பொதுவாக எல்லா வீடுகளிலும் சமையல் அறையில் பதித்திருக்கும் குழாயில் நிலத்தடி நீர் போர்வெல் மூலமாக வரும். அதைக் காய்ச்சிக் குடிநீராகப் பலர் பயன்படுத்திய காலம் ஒன்றுண்டு. சில இல்லங்களில், அந்த நீரில் சீரகம் போட்டு உபயோகித்தார்கள். நாளடைவில் அந்நீரைச் சமையலுக்கு மட்டும் பயன்படுத்திக்கொண்டு குடிப்பதற்கு கேன் வாட்டர் வாங்குகிறார்கள்.
இன்றைய நவீன உலகில் நிலத்தடி நீரைச் சுத்தப்படுத்துவதற்கென்றே சில நிறுவனங்கள் உள்ளன. முதல் கட்டமாக அவர்கள் நிலத்தடி நீரின் தன்மையைச் சோதனை செய்து பார்க்கிறார்கள். அபிராமபுரம், ஆழ்வார் பேட்டை போன்ற சில இடங்களில் நீரில் இரும்புச் சத்து அதிகமாக இருக்கும்; சாந்தோம், பெசண்ட் நகர் போன்ற சில இடங்களில் உப்பின் அளவு கூடுதலாக இருக்கும். நீரில் உள்ள ரசாயனப் பொருளின் வீரியத்தைக் குறைக்க ரிவர்ஸ் ஆஸ்மாஸிஸ் என்னும் முறையைப் பயன்படுத்துகிறார்கள்.
நிலத்தடி நீரைக் குழாய் மூலம் இந்தச் சாதனத்தின் குடுவையில் ஊற்றுகிறார்கள். அந்த நீர் சுத்திகரிக்கப்பட்ட பின்னர் சுத்தமான குடிநீரை வெளியேறும் குழாய் மூலம் பிடித்துக்கொள்ளலாம். இதில் நீரைச் சுத்தப்படுத்தும் ஃபில்டரை மூன்று நான்கு மாதங்களுக்கு ஒருமுறை வந்து நிறுவனத்திரே கழுவிச் சுத்தப்படுத்துகிறார்கள்.
இந்தச் சுத்திகரிப்பு சாதனத்தைப் பொருத்த 6 ஆயிரம் முதல் 10 ஆயிரம் வரை ஆகிறது. சுலபத் தவணைகள் முறையிலும் இது இல்லங்களில் பொருத்தப்படுகிறது.
இதிலுள்ள சில சாதக அம்சங்கள்:
குடிநீரை வெளியிலிருந்து வரவழைக்கிற அவசியமில்லை. வழக்கமாக கேன் வாட்டர் வாங்குவதன் மூலம் சாதாரணக் குடும்பத்திற்கே மாதம் ரூ.500 வரை செலவாகும். இதை மிச்சப்படுத்தலாம்.
வேளை கெட்ட வேளையில் குடிநீரைக் கொண்டுவரும் லாரிக்காகக் காத்திருக்க வேண்டியதில்லை.
இல்லத்திலேயே கிடைக்கும் நீர் என்பதால் பயமின்றிக் குடிக்கலாம். இதைக் கொதிக்க வைக்க வேண்டிய அவசியமில்லை என்கின்றனர் சுத்திகரிப்பு சாதன உற்பத்தி நிறுவனத்தினர்.
காலக்கெடுப்படி ஃபில்டரைச் சுத்தப்படுத்த வரும் நபர்களை அழைக்க வேண்டிய தொந்தரவு இருக்கத்தான் செய்கிறது. நிறுவனங்கள் இதை முறைப்படுத்தினால் இது மிகவும் பயனுள்ளதாக மாறும்.