மணலுக்கு எப்போதுமே தட்டுப்பாடுதான். கஷ்டப்பட்டு மணலை வாங்கிக்குவித்தாலும் அதிலும் இப்போதெல்லாம் கலப்படம் அதிகமாகிவிட்டது. கடற்கரை மணலைக் கலந்துவிடுகிறார்கள். சிமெண்ட் விலையோ சொல்லவே வேண்டாம். ஏறுமுகமாகவே இருக்கிறது. இந்நிலையில் நாம் கட்டும் வீட்டின் சிமெண்ட், மணல் தேவையை ஓரளவு குறைக்க நாம் முயன்றால்தான் பொருளாதாரச் சிக்கனம் சாத்தியமாகும்.
அப்படியான வாய்ப்பை இந்தப் புதிய பொருள் ஏற்படுத்தித் தந்துள்ளது. ஜிப்ஸம் பிளாஸ்டர் ஒன் கோட் என்னும் புதிய மாற்றுப் பொருளான ஏற்கனவே மேலை நாடுகளில் பரவலாகப் பயன்படுத்தப்பட்டுவருகிறது. இந்தியாவிலும் இதன் பயன்பாடு இப்போது பரவிவருகிறது. இதைப் பயன்படுத்துவதன் மூலம் உட்புறப் பூச்சு வேலைகளில் மணல், சிமெண்ட் தேவையை நூறு சதவீதம் குறைக்க வாய்ப்பிருக்கிறது. அதுபோல இதைப் பயன்படுத்தும்போது உட்புற பூச்சில் நேர்த்தி கிடைக்கிறது. அதனால் பட்டி பார்க்கும் வேலைக்கு அவசியமில்லாமல் போகிறது.
கட்டிடங்களின் உட்புறச் சுவர்கள், மேற்கூரைகளின் பூச்சு வேலைகளுக்கு இந்தப் புதிய மாற்றுப் பொருள் பயன்படும். இந்த வகைப் பொருளின் முக்கியமான கலப்புப் பொருளான ஜிப்ஸம் வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்படுகிறது. முக்கியமாக ஈரானில் இருந்து இறக்குமதிசெய்யப்படுகிறது. ஜிப்ஸம் இந்தியாவிலேயே கிடைக்கக் கூடிய பொருள்தான். ஆனால் வெளிநாடுகளில் இருந்து இறக்குமதிசெய்யப்படும் இந்த வகை ஜிப்ஸம், இங்கு கிடைப்பவற்றைவிடக் கெட்டித்தன்மை உடையது.
தமிழ்நாட்டிலும் இந்த வகை மாற்றுப் பொருளைக் கட்டுமான நிறுவனங்கள் பயன்படுத்தத் தொடங்கியுள்ளன. இதனுடன் தண்ணீரைச் சேர்த்து நேரடியாக உட்புறச் சுவர்களின் பூச்சு வேலைகளுக்குப் பயன்படுத்தலாம்.
சிமெண்ட் பூச்சைக் காடிலும் இது சிறந்த பிடிப்புத் தன்மை கொண்டது. பூச்சு பளபளப்புடன் இருக்கும். அந்தக் கால முறைப்படி வீட்டிற்குள் வெள்ளை நிறப்பூச்சை விரும்புபவர்கள் இதன் மேலே வண்ணம் அடிக்கத் தேவை இல்லை. மேலும் இந்தப் பிளாஸ்டர், பூசிய கால் மணி நேரத்தில் பிடித்துக்கொள்ளும். சிமெண்ட் பூச்சைப் போல இதைத் தண்ணீர் ஊற்றி உலர்த்த வேண்டிய அவசியமும் இல்லை. இந்தச் சிறப்புத் தன்மையால் பிளாஸ்டரைப் பயன்படுத்தும்போது பூச்சு வேலைக்குக் குறைந்த அளவு நேரமே ஆகும். இதனால் பொருள் செலவை பெருமளவு குறைக்க முடியும். மேலும் பூச்சு முடிந்த சில நாட்களிலேயே சுவருக்கு வண்ணப் பெயிண்ட் பூசிக் கொள்ளலாம்.
சிமெண்ட் பூச்சின் கலவையானது திரண்டு இருக்கும். அதாவது சிமெண்ட் மெல்லிய தூளாக இருந்தாலும் மணல் பருமனான பொருளாக இருக்கும். அதனால் லேசாக மேலே தட்டினாலேயே மேல் பூச்சில் விரிசல் வர வாய்ப்பிருக்கிறது. இந்தப் பிரச்சினை பிளாஸ்டர் பூச்சி இருக்காது.