சொந்தமாக வீடு கட்ட வேண்டும் எனத் தலைகீழாக நிற்பவர்கள் இருக்கிறார்கள் என்பது உண்மைதான். அதற்காக வீட்டையே தலைகீழாகக் கட்ட முடியுமா? ஆனால் கட்டியிருக்கிறார்கள். இந்த விசித்திர வீடு உலகெங்கிலும் இப்போது பிரபலமாகிவருகிறது.
சீனா நாட்டில் ஷாங்காய் நகரத்திலும், ஆஸ்திரியாவில் டெர்ஃபென்ஸ் நகரத்திலும் அமைந்துள்ள இந்தத் தலைகீழ் வீட்டைப் பார்வையிட தினமும் நூற்றுக்கணக்கான பார்வையாளர்கள் வருகிறார்கள். இந்த வீடுகளில் வெளித்தோற்றம் மட்டும் தலைகீழாக இல்லை. வீட்டின் உள்ளே சென்றால், கழிவறை, சாப்பிடும் மேஜை எல்லாம் தலைகீழாகத்தான் இருக்கின்றன. இது மட்டுமல்லாமல் சுவரில் மாட்டியுள்ள படங்கள், அழகுப் பொருட்கள், பொம்மைகள் எல்லாமும் தலைகீழாகவே காட்சியளிக்கின்றன.
இந்தக் கட்டிடக் கலையின் வடிவமைப்பாளர்களில் இரக் கொல்வகி, இந்த நுட்பம் பார்வையாளர்களைக் கவர்வதாகவும், இந்த வீட்டிற்குள் நுழைபவர்கள் ஒரு கனவு உலகத்தில் சஞ்சரித்த பரவசத்தை அடைகிறார்கள் எனவும் சொல்கிறார். இந்த வகை வீடுகள் ஜெர்மனி, கனடா போன்ற நாடுகளிலும் உள்ளன.