சொக்கலிங்க புதூரில் 30 வருடங்களுக்கும் மேலாக ஆத்தங்குடி டைல்ஸை உருவாக்கிவருகிறார் ஜி. சுப்பிரமணியன். ஆத்தங்குடி டைல்ஸ் களை எப்படி உருவாக்குவது என்பதைக் கற்றுத்தரும் பயிற்சி வகுப்பு சென்னை தக்சின்சித்ராவில் நடத்தப்பட்டது. இதற்காகச் செட்டிநாட்டைச் சேர்ந்த சரிதா வரதன், திவ்யா சக்கரவர்த்தி, ஆர்வா பிரோஸ் ஆகிய 3 மரபான கட்டடக் கலைஞர்கள் இந்தப் பயிற்சி வகுப்புக்கு அழைத்துவரப்பட்டிருந்தனர். மரங்களடர்ந்த பசுமையான சூழலில் நடைபெற்ற இந்தப் பயிற்சி வகுப்பில் 12 பேர் கலந்துகொண்டனர்.
ஆத்தங்குடி டைல்ஸ்கள் கைவினைஞர்களின் கைவண்ணத்தில் உருவாகுபவை. செட்டிநாட்டின் பண்பாட்டையும் கலாசாரத்தையும் நாசூக்காக வெளிப்படுத்துகின்றன ஆத்தங்குடி டைல்ஸ்கள். ஓரங்களில் வளைவான பித்தளை அச்சில் மூலப் பொருள்களை வார்த்து தேவைப் படும் வடிவங்களில் டைல்ஸை உருவாக்கிக்கொள்வார்கள். தொடக்க காலத்தில் இந்த அச்சுகளைப் பற்றவைக்க வெள்ளி பயன்பட்டது. எடை குறைந்த வெள்ளி நேர்த்தியான பற்றவைப்புக்கு உதவியது. பொற் கொல்லர்கள் உருவாக்குவதைப் போன்ற நுட்பத்துடன் மூன்று கைவினைஞர்கள் இந்த அச்சை வடிவமைத்தனர். ஆயுளுக்கும் உழைக்கும் இந்த அச்சின் விலை எட்டு முதல் பத்தாயிரத்திற்குள் இருக்கும். தன் தந்தை 1950இல் உருவாக்கியிருந்த அச்சை ஜி. சுப்பிரமணியன் பயன்படுத்துகிறார்.
டைல்ஸ்கள் உருவாக்கும் கலை தலைமுறை தலைமுறையாகத் தொடர்ந்து வருகிறது. ஆனால் குறிப்பிட்டதொரு வழிமுறையில் இருந்து மட்டும் டைல்ஸ்களை உருவாக்கிவிட முடியாது. டைல்ஸ்களை உருவாக்க பத்து அல்லது இருபது நிலைகளைக் கொண்ட வழிமுறை உள்ளது. மணல், வெள்ளை சிமென்ட், நல்ல களிமண் ஆகியவற்றை ஒன்றாகக் கலந்துகொள்வார்கள். சுமார் 20 நிமிடங்கள் நன்கு பிசைந்து இந்தக் கலவையைத் தயாரிப்பார்கள். தேவைக்கேற்ப தண்ணீரை ஊற்றி கொழகொழப்பான பருவத்திற்கு இந்தக் கலவையை மாற்றுவார்கள். ஒவ்வொரு டைலும் கண்ணாடி மீது வைத்து அச்சில் ஊற்றி உருவாக்கப்படும். இதனால் மிருதுவான மேற்பரப்பு டைல்ஸுக்குக் கிடைக்கும். பாரம்பரியமான டைல்ஸை உருவாக்குபவர் உள்ளூர் களிமண்ணைப் பயன்படுத்துவார். தனது கையால் டைல்ஸின் மேற்பரப்பைச் சமப்படுத்துவார்.
டைல்ஸ் உருவாக்க தேவைப்படும் பூவேலைப் பாடுகளைக் கொண்ட திரிகோணமிதி வடிவங்களாலான அச்சு கண்ணாடி மேல் வைக்கப்படுகிறது. இந்த அச்சுகளில் வண்ணங்களாலான கலவை ஊற்றப்படுகிறது. பேக்கரியில் கேக்கை உருவாக்குவது போல ஆனால் ஒவ்வொரு நிலையிலும் நுட்பத்துடன் டைல்ஸ் வார்த்தெடுக்கப்படுகிறது.
வண்ணங்களடங்கிய கலவை நன்கு உலர்ந்தவுடன் அதன் மீது சிமெண்ட் கலவை மிக அடத்தியாக ஊற்றப்படுகிறது. இந்தக் கலவை 24 மணி நேரத்திற்கு அப்படியே பாதுகாக்கப்படுகிறது. பின்னர் டைல்ஸ் உருவப்படுகிறது. இந்த டைல்ஸ்கள் தண்ணீரில் 8 முதல் 12 நாட்கள் போடப்பட்டு பதப்படுத்தப்படுகின்றன.
தயாரான டைல்ஸ்கள் உலர்த்தப்பட்டு மேற்புரத் தூசு நீக்கி அடுக்கிவைக்கப்படும். ஆலங்குடி டைல்ஸ்கள் நீடித்து நிலைக்கக்கூடியவை. வழக்கமான டைல்ஸ்களைவிட விலை மலிவானவை. சிவப்பு, பச்சை, பழுப்பு போன்ற நிறங்களில் இவை உருவாக்கப்படுகின்றன. இவற்றைப் பளபளப்பாக்க தேங்காய் எண்ணெய் தான் கைகொடுக்கிறது.
சுற்றுச்சூழலுக்கு உகந்த டைல்ஸ்களை சந்தைப்படுத்துவது மிகப் பெரிய சவாலாக உள்ளது. இந்த ஆத்தங்குடி டைல்ஸ் உருவாக்கத்தில் பணியாற்றும் பெரும்பாலான குடும்பங்களுக்கு இது தான் வாழ்வாதாரம். ஒரு நாளைக்கு 65 முதல் 70 டைல்ஸ்களை உருவாக்குகிறார்கள். ஜி சுப்பிரமணியத்தின் ஆலையில் ஒரு நாளைக்கு 1,500 சதுர அடிகள் டைல்ஸ்கள், தயாரிக்கப்படுகின்றன. டைல்ஸ்களை முறையாக பேக்கிங் செய்வதால் அதன் எடை கொஞ்சம் அதிகரிக்கும். ஆனாலும் டைல்ஸ்களை உடையாமல் பாதுகாக்க முடிகிறது.
ஆத்தங்குடி டைல்ஸ்கள் பூஜை அறைகளையும் வரவேற்பறைகளையும் அலங்கரிக்கின்றன. இதன் மூலம் ஒரு கலாசாரப் பாரம்பரியம் மிக எளிதாக வீட்டுக்குள் வந்துவிடுகிறது.