Saturday, October 18, 2014

முதல்முறை முதலீட்டாளர்கள் கவனிக்க வேண்டிய 10 விஷயங்கள்!

முதல்முறை முதலீட்டாளர்கள் கவனிக்க வேண்டிய 10 விஷயங்கள்!
ங்குச் சந்தை கடந்த ஒரு வருடமாக ஏற்றத்தில் உள்ளது. இதனால் பங்குச் சந்தையில் முதலீடு செய்துள்ள பலரும் நல்ல லாபம் அடைந்துள்ளார்கள்.
மேலும், பங்குச் சந்தை குறித்த விழிப்பு உணர்வு மக்களிடம் பரவி வருகிறது. இதன் விளைவாக பங்குச் சந்தையில் முதலீடு செய்ய வேண்டும் என நினைப்பவர்களின் எண்ணிக்கை நாளுக்குநாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது. இப்படி முதலீடு செய்பவர்களில் பலருக்கும் உள்ள குழப்பம் இது. நான் முதல்முறை முதலீடு செய்கிறேன். இப்படி முதலீடு செய்யும்போது என்னென்ன விஷயங்களை கவனிக்க வேண்டும். எதையெல்லாம் தெரிந்து வைத்துக்கொள்ள வேண்டும் என்பதில்தான் பலருக்கும் குழப்பம் நிலவுகிறது.

பங்குச் சந்தை மற்றும் மியூச்சுவல் ஃபண்ட் திட்டங்களில் முதல்முறையாக முதலீடு செய்ய விரும்புகிறவர்கள் என்ன செய்ய வேண்டும் என்பது குறித்து முதலீட்டு ஆலோசகர் வி.நாகப்பன் விளக்குகிறார்.

1. அடிப்படையான விஷ்யங்களைத் தெரிந்துகொள்ள பங்குச் சந்தை குறித்த புத்தகங்களைப் படியுங்கள்.
2. நல்ல புரோக்கரைத் தேர்ந்தெடுங்கள். அதாவது, உங்களுக்கு நன்கு தெரிந்த அல்லது உங்களின் நண்பர்களுக்குத் தெரிந்த நீண்ட காலம் இந்தத் துறையில் இருந்துவரக்கூடிய நம்பகமான புரோக்கரைத் தேர்ந்தெடுப்பது முக்கியம். டீமேட் மற்றும் டிரேடிங் கணக்கை உங்களின் பெயரில் துவங்குவது முக்கியம். அடுத்தவர் பெயரில் செய்ய முடியாது/கூடாது.
3. ஆரம்பத்தில் பங்குகள் வாங்கும்போது அதிகம் அலட்டிக்கொள்ளாமல், பொது அறிவைப் பயன்படுத்தினாலே போதும். முதலில் ஒரு நிமிடம் உங்களைச் சுற்றிப்பாருங்கள். வீட்டிலோ அல்லது அலுவலகத்திலோ... உங்களைச் சுற்றி எவ்வளவு பொருட்களை வாங்கிக் குவித்திருக்கிறீர்கள். உங்களை வைத்து லாபம் அடையும் அதே நிறுவனத்தில் நீங்களும் ஏன் ஒரு பங்குதாரர் ஆகக் கூடாது? அதாவது, தினசரி நம்முடைய வாழ்க்கையில் பயன்படுத்தும் துறைகள் சார்ந்த பங்குகளை வாங்குவது நீண்ட கால அடிப்படையில் நல்லது. உதாரணமாக டூத்பேஸ்ட், காபி, டூ வீலர், பேங்கிங், எஃப்எம்சிஜி போன்ற துறைகளின் பங்குகளை வாங்கலாம்.
4. பங்குச் சந்தையில் ரிஸ்க் என்பது கட்டாயம் இருக்கும். உங்களின் அறிவு திறன், முடிவெடுக்கும் தன்மை ஆகியவற்றைப் பொறுத்து ரிஸ்கைக் குறைக்கலாம். ஆனால், தவிர்க்க முடியாது. அதே சமயம் ரிஸ்க் இருக்கும் இடத்தில்தான் அதிக லாபமும் இருக்கும் என்பதையும் மறுக்கலாகாது.
5. புதிதாக பங்குச் சந்தைகளில் முதலீடு செய்பவர்களுக்கு டெக்னிக்கல் மற்றும் அடிப்படை ஆய்வு சம்பந்தமான விஷயங்கள் அதிகமாக தெரிவதற்கான வாய்ப்பு குறைவு. எனவே, புரோக்கர் மற்றும் நண்பர்கள் சொல்வதையும், உங்களின் பொதுவான அறிவு ஆகிய இரண்டையும் பயன்படுத்தி பங்குகளைத் தேர்ந்தெடுக்கலாம்.
6. எஸ்ஐபி முறையில் மாதாமாதம் முதலீட்டை மேற்கொள்வது மிக முக்கியம்.
7. உபரி சேமிப்பாக வைத்திருக்கும் பணத்தில் ஒரு பகுதியை மட்டுமே பங்குச் சந்தையில் முதலீடு செய்வது நல்லது. ரொம்ப முக்கியமானது, கடன் வாங்கி முதலீடு செய்யவே கூடாது.
8. மியூச்சுவல் ஃபண்ட் திட்டங்களில் முதல்முறை முதலீடு செய்யும்போது டைவர்ஸிஃபைடு, பேலன்ஸ்டு ஃபண்டுகளில் முதலீடு செய்யலாம். ரிஸ்க்கும் கட்டுக்குள் இருக்கும்; வருவாயும் சராசரியைவிட அதிகமாக இருக்கும்.
9. நீங்கள் முதலீடு செய்ய விரும்பும் மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனத்தின் உயர்பதவியில் இருப்பவர்கள் தொடர்ந்து அந்த நிறுவனத்தில் நீண்ட காலமாக இருக்கிறார்களா என்பதைக் கவனிக்க வேண்டும். அதாவது, தலைமை பதவியில் இருப்பவர்கள் தொடர்ந்து பத்து வருடங்களாவது அந்த நிறுவனத்தில் இருப்பது நல்லது; இது, அவர்களின் கமிட்மென்ட்டைக் குறிக்கும்.
10. குறிப்பிட்ட செக்டாரில் மட்டும் முதலீடு செய்வதைத் தவிர்ப்பது நல்லது. அந்த செக்டார் குறித்த அடிப்படையான விஷயங்களைத் தெரிந்து, அவற்றைப் புரிந்துகொள்ள முடியும் என்றால், செக்டார் ஃபண்டுகளில் முதலீடு செய்யலாம். அதிக ரிஸ்க்கானது இது.


இரா.ரூபாவதி

No comments:

Post a Comment