உங்களுக்குச் சென்னை போன்ற பெரிய நகரத்தில் சொந்தமாகத் தனி வீடு இருக்கிறது. சென்னையைப் பூர்வீகமாகக் கொண்ட பலருக்கும் சென்னையின் முக்கியமான இடங்களில் தனி வீடு சொந்தமாக இருக்கும். தி.நகர், மயிலாப்பூர், பெசண்ட் நகர் போன்ற இடங்களில் இம்மாதிரி வீடுகளை நாம் பார்க்கலாம்.
அந்த மாதிரி சொந்த வீட்டுக்காரர் ஒருவர் எங்கள் வீட்டுக்கு அருகில் உள்ளார். மரங்களும், செடிகொடிகளும் உள்ள பெரிய வீடு அது. அவருடைய பிள்ளைகள் எல்லோரும் வெளிநாட்டில் குடியேறிவிட்டார்கள். தனியாக வீட்டை வைத்துக்கொண்டு என்னசெய்ய என அதை ஒரு பில்டர்ஸுக்கு விற்க முடிவு செய்துவிட்டார். ஆனால் அதில் குழப்பம். அவரைப் போன்றோர் கவனிக்க வேண்டிய அம்சங்களை இங்கே சொல்கிறோம்.
வீட்டு உரிமையாளர் மொத்த இடத்தையும் நாலு கோடிக்கு விற்கிறார் என வைத்துக் கொள்ளுங்கள். அந்தத் தொகை மட்டுமல்லாது உரிமையாளரின் சொந்த உபயோகத்திற்காக ஒரு தனி ப்ளாட் கிடைக்கும். மீதி இருக்கும் ப்ளாட்களை பில்டர்ஸ் வெவ்வேறு நபர்களுக்கு ஒரு லாபத்தில் விற்றுவிடும் உரிமையிருக்கிறது. இடத்தின் அளவு, அப்ரூவலைப் பொறுத்து பில்டர்ஸ் எத்தனை ப்ளாட்களை வேண்டுமானாலும் கட்டிக்கொள்ள முடியும்.
பழைய வீட்டை இடித்துவிட்ட பிறகு அஸ்திவாரம் போட்டுத் தளங்கள் கட்டி முடிப்பதற்கு ஒன்றில் இருந்து இரண்டு ஆண்டுகள் வரை ஆகக் கூடும். அதுவரை வீட்டின் உரிமையாளருக்கு அருகில் ஒரு வசதியான ப்ளாட் ஒன்றை பில்டர்ஸ் வாடகைக்கு எடுத்துத் தருவார்கள். இந்த முறை நடைமுறையில் இருக்கிறது.
கட்டிடத்தை இடித்துத் தளங்கள் கட்டத் தொடங்கும் முன் CMDA ஒப்புதல் பெறுவது அவசியம். மேலும் சாந்தோம், பெசண்ட் நகர் போன்ற கடற்கரைப் பகுதிகளில் கட்டிடம் கட்ட நிறைய கட்டுப்பாடுகள் இருக்கின்றன. இவற்றை எல்லாம் சரியாகப் பின்பற்றாவிட்டால் கட்டிட வேலைகள் பாதிக் கிணறு தாண்டிய பிறகு சிக்கல் வந்து வேலைகள் தடைபடும்.
சொந்தமாக ஒரு தளம், கையில் தொகையும் கிடைப்பதால் இதற்கு வரி கட்ட வேண்டியது அவசியம். நிலம் வாங்கிய காலத்தில் மனையின் விலை, இப்போது அதன் வழி காட்டி மதிப்பு (Guidence value) எல்லாம் கணக்கிட்டு வருமான வரி விதிப்பார்கள். சம்பந்தப்பட்ட அரசுத் துறையிடம் தொடர்புகொண்டு முறையாக வரியைச் செலுத்துவது நமது கடமை.
சொந்தக்காரர்கள் கட்டிடப் பணிகள் நடக்கும் இடத்திற்கு அருகிலேயே குடியிருப்பதால் கட்டிட வளர்ச்சியைக் கண்காணிக்க இயலும். சில அத்தியாவசியமான தேவைகளைக் கட்டுமான நிறுவனத்திடம் சொல்லிப் பெறலாம்.
வீட்டுச் சொந்தக்காரர் தவிர மற்ற ப்ளாட்களை வாங்கும் அனைவரும் அந்நியர்களாக இருப்பார்கள். எனவே பத்திரப் பதிவு செய்யப் போகும் ஒவ்வொரு சமயமும் உரிமையாளரும் உடன் சொல்ல வேண்டி வரும். இதைத் தவிர்க்க ஒப்பந்ததாரருக்கு பவர் ஆஃப் அட்டார்னி வழங்கிவிடுவது நலம்.
எல்லா ப்ளாட்களும் கட்டி முடிக்கப்பட்டு கட்டிடப் பராமரிப்பு குறித்து ஒப்பந்ததாரரும், ப்ளாட் உரிமையாளர்களும் பேசிக் கொள்ள வேண்டும்.
மேலும் தளத்தின் சதுர அடி, பிற வசதிகள், கார் நிறுத்தும் இடம், காலக் கெடு போன்றவற்றுக்கு எழுத்துபூர்வமாக ஒப்பந்தம் எழுதிக்கொள்வதும் அவசியம்.
- கட்டுரையாளர்,
ஒய்வுபெற்ற மூத்த வங்கி அதிகாரி