கட்டடத்திற்கு உறுதி சேர்ப்பதில் முக்கியமானவை கற்கள். அதனால் கட்டுமானக் கற்கள் தயாரிப்பில் கூடுதல் கவனம் எடுத்துக்கொள்ளப்படுகிறது. அப்படித் தயாராகும் கற்கள், இரும்பைப் போலக் கடினமாக இருக்கும். சரி இதற்கு இரும்பையே பயன்படுத்தலாமே என வேடிக்கையாகத் தோன்றலாம். இப்போது இரும்பிலும் வந்துவிட்டன கற்கள். ஆம், இரும்பு உற்பத்தி ஆலைக் கழிவுகளைப் பயன்படுத்திக் கட்டுமானக் கற்கள் தயாரிக்கும் நுட்பம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அமெரிக்காவைச் சேர்ந்த ACS’ Industrial & Engineering Chemistry Research நிறுவனம் இந்த ஆய்வை மேற்கொண்டது.
ஐரோப்பிய நாடுகளில் இரும்பு ஆலைகளில் இருந்து ஆண்டுக்கு பல லட்சம் டன் கழிவுகள் வெளியேறிக்கொண்டிருக்கின்றன. இந்தக் கழிவுகளை அகற்றுவதும் சிரமமான காரியமாக இருந்துள்ளது. இந்தக் கழிவை மறு சுழற்சி முறையில் பயன்படுத்த முடியுமா என ஆராய்ந்து பார்த்ததன் விளைவாகக் கட்டுமானக் கற்கள் தயாரிக்கலாம் எனக் கண்டுபிடித்துள்ளார். இரும்பு உற்பத்தி ஆலைக் கழிவுகளை வேல்ஜ் ஸ்லாக் (Waelz slag) என அழைப்பார்கள். இவை பாறைக் கற்களைப் போல் இருக்கும்.
இந்தக் கழிவில் இரும்புடன் சுண்ணாம்பும் கலந்து இருக்கிறது. சிலிகான் ஆக்ஸைடு, மாங்கனீஸ், காரீயம், துத்தநாகம் போன்ற உலோக ஆக்ஸைடுகளும் இதில் கலந்துள்ளன. இவ்வளவு வலுவான பொருட்கள் கலந்துள்ள இந்தக் கழிவை வெறுமே பள்ளங்களை நிரப்புவதற்காகவே பயன்படுத்திவந்துள்ளனர். ஆனால் இதைச் சிறந்த முறையில் பயன்படுத்தலாம் என்ற ஆராய்ச்சியின் விளைவே இந்தக் கட்டுமானப் பொருட்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. இத்துடன் சில பொருட்களைச் சேர்த்து உறுதியான கற்கள் தயாரித்து வருகிறார்கள்.
மூலப் பொருட்களில் உள்ள சில நச்சுக்கள் தயாரிப்புப் பொருளிலும் இருப்பது விரும்பத்தக்கதல்ல. இருப்பினும் இந்த நச்சுக்களின் விகிதம் பரிந்துரைக்கப்படும் அளவிலேயே இருப்பதால் இவற்றை வீட்டுக் கட்டுமானத்திற்குப் பயன்படுத்தலாம் என்கின்றனர். கனமான சுவர்களுக்கு இந்த இரும்பு கற்கள் மிகப் பொருத்தமாக இருக்கும்.