ஒரு கடையில் நூறு ரூபாய்க்கு ஒரு பொருள் வாங்கினால் நாம் என்ன செய்வோம்? பணம் கட்டி பில் போடுவதற்கு முன்பு பொருள் தரமாக உள்ளதா என்று பலமுறை பரிசோதித்துப் பார்ப்போம். ஐ.எஸ்.ஐ. முத்திரை இருக்கிறதா என்று பார்ப்போம்.
நூறு ரூபாய் பொருளுக்கே இவ்வளவு பார்க்கிறோம் என்றால், பல லட்சம் ரூபாய் கொட்டி வாங்கும் வீட்டுக்கு எவ்வளவு விஷயங்களை நாம் ஆராய வேண்டும். ஆனால், நாம் அப்படி மெனக்கெடுகிறோமா?
பொருட்களின் தரத்தை அறிய ஐ.எஸ்.ஐ. முத்திரையைப் பார்ப்பது போல வீடுகளைக் கட்டும் கட்டுமான நிறுவனங்களுக்கும் மதிப்பீடு இருக்கிறது. ரியல் எஸ்டேட் நிறுவனங்களை மதிப்பீடு செய்வதற்காகவே கிரிஸில் (CRISIL) என்ற அமைப்பு உள்ளது.
அடுக்குமாடி வீடு வாங்கத் திட்டமிடுவோருக்கு வீடு கட்டும் நிறுவனத்தைப் பற்றியும், குறிப்பிட்ட வீட்டுத் திட்டத்திற்கு என்ன மதிப்பீடு கொடுக்கப்பட்டிருக்கிறது என்பதையும் அறிந்து கொள்ள இது ஒரு வழிகாட்டி.
பெரு நகரங்களில் கட்டப்படும் வீட்டுத் திட்டங்களுக்கு மதிப்பீடுகளை இது வழங்குகிறது. இதன்மூலம் தரமான வீட்டை வாங்குவதற்கு இந்த அமைப்பு உதவுகிறது. இந்த அமைப்பு வழங்கும் மதிப்பீட்டை ‘கிரிஸில் ரியல் எஸ்டேட் ஸ்டார் ரேட்டிங்ஸ்’ என்று அழைக்கிறார்கள்.
ரியல் எஸ்டேட் துறையில் வெளிப்படைத் தன்மையை மேம்படுத்தவும் குறிப்பிட்ட வீட்டுத் திட்டத்தின் விவரங்களைத் தெரியப்படுத்தவும் மதிப்பீட்டில் முக்கியத்துவம் கொடுக்கப்படுகிறது.
கிரிஸில் ஸ்டார் ரேட்டிங்கிற்கு எடுத்துக்கொள்ளப்படும் போது 4 விஷயங்கள் முக்கியமாக ஆராயப்படுகின்றன. சட்டரீதியான ஆவணத்தின் தரம், கட்டுமானம் தொடர்பான அபாயங்கள், நிதி தொடர்பான விவகாரத்தில் அனுசரனை, வீட்டுத் திட்டத்தின் பின்னணி நம்பகத்தன்மை, திட்டத்திற்கு உதவி செய்பவரின் பின்னணி வரலாறு ஆகியவற்றை முழுமையாகக் கிரிஸில் ஆராயும்.
அதன் அடிப்படையிலும், வீட்டுத் திட்டம் அமையும் நகரத்தையும் கருத்தில் கொண்டு ஸ்டார் ரேட்டிங் வழங்கப்படும். அதிகபட்சமாக 7 ஸ்டார்கள், குறைந்தபட்சமாக 1 ஸ்டார் என மதிப்பீடு வெளிப்படுத்தப்படுகிறது. குறைந்த ரேட்டிங் பெறும் வீட்டுத் திட்டங்கள் ‘Non-Deliverable' எனக் குறிப்பிடப்படுகிறது.
சமீபத்தில் கட்டி முடிக்கப்பட்ட வீட்டுத் திட்டம், கட்டுமானப் பணியில் உள்ள வீட்டுத் திட்டங்களுக்கு இப்படி மதிப்பீடுகள் வழங்கப்படுகின்றன. கட்டுமானப் பணியில் உள்ள வீட்டுத் திட்டங்களின் நிலவரங்கள் அவ்வப்போது ஆய்வில் பதிவு செய்து கொள்ளப்படுகின்றன.
முழுமையாகக் கட்டுமானத் திட்டங்கள் முடிந்த பிறகு மதிப்பீடு காலாவதியாகிவிடும். அதாவது, கட்டுமானத்தில் உள்ள வீடுகள் தரமானதா என்பதைக் கவனத்தில் கொள்ளவும், அதை வாங்கலாமா வேண்டாமா என்பதை முடிவு செய்யவும் முழுக்க முழுக்க இது உதவும்.

குறிப்பாகப் பெரு நகரங்களில் உள்ள கட்டுமான நிறுவனங்கள், வீட்டுத் திட்டங்கள் மட்டுமே இந்த மதிப்பீட்டுக்கு எடுத்துக் கொள்ளப்படுகிறது. தமிழகத்தில் சென்னை, கோவை, திருச்சி நகரங்கள் பட்டியலில் இடம் பெற்றுள்ளன.
மேலும் தகவல்கள் அறிய http://www.crisil.com/star-ratings/about-star-ratings.html என்ற இணைய தளத்தைப் பாருங்கள்.