ஆசை ஆசையாகக் கட்டிய வீட்டில் குடியேறலாம் என்ற நினைத்தவர்களின் கனவில் மண் விழுந்தால் எப்படி இருக்கும்? கனவு மட்டுமல்ல, ஒட்டுமொத்த குடும்ப அமைதியும் குலைந்து விடும் அல்லவா? சிறுகச் சிறுக குருவி சேர்ப்பது போல சேர்த்த லட்சக்கணக்கான பணத்தை வீடு வாங்குவதற்காகக் கொடுத்துவிட்டு, வீடும் கிடைக்காமல், முதலீடு செய்த பணத்திற்கும் வழித் தெரியாமல் போனால் எவ்வளவு கொடுமையாக இருக்கும். சென்னை மௌலிவாக்கத்தில் இடிந்த 11 மாடி வீட்டில் வீடு வாங்கியவர்களுக்குக் கட்டுனாமான நிறுவனம் பணம் கொடுத்துவிடுவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. ஒருவேளை அடுக்குமாடி கட்டும்போது இடிந்து, அதற்குக் கட்டுமான நிறுவனம் பணம் கொடுக்க முடியாமல் போனால் முதலீடு செய்தவர்கள் மோசம் போக வேண்டியதுதானா? இது பற்றி பார்ப்போம்.
பொதுவாக வீட்டுக்கு இன்சூரன்ஸ் எடுத்தால் பணத்தைப் பெற முடியும் என்று வல்லுநர்கள் கூறுகிறார்கள். இதிலும் ஒரு சிக்கல் உள்ளது. வீடு வாங்கக் கடன் வாங்கி யவர்கள், அந்தப் பணத்தின் பாதுகாப்புக்காக இன்சூரன்ஸ் பெற முடியாது என்கிறார்கள் வங்கியாளர்கள். ஒரு வீடு கட்டி முடிக்கப்பட்ட பிறகே இன்சூரன்ஸ் செல்லுபடியகும் என்றும் கூறுகிறார்கள். வீடு கட்டும்போதே இடிந்துவிட்டால் இன்சூரன்ஸ் மூலம் பணம் பெற இயலாது. அதுமட்டுமல்ல வங்கியில் வாங்கிய வீட்டுக் கடனுக்கும் மாதந்தோறும் இ.எம்.ஐ. செலுத்த வேண்டிய நிலையும் வரும். இதுபோன்ற அசாதரணமான சூழ்நிலையில் பாதிக்கப்பட்டவர்கள் வங்கி களிடம் இருந்து சலுகைகள் பெற வாய்ப்புகள் எதுவும் இல்லை என்கிறார் சென்னை கனரா வங்கி கிளை மேலாளர் விநாயகம்.
“வங்கியில் கட்டுமான நிறுவனம் கடன் வாங்கும் போதே இன்சூரன்ஸ் எடுத்து விடுவதுண்டு. அப்படி எடுத்தால் கட்டுமானத்துக்கு இன்சூரன்ஸ் பணம் கிடைக்கும். வீடு வாங்க கடன் வாங்கியவர்கள் வீடு கட்டிக் குடியேறிய பிறகே இன்சூரன்ஸ் எடுக்க முடியும் என்பதால் அவர்களுக்குப் பணம் கிடைக்காது. அவர்கள் இ.எம்.ஐ. செலுத்துவதில் வங்கிகள் சலுகைகள் அளிக்காது. வங்கிப் பணம் பொதுப் பணம் இல்லையா? எனவே சொன்னபடி மாதந் தோறும் பணத்தை செலுத்திதான் ஆக வேண்டும்’ என்கிறார் விநாயகம்.
அப்படியென்றால் பணத்தைக் கொடுத்துவிட்டுப் பாதிக்கப் பட்டவர்களுக்கு என்னதான் வழி? “சில வழிமுறைகள் இருப்பதாக” கூறுகிறார் சென்னை உயர் நீதி மன்ற வழக்கறிஞர் ஷ்யாம் சுந்தர். “பாதிக்கப் பட்டவர்கள் குழுவாகச் சேர்ந்து ஒரு அமைப்பைத் தொடங்கியோ அல்லது தனிநபராகவோ நீதிமன்றத்தை அணுகிக் கட்டுமான நிறுவனம் மீது கிரிமினல் நடவடிக்கை எடுக்கக் கோரலாம். பணம் வாங்கிக் கொண்டு வீடு கட்டித் தரவில்லை என்று நீதிமன்றத்தில் எடுத்துரைக்கலாம். பொது வாக வீடு கட்டும் கட்டுமான நிறுவனங்கள் இன்சூரன்ஸ் எடுப்பதுண்டு. வீடு கட்டும்போது ‘Errection all risk' இன்சூரன்ஸ் பாலிசி அல்லது ‘contractor all risk' இன்சூரன்ஸ் பாலிசி எடுப்பார்கள். இந்த இன்சூரன்ஸ்களில் ஏதேனும் ஒன்றைக் கட்டுமான நிறுவனம் எடுத்திருந்தாலும் இன்சூரன்ஸ் பணம் கிடைத்துவிடும். இதை வைத்துக் கட்டுமான நிறுவனம் பாதிக்கப்பட்டவர்களுக்குப் பணத்தைக் கொடுத்துவிடலாம். அடுக்குமாடியில் வீடு வாங்கு பவர்களுக்கு, வீடு கட்டிய பிறகே இன்சூரன்ஸ் எடுக்க முடியும் என்பதால், பணம் கொடுத்தவர்கள் பணம் பெற வழியில்லை” என்கிறார் ஷ்யாம் சுந்தர்.
வீடு கட்டும்போதுதான் மேற் கண்ட பிரச்சினைகள் எழுகின்றன. வீடு கட்டிய பிறகு, அந்த வீட்டுக்கு சாதாரண இன்சூரன்ஸ் எடுத்துவிட்டால் போதும், நம் வீட்டுக்கும் முதலீட்டுக்கும் பாதுகாப்பு நிச்சயம். எனவே வீடு கட்டிக் குடியேறியவர்கள் இன்சூரன்ஸ் எடுப்பதில் தயக்கம் காட்டக் கூடாது என்பதுதான் வல்லுநர்களின் பொதுவான கருத்து.