Friday, October 17, 2014

காணாமல் போகும் நிலத்தடி நீர்

காணாமல் போகும் நிலத்தடி நீர்...காப்பாற்ற என்ன வழி ?
தூங்கும் சட்டம்... தாலாட்டும் அரசு...!
தங்க முட்டையிடும் வாத்தின் வயிற்றை அறுத்த கதைதான் நிலத்தடி நீரின் கதையும். தொலைக்காட்சிப் பெட்டி வந்த புதிதில் வீடுகள்தோறும் ஆன்டெனாக்கள் முளைத்து நின்றது போல... இன்று பூமிக்கு கீழே ஆழ்துளைக் கிணறுகளின் குழாய்கள், கோடிக்கால் பூதங்களாக நிற்கின்றன. சென்னை போன்ற பெருநகரங்களில் ஆடம்பரத்துக்காகவும், அழகுக்காகவும் மட்டுமே ராட்சதக் குழாய்கள் மூலம் தினமும் பல லட்சம் லிட்டர் தண்ணீர் உறிஞ்சப்படுகிறது.
தூங்கும் சட்டங்கள்!
சென்னையைப் பொருத்தவரை, மாநகரில் வாழும் மனிதர்களுக்கே ஒரு நாளைக்கு 147 கோடி லிட்டர் தண்ணீர் தேவைப்படுகிறது. அதுபோக, தனியார் நிறுவனங்கள், கார் தொழிற்சாலைகள், நட்சத்திர விடுதிகள், நீர் விளையாட்டு மையங்கள்... போன்றவை பல கோடி லிட்டர் தண்ணீரை, திருட்டுத்தனமாக ராட்சதக் குழாய்கள் மூலமாக உறிஞ்சியும், சென்னையைச் சுற்றியுள்ள பகுதிகளில் இருந்து கொண்டு வந்தும் பயன்படுத்துகின்றன. நடைமுறையில் உள்ள 'சென்னை மாநகர நிலத்தடி நீர் ஒழுங்குபடுத்தும் சட்டம்-1988’-ன் படி சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் வர்த்தக நோக்கத்தில் நிலத்தடி நீரை எடுக்க தடை உள்ளது. ஆனால், அதை யாரும் கண்டுகொள்வதே இல்லை.
அதேபோல, தமிழக அரசு, நிலத்தடி நீரைப் பாதுகாப்பதற்காக, 2003-ம் ஆண்டு 'தமிழ்நாடு நிலத்தடி நீர் மேம்படுத்துதல் மற்றும் மேலாண்மைச் சட்டம்’ இயற்றியது. ஆனால், அந்தச் சட்டம் தொடர்பான அரசாணை வெளியிடக் கோரி சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டு இரண்டு ஆண்டுகள் ஆகியும், அது நடைமுறைக்கு வரவில்லை. இந்நிலையில், விவசாயத்துக்குப் பயன்படுத்தும் மின் மோட்டார்களுக்குப் பதிலாக, சூரிய ஒளி சக்தி மூலமாக இயங்கும் 2 ஆயிரம் மோட்டார்களை விவசாயிகளுக்குக் கொடுக்க இருப்பதாக அறிவிப்பு வெளியிட்டு இருக்கிறார், முதல்வர்.
''இது வரவேற்கத்தக்கதுதான். என்றாலும், நிலத்தடி நீரை மேலும், மேலும் வெளியேற்றுவதில் முனைப்பு காட்டுபவர்கள், அதை மேம்படுத்துவதிலும் அக்கறை காட்ட வேண்டும்'' என்கிறார்கள், சூழலியலாளர்கள். இதுதானே உண்மை!
ஆழ்துளைக் கிணறுகளுக்குத் தடை வேண்டும்!
அதைப்பற்றி பேசிய சூழலியலாளர் அறச்சலூர் செல்வம், ''அப்போல்லாம் கிராமங்கள்ல சின்ன சின்ன ஓடைகள் இருக்கும். மழைத்தண்ணி ஓடைகள் வழியா குளம், குட்டைக்கு வரும். அது நிறைஞ்ச பிறகு, ஏரி நிறையும். இப்படி சின்ன கிராமத்துலகூட நிறைய நீர்பிடிப்புப் பகுதிகள் இருந்துச்சு. காலப்போக்குல குடியிருப்புத் தேவைக்காக ஓடைகளையும், வரத்து வாய்க்கால்களையும் மூடி ஆக்கிரமிப்புச் செய்ய ஆரம்பிச்சாங்க. நீர்நிலைகளுக்கு தண்ணி வர்றது தடைபட்டுப் போச்சு. ஒரு காலத்துல சென்னையைச் சுத்தி 400 ஏரிகள் இருந்துச்சு. இன்னிக்கு அதுல 40 ஏரிகள்கூட உருப்படியா இல்லை. இப்படி நீர் நிலைகள் தூர்ந்து போனதால நிலத்தடி நீரும் கொஞ்சம் கொஞ்சமா குறைய ஆரம்பிச்சுது.
இது ஒருபக்கமிருக்க, புதுசு புதுசா 'போர்வெல்’ போட ஆரம்பிச்சதும் நிலத்தடி நீரைப் பாதிச்சிடுச்சு. இந்தியாவுலயே தமிழ்நாட்டுலதான் அதிக 'போர்வெல்’ இருக்குனு சொல்றாங்க. நிலத்தடி நீரை குழாய் போட்டு இஷ்டத்துக்கு உறிஞ்சுறவங்க, மழை நீரை நிலத்துக்குள்ள அனுப்ப எந்த முயற்சியும் எடுக்கறதில்லை. அதனால, ஆழ்துளைக் கிணறுகள் விஷயத்துல சில நடவடிக்கைகளை அரசாங்கம் போர்க்கால அடிப்படையில எடுக்கணும். அதாவது, எல்லா நிலங்கள்லயும் பண்ணைக்குட்டைகளைக் கட்டாயமாக்கணும். அதுல தேங்கற அதிகப்படியான நீரை, பூமிக்குள்ள அனுப்பறதுக்கான ஏற்பாடுகளையும் கட்டாயமாக்கணும். இதையெல்லாம் நிறைவேத்தாத ஆழ்துளைக் கிணறுகளுக்கு அரசாங்கம் தடை விதிக்கணும். இதையெல்லாம் செய்தாத்தான் நிலத்தடி நீரை கொஞ்சமாவது காப்பாத்த முடியும்'' என்று சொல்லும் செல்வம்,
''இதுக்கெல்லாம் முன்னோடியா நம்ம அரசாங்கமும் முக்கியமான ஒரு காரியத்தை செய்தாகணும். அதாவது, அரசாங்கம், பொதுப்பணித்துறை மற்றும் உள்ளாட்சி அமைப்புகள் வசம் இருக்கற நீர்நிலைகள், நீராதாரங்கள், நீர்வழிகள் எல்லாத்தையும் புனரமைக்கணும். இதுல இருக்கற ஆக்கிரமிப்புகளை அரசியல், பணபலம் எல்லாத்தையும் தாண்டி கண்ணை மூடிக்கிட்டு அகற்றணும். அப்போதுதான் மக்களுக்கும் நம்பிக்கை வரும்... பிரச்னையோட வீரியமும் புரியவரும். அதைவிட்டுட்டு மக்கள் மட்டுமே செய்யணும்னு நினைச்சா... ஒருக்காலும் இதை நிறைவேத்த முடியாது. அரசாங்கம் நினைச்சா மட்டுமேதான் எதையும் சாதிக்க முடியும். அதுக்கு ஆளுறவங்களுக்கு நிலத்தடி நீர் பற்றிய புரிதல் இருக்கணும்'' என்று வேண்டுகோளாகச் சொன்னார்.
நிலத்தடி நீரைப் பாதுகாப்பதில் அரசை மட்டும் நம்பிக் கொண்டிருக்காமல், தனிப்பட்ட ஒவ்வொருவரும் தங்கள் பங்களிப்பைச் செலுத்த வேண்டியதும் காலத்தின் கட்டாயமாக இருக்கிறது. சென்ற அ.தி.மு.க ஆட்சியின்போது மழை நீர் சேகரிப்பைக் கட்டாயமாக்கிய அதே ஜெயலலிதாதான், தற்போதும் முதல்வராக இருக்கிறார். 'புதிய வீடுகள் கட்டும்போது மழை நீர் சேகரிப்பு அமைப்பைக் கட்டாயம் அமைக்க வேண்டும்’ என்ற விதி இன்னமும் அமலில் உள்ளது. ஆனால், நாம் நடைமுறைப்படுத்துவதில்லை... அதிகாரிகளும் கண்டுகொள்வதில்லை. 'வெயிலின் அருமை நிழலில் தெரியும்’ என்பதுபோல் தண்ணீருக்காக குடங்களை எடுத்துக்கொண்டு தெருத்தெருவாக அலையும் போதுதான் மழை நீர் சேமிப்பின் அவசியம் புரியும்.
மழை நீர்... உயிர் நீர்!
மழை நீரின் அவசியம் அறிந்த சிலர், மழை நீர் சேகரிப்பில் ஈடுபட்டு வருகிறார்கள். அவர்களில் ஒருவர் மதுரை கூடல்நகரைச் சேர்ந்த விருப்ப ஓய்வு பெற்ற காவல்துறை துணைக் கண்காணிப்பாளர் ரவீந்திரன். ''திருவாரூர்ல இன்ஸ்பெக்டரா இருந்தப்ப, அங்க பொதுப்பணித்துறை பொறியாளரா இருந்த வரதராஜன்தான் மழை நீர் சேகரிப்பைப் பத்தி சொன்னார்.
உடனே என் வீட்டுல மழை நீர் சேகரிப்பு அமைப்பை நிறுவினேன். பிறகு, சர்வீஸ்ல இருந்து வி.ஆர்.எஸ். கொடுத்துட்டு மதுரையில வீடு கட்டினேன். இங்கயும் மழை நீர் சேமிப்பு அமைப்பை நிறுவினேன். மூணாவது தளத்துல மொட்டைமாடியில மழை நீரை சேகரிக்குறதுக்காக 'ஷெட்’ அமைச்சுருக்கேன். மழைத் தண்ணியை வடிகட்டுற தொட்டி ஒண்ணையும் அமைச்சிருக்கேன். மேல இருக்கற தொட்டி நிறைஞ்ச பிறகு வழிஞ்சு வர்ற தண்ணி, 'போர்வெல்’ பக்கத்துல இருக்குற இடத்து வழியா நிலத்துக்குள்ள போயிடும். தொட்டியில சேமிக்குற தண்ணியைக் குடிக்கப் பயன்படுத்துறேன். இந்தத் தண்ணியை வடிகட்டுறதோட சரி, காய்ச்சுறதுகூட இல்லை. ஆனாலும் மினரல் வாட்டர் மாதிரி ருசியா இருக்கு.
பெரிய மழை பெய்யுறப்ப 'பிளாஸ்டிக் டிரம்’கள்ல தண்ணியைப் பிடிப்பேன். அந்த தண்ணியைச் செடிகளுக்கு ஊத்துனா செடிக நல்லா வளருது. ஒரு மணி நேரம் பெய்யுற மழை தண்ணி... மூணு மாசத்துக்கு வரும். கரண்ட் செலவே இல்லாம, எட்டு வருஷமா மழைத் தண்ணியைத்தான் குடிக்கவும், சமைக்கவும் பயன்படுத்திக்கிட்டு இருக்கோம்'' என்று ஆச்சரியப்படுத்துகிறார், ரவீந்திரன்.
வீடுகளில் மழை நீர் சேகரிப்பு அமைப்பை நிறுவ 5 ஆயிரம் ரூபாய் இருந்தால்போதும். ஆயுளுக்கும் தண்ணீர் பிரச்னை இருக்காது. ஓர் ஆண்டின் சராசரி மழையளவு 1,100 மில்லி மீட்டர் என்று வைத்துக் கொண்டால்... 100 சதுர மீட்டர் மொட்டை மாடி மூலமாக ஆண்டுக்கு 61 ஆயிரத்து 600 லிட்டர் தண்ணீரைச் சேமிக்க முடியும் என்கிறது, பொதுப்பணித்துறையின் மாநில நில மற்றும் மேற்பரப்பு நீர்வள ஆதார மையம். மினரல் வாட்டருக்கு மாதம்தோறும் செலவு செய்பவர்கள், ஒரே ஒரு முறை செலவு செய்து மழை நீர் சேமிப்பு அமைப்பை நிறுவி விட்டால், ஆண்டு முழுவதும் ஆரோக்கியமான குடிநீர் கிடைப்பதுடன், நிலத்தடி நீரும் பாதுகாக்கப்படும்.
வீடுகளில் மட்டும் மழை நீரை சேமித்தால் போதாது... விவசாய நிலங்களிலும் மழை நீரை அறுவடை செய்ய வேண்டும். அப்போதுதான் நிலத்தடி நீர்மட்டத்தை உயர்த்த முடியும்

No comments:

Post a Comment