறைக்கலாம். ஆற்றலுக்கான செலவுகள் என்று எடுத்துக் கொண்டால் ஆட்கூலி முதல் பெட்ரோலுக்கும் மின்சாரத்திற்கும் ஆகும் செலவுகள் எல்லாமே கணக்கில் வந்துவிடும்