ஒரே இடத்தில் ஒரே பரப்பளவில் இருந்தாலும் ஒவ்வொரு அபார்ட்மெண்ட் வீடும் தனித்தனித் தேவைகளைக் கொண்டதே. ஒரே மாதிரியான வீடுகளாக அவை வெளித்தோற்றத்தில் தெரிந்தாலும் உள்ளே அவை எப்படி இருக்கின்றன என்பதில்தான் வித்தியாசங்கள் உள்ளன. சிறிய இடமாக இருந்தாலும் விஸ்தாரமான தோற்றத்தையும், வசதியையும் உணருமாறு அடுக்குமாடிக் குடியிருப்புகளைக் கட்டுவதில் சில கட்டுமான நிறுவனங்கள் சிறந்து விளங்குகின்றன. ஜன்னல்களை சரியான இடத்தில் வடிவமைப்பதன் மூலம், ஆரோக்கியமான காற்றும் சூரிய ஒளியும் கிடைப்பதை உறுதிசெய்ய இயலும். இதைக் கட்டுமானம் சம்பந்தப்பட்ட விஷயம் என்று அத்தனை எளிதில் புறக்கணிக்க முடியாது. ஒரு கட்டிடத்தை உங்கள் இல்லமாக மாற்றுவதற்கு நிறைய செலவு ஆகும். அந்தச் செலவு நாம் நினைக்கக்கூடிய அளவு சொற்பமானதல்ல.
நல்ல காற்றோட்டமான வீடாக இருந்தால், கோடைக் காலத்தில் மட்டுமே குளிர்சாதன வசதியை இயக்கினால் போதுமானது. பட்டப்பகலில் விளக்குகளைப் போட வேண்டிய அவசியம் இருக்காது. துணி உலர்த்தும் இயந்திரத்துக்குக் கூடுதலாக செலவழிக்க வேண்டியதில்லை. உங்கள் பால்கனியிலேயே உலர்த்திக்கொள்ள முடியும். இவையெல்லாம் புதிய இல்லத்தில் குடிபுகுந்த பின்னர் ஆகும் செலவுகள். ஆனால் வீட்டிற்குள் நுழையும்போது செலவாகும் பணம் மற்றும் நேரத்தைப் பற்றி இப்போது பார்ப்போம்.
ஒரு அடுக்குமாடிக் குடியிருப்பில் வீடு வாங்க வேண்டும் என்று தீர்மானித்துவிட்டால், உள்ளே என்னென்ன மாற்றங்களைச் செய்ய வேண்டும் என்பதை முதலிலேயே திட்டமிட வேண்டும். பெயிண்டிங், ப்ளம்பிங், எலக்ட்ரிக்கல் மற்றும் நிறுவும் செலவுகள் எவ்வளவு என்று கணக்கிட வேண்டும். இன்றைய காலகட்டத்தில் பெரும்பாலான அடுக்குமாடிக் குடியிருப்பு வீடுகளில் தரமான முறையில் தரைத்தளங்கள் அமைக்கப்படுகின்றன. சமையலறை மற்றும் குளியல் அறைகளிலும் உயர்தர பளிங்குகளைக் கொண்டே சுவர்களை அமைக்கிறார்கள். குளியலறை மற்றும் கழிப்பறையில் உள்ள குழாய்கள் மற்றும் இன்ன பிற சாதனங்களும் உத்தரவாதமுள்ளவையே பாவிக்கப்படுகின்றன.
அடுக்குமாடிக் குடியிருப்பு வீடுகளில் குடிபுகும்போது மிகவும் கவனிக்க வேண்டியவை கதவுகளும் ஜன்னல்களும்தான். நீங்கள் வாங்கப்போகும் வீட்டில் செய்யப்பட்டுள்ள இன்டீரியர் வசதிகளை முழுமையாக ஆய்வுசெய்த பிறகே முடிவெடுக்க வேண்டும். அப்போதுதான் உங்கள் வீட்டுக்கு நீங்கள் செய்ய வேண்டிய முழுமையான செலவைத் தெரிந்துகொள்ள முடியும். இன்டீரியர் வேலைகளுக்கு மட்டுமே இன்றைய காலத்தில் லட்சக்கணக்கில் செலவாகும் நிலை உள்ளது. அதனால் முன்பே திட்டமிட்டுக் கொள்வது அவசியம்.
சிக்கனமான விலையில் வீட்டை வாங்குபவராக நீங்கள் இருப்பினும் முதலில் இருக்கும் பணத்தில் வீட்டை வாங்கிவிடலாம், பிறகு இன்டீரியரைத் திட்டமிடலாம் என்று அலட்சியமாக இருத்தல் வேண்டாம். அதனால் உள்ளேயும் கவனியுங்கள்.