வீடு கட்ட வேண்டும் என மனையை வாங்கிவிட்டீர்கள். முதலில் என்னென்ன செய்ய வேண்டும் எனப் பார்ப்போம். முதலில் மனையைச் சரிசெய்து வீடு கட்டுவதற்கு ஏற்ப தகுதி படைத்ததாக மாற்ற வேண்டும். வீட்டு மனை சில சமயங்களில் கல்லும் மண்ணுமாக மேடு பள்ளமாக இருக்கும்.
அதைச் சீரானதாக மாற்ற வேண்டும். கட்டிடப் பணிகள் தொடங்குவதற்கு முன்பே மனையின் முன்புறத்தில் செடிகளையும் மரங்களையும் நட்டுவைக்கலாம். பொதுவாக மரங்கள் வைப்பதற்கான இடவசதி இல்லாதபட்சத்தில் அழகான, பயனுள்ள செடிகள் வளர்க்கலாம்.
கட்டிடப் பணிகள் மேற்கொள்வதற்கு முன்பு ஆழ்துளைக் கிணறு அமைக்க வேண்டும். கட்டிடப் பணிகளை விரைவாகச் செய்ய அது உதவியாக இருக்கும். ஆழ்துளை கிணறு அமைப்பதற்கு முன் உங்கள் நிலத்தடி நீரைப் பரிசோதிக்க வேண்டும். எங்கு நல்ல தண்ணீர் கிடைக்குமோ அந்த இடத்தில் ஆழ்துளை கிணறு அமைக்க வேண்டும். அஸ்திவாரப் பணிகள் தொடங்குவதற்கு முன்பு
நிலத்தில் உள்ள பூச்சிகளை விரட்ட, பூச்சிக் கொல்லி மருந்துகளை உபயோகிக்கலாம். இவை எல்லாம்தான் கட்டிடத்தின் முதற்கட்டப் பணிகள். மேலும் மண்பரிசோதனை கட்டிடப் பணிக்கு அவசியமான ஒன்று. இந்தப் பரிசோதனை கட்டிடப் பொறியாளர்கள் பார்த்துக்கொள்வார்கள் என்றாலும் நீங்கள் இதில் கொஞ்சம் கவனத்துடன் இருக்க வேண்டும்.
அடுக்குமாடிகள் கட்டும் பட்சத்தில் இத்தகைய சோதனை மிக அவசியமான ஒன்று. மண்பரிசோதனையை வைத்துத்தான் உங்கள் கட்டிடம் எவ்வளவு எடை தாங்கும் என்பதைக் கட்டிடப் பொறியாளர்களால் கணிக்க முடியும்.
இதை அடிப்படையாகக் கொண்டே அடித்தளம் அமைப்பார்கள். அதுபோல கழிவு நீர் வெளியேற உரிய வசதிசெய்ய வேண்டும். இப்போது பல இடங்களில் கழிவுநீரை வெளியேற்ற உரிய வசதிகள் இருப்பதில்லை. முதலிலேயே நாம் இதற்கான திட்டத்தை வகுத்துக்கொள்வதன் மூலம் இதைச் சரிசெய்ய முடியும்.
வீடு கட்டவிருக்கும் இடத்தைப் பொறுத்து எம்மாதிரியான கட்டிட எந்திரங்களைப் பயன்படுத்த வேண்டும் என்பதையும் முடிவு செய்ய முடியும்.