சிறுநகரங்களில் வாழ்க்கைத்தரமும் காற்றும் மேம்பட்டு இருக்கிறது. அதனால் ஆசுவாசமான வாழ்க்கை முறைக்குச் சிறுநகரங்களே அனுகூலமாக இருக்கின்றன. விலைவாசி ராக்கெட் வேகத்தில் அதிகரித்து வருகிறது. தனிக்குடும்பங்கள் தான் இன்றைய எதார்த்தம். மருத்துவ அறிவியலின் வளர்ச்சியால் மனித ஆயுள் அதிகரித்துள்ள நிலையில் ஓய்வுகாலத்திற்காகச் சேமிக்கும் தொகை சொற்ப ஆண்டுகளிலேயே தீர்ந்து விடுகிறது. ஆனாலும் அலுப்பான பெருநகரங்களிலிருந்து நம்மால் ஏன் ஒரு சிறுநகரத்திற்கு நகரமுடியவில்லை?
சின்னஞ்சிறு கடைகள், ஒண்டுக்குடித்தன வீடுகள், நெருக்கடியான காய்கறி சந்தைகள், குறைவான பொழுதுபோக்கு, கல்வி வசதிகள் மட்டுமே சிறுநகரங்களில் கிடைக்கும் என்று நினைப்பவரா நீங்கள்? உங்கள் எண்ணத்தை மறுபரிசீலனை செய்யுங்கள். நகர்ப்புறவாசிகள் விரும்பும் அனைத்து வசதிகளும் இன்று இந்தியாவின் சிறுநகரங்களிலும் கிடைக்கின்றன. அனைத்து வசதிகளும் கொண்ட நவீன அடுக்குமாடிக் குடியிருப்புகள், மால்கள், மல்டிப்ளெக்ஸ் திரையரங்குகள், மெக்டொனால்ட், கேஎப்சி என எல்லாமும் இங்கே உண்டு.
மகாராஷ்டிரா, கர்நாடகா, குஜராத் மற்றும் ராஜஸ்தான் மாநிலங்களில் பயணம் செய்பவர்களிடம் கேட்டுப் பாருங்கள். பெங்களூரு, சென்னை, ஐதராபாத், கொல்கத்தா, மும்பை என எந்த நகரத்திற்கும் ஒப்பான வசதிகளைச் சிறுநகரங்கள் வேகமாகப் பெற்றுவருகின்றன. தமிழகத்தில் உள்ள சிறுநகரங்களிலும் இதே நிலைதான். முன்னணிக் கட்டுமான நிறுவனங்கள் அனைத்தும் சிறுநகரங்களை நோக்கித் தங்கள் கவனத்தைக் குவிக்கத் தொடங்கிப் பல ஆண்டுகள் ஆகிவிட்டன. நகரத்தின் போட்டிச்சூழல் மற்றும் நெருக்கடிகளிலிருந்து மீள நினைப்பவர்களுக்குச் சிறுநகரங்கள் அருமையான தேர்வாக இருக்கும். அருமையான வாழ்க்கைத் தரத்துடன் கூடிய அமைதியான வாழ்க்கையைக் குறைந்த செலவில் சிறுநகரங்களில் பெறமுடியும்.
ஓடி ஓடி வேலை செய்து தங்கள் ஓய்வு வாழ்க்கையைச் சற்று அமைதியுடன் கழிக்க விரும்புபவர்கள் சிறுநகரங்களில் தயங்காமல் வீடுகளை வாங்கலாம். சென்னை போன்ற பெருநகரத்தில் ஒரு சிறிய அடுக்குமாடிக் குடியிருப்பு வீட்டை வாங்கும் விலையில் சிறு நகரங்களில் ஒரு பெரிய வீட்டை வாங்கலாம்.
வீட்டுச்சந்தையைப் பொறுத்தவரை பெரும்பாலான இடங்களில் சரிவு ஏற்பட்டுள்ள நிலையில் மிக மலிவான விலையில், குறைந்தபட்ச மாதத் தவணையில் சிறுநகரங்களில் வீடுகளை வாங்கிப்போடுவது அருமையான முதலீடாக இருக்கும். இப்போதைக்கு விடுமுறைக் கால வீடாக அதைப் பாவிக்கலாம். அல்லது வாடகைக்கு விடலாம். நிச்சயமாக அந்த வீட்டை எதிர்காலத்தில் ஓய்வுக்கால வீடாக ஆக்கிக் கொள்ளலாம். சென்னை போன்ற நகரங்களில் வீட்டை வாங்குவதற்கு நீங்கள் கொடுக்கும் தொகையில் 25 முதல் 30 சதவீதம் தொகையைக் கொடுத்தால் சொந்தமாக ஒரு வீட்டை வாங்கலாம்