மின்வெட்டு பற்றிய கவலை இனி தேவை இல்லை. மின்சாரத்திற்காக மின்சார வாரியத்தை மட்டுமே நம்பிக் காத்திருக்க வேண்டிய அவசியமில்லை. நாமே நமக்குத் தேவையான மின்சாரத்தை உற்பத்தி செய்துகொள்ள முடியும்.
அது மட்டுமில்லாமல் நம் தேவைக்குப் போக உபரி மின்சாரத்தை மின்வாரியத்திற்கு வழங்கவும் முடியும். சமீபத்தில் அறிவிக்கப்பட்டிருக்கும் மின் கம்பங்களோடு இணைக்கப்பட்ட சூரிய மேற்கூரை மின் அமைப்பு திட்டம் இதைச் சாத்தியப்படுத்துகிறது.
மத்திய அமைச்சகத்தின் புதுப்பிக்கக்கூடிய எரிசக்தி துறை (Renewable Energy) சூரிய சக்தி மின்சார உற்பத்தியை ஊக்குவிக்கும் வகையில் ஒரு புதிய திட்டத்தை அறிவித்திருக்கிறது. ந்குடியிருப்புகள், தொழிற்சாலைகள், வியாபார மையங்கள், அலுவலக கட்டிடங்கள் என அனைத்து கட்டிடங்களிலும் மின் கம்பத்தோடு இணைக்கப்பட்ட சூரிய மின்சக்தி திட்டத்தை (grid connected solar power generation) நிறுவத் தொடங்குங்கள் என்கிறது இந்தத் திட்டம். அப்படி மேற்கொள்ளப்படும்
முயற்சிகளை ஊக்கப்படுத்தும் விதத்தில் சூரிய மின்சார யூனிட் வாங்குவதற்கான செலவில் 30 சதவீதம் வரை உதவித்தொகையாக வழங்க முன்வந்துள்ளது.ஒரு வாட்டுக்கு (watt) 100 ரூபாய் என்ற வீதத்தில் அது இருக்கும். இப்படி இந்தியா முழுவதும் நிறுவப்பட்டால் 20,000 மெகா வாட் சூரிய ஒளி மின்சாரத்தை 2022-ல் உற்பத்தி செய்ய முடியும் என மத்திய அமைச்சகம் நம்புகிறது.
மின் கம்பத்தோடு இணைக்கப்பட்ட சூரிய மின்சக்தியைத் திட்டமிட்டபடி உற்பத்தி செய்ய “செயல்திட்ட கொள்கை மற்றும் சுற்றுச்ச்சுழல் ஒழுங்குமுறை வாரியம்” ஒன்று அமைக்கப்பட்டிருப்பதாக மத்திய அமைச்சக இணையதளத்தின் தகவல் தெரிவிக்கிறது.
ஜவஹர்லால் நேரு தேசிய சூரிய மின்சக்தி திட்டமானது வேறு விதமான உதவித் தொகைத் திட்டத்தையும் அறிமுகப்படுத்தியுள்ளது. இந்தத் திட்டத்தின்படி மின்சாரக் கம்பங்களோடு இணைக்காமல் குடியிருப்புகள் உள்ளிட்ட அனைத்து கட்டிடங்களும் சூரிய ஒளி மின்சாரத்தை அவர்கள் தேவைக்கு மட்டும் உற்பத்தி செய்து கொள்ளலாம்.
இந்தத் திட்டத்தில் பொதுப் பிரிவின் கீழ் வரும் மாநிலங்களுக்கு 30 சதவீதமும் மற்ற மாநிலங்களுக்கு 60 சதவீதமும் மானியம் வழங்கப்படுகிறது.
சூழலியல் நண்பனான சூரிய ஒளி மின்சாரத்தை ஆதரிப்பவர்கள் பலர் இருந்தாலும், அதற்கான சாதனங்களின் விலை அனைவரையும் பயமுறுத்துகிறது. இதனை மனதில் கொண்டு, மத்திய அமைச்சகம் சூரிய எரிசக்தி கருவிகளின் விலையை வெகுவாகக் குறைத்து வருகிறது. சூரிய ஒளி மின்சாரத்தின் தேவை மிக அதிகமாக இருக்கின்ற நிலையில், அதன் உற்பத்தியோ மிகக் குறைவாக இருப்பதாகவே அமைச்சகம் கருதுகிறது. இந்த வருடம்
மே மாதம் வரை 2,647 மெகா வாட் சூரிய ஒளி மின்சாரம் மட்டுமே தயாரிக்கப் பட்டிருக்கிறது. ஆனால் கிட்டத்தட்ட 30 முதல் 50 மெகா வாட் சூரிய ஒளி மின்சாரத்தை 1 சதுர கிலோ மீட்டர் பரப்பினுள் நம்மால் உற்பத்தி செய்ய முடியும் என்பதுதான் நாம் அனைவரும் தெரிந்தும், புரிந்தும் கொள்ள வேண்டிய உண்மைத் தகவல்.