வீடு கட்டுவது என்பது வாழ்வில் ஒரு கனவு. அந்தக் கனவு நிறைவேறியவுடன் வேலை எல்லாம் முடிந்துவிட்டது என அப்படியே இருந்துவிட முடியுமா? கஷ்டப்பட்டுக் கட்டிய வீட்டைப் பராமரிக்க வேண்டும். சின்னச் சின்ன விஷயங்களில் வீட்டை அழகாக வைத்திருக்க வேண்டும்.
# வீட்டைப் பராமரிப்பதில் முக்கியமான விஷயம், தேவையற்ற பொருள்களைக் கண்டுபிடிப்பது. தேவையான பொருள்கள், தேவையற்ற பொருள்கள் என எப்படிக் கண்டுபிடிப்பது? நாம் ஒவ்வொரு முறை வீட்டைச் சுத்தப்படுத்தும்போது எதற்கும் தேவைப்படும் எனச் சில பொருள்களைச் சேமித்துவைத்திருப்போம். அது வீட்டை அடைத்துக்கொண்டு இருப்பது மட்டுமில்லாமல் வீட்டில் தூசி அடையும் இடமாகவும் இருக்கும். அதனால் வீட்டின் அழகு பாதிக்கக்கூடும். இமாதிரி தேவையற்ற பொருள்களை அப்புறப்படுத்தினாலேயே போதுமானது. ஓரளவு வீடு விசாலமாகி, காண்பதற்கு அழகாகக் காட்சி தரும்.
# இரண்டாவது வீட்டிற்கு அடுத்து அழகு கூட்டுவது தரைகள் தரைகளைச் சுத்தமாக வைத்திருக்க வேண்டும். தரைகளை அழகுக்காக மட்டுமல்ல ஆரோக்கியத்திற்காகவும் சுத்தமாக வைத்திருக்க வேண்டியது அவசியம்.
# வீட்டின் வெளிப்புறச் சுவர்களையும் நன்றாகக் கவனிக்க வேண்டும். அங்கு ஏதாவது விரிசல் ஏற்பட்டிருந்தால் உடனே அதைச் சரிசெய்ய வேண்டும். அதில் சிமெண்ட் பால் வைத்துப் பூசி அடைக்க வேண்டும். அதுபோல உள்புறச் சுவர்களையும் கவனிக்க வேண்டும்.
# வீட்டின் மொட்டை மாடிகளையும் கவனமாகப் பார்க்க வேண்டும். மழைக் காலங்களில் நீர் வெளியேறும் குழாய்களில் அடைப்பு இருந்தால் உடனே சரிசெய்ய வேண்டும். மேலும் குப்பைகள் சேர்ந்துஇருந்தால் அவற்றைத் துடைத்துச் சுத்தம் செய்ய வேண்டும்.
# சமையலறையை எப்போதும் சுத்தமாகவும், நவீனமாகவும் வைத்திருக்க வேண்டும். அதற்குள் பழைய பொருள்கள் போடும் அறையாக வைத்திருக்கக் கூடாது. பரண் இருக்கிறதெனப் பழைய பொருள்களைப் போட்டுக் குவித்துவைக்கக் கூடாது.
# வீட்டைச் சுற்றி இடம் இருக்கும்பட்சத்தில் பூந்தோட்டம் அமைக்கலாம். இல்லையெனில் தொட்டிகளிலாவது செடி வளர்க்கலாம். அது வீட்டிற்கு அழகு தரும்.
# கதவுகளையும் கவனிக்க வேண்டும். நிறம் மங்கிப் போயிருந்தால் அதைப் பூச வேண்டும். கைப்பிடிகளில் துருப்பிடித்திருந்தால் அதை மாற்ற வேண்டும். இல்லையெனில் அது கைகளில் காயங்களை ஏற்படுத்திவிடும். பெரும்பாலும் துருப்பிடிக்காத பொருள்களான கட்டுமானப் பொருள்களை வாங்கலாம்.