சொந்தமாக வீடு வாங்குவதை வாழ்க்கையின் குறிக்கோளாகக் கொண்டு செயல்படும் பலரும், அந்த வீட்டுக்குத் தேவையான அறைகலன்களைத் (Furnitures) தேர்வு செய்வதில் அவ்வளவாக ஆர்வம் காட்டுவது இல்லை. பழங்காலம் தொட்டே, அடித்தட்டு அல்லது நடுத்தரக் குடும்பத்தினர் அறைகலன்கள் மீது அதீத ஆர்வம் காட்டியதில்லை. ஆனால், இன்றைய நாகரிக உலகில் வீட்டை அலங்கரிக்கும் விஷயங்களில் ஒன்றாக அறைகலன்கள் திகழ்கின்றன. எனவே, அவற்றைத் தேர்வு செய்வதில் கூடுதல் கவனத்துடன் செயல்படுவதுடன், நமது பொருளாதார நிலைக்கு ஏற்ப அவற்றை வாங்க வேண்டியதும் அவசியம்.
அறைகலன்கள் வாங்குவதற்குச் செல்லும்போது சில விஷயங்களை முன்னதாகவே தீர்மானித்துக் கொள்ள வேண்டும். பட்ஜெட், அளவு, நிறம், தரம், வடிவம் மற்றும் தேவை ஆகியவற்றைத் தீர்மானிக்க வேண்டும். விலையைப் பொறுத்து மரத்தில் வாங்குவதா அல்லது உலோகத்தில் வாங்குவதா எனத் திட்டமிட்டுக்கொள்ளுங்கள். அறையின் நீள அகலத்திற்கு ஏற்ற வகையில் இருக்க வேண்டும். விலை மலிவாகக் கிடைத்தாலும் பெரியளவிலான சோபா அல்லது இருக்கைகளை வாங்கக் கூடாது. ஏனென்றால், அவை அறையின் பெரும்பகுதியை ஆக்கிரமித்துக் கொள்ளும் பட்சத்தில், பயன்பாட்டிற்கான இடம் வெகுவாகக் குறைந்துவிடும்.
சிறு குழந்தைகள் உள்ள வீட்டிற்குக் கட்டில் அல்லது அறைகலன் வாங்கும்போது கூடுதல் பாதுகாப்பு அம்சங்களைக் கூடுதலாகக் கவனத்தில் கொள்ள வேண்டும். அதாவது குழந்தைகளைக் காயப்படுத்தும் வகையிலான ஆணிகள் ஏதும் இருக்காதவாறு பார்த்துக் கொள்ள வேண்டும். ஏனெனில் குழந்தைகள் கட்டில், மேஜைகள் மீது ஏறி விளையாடுவார்கள். அப்படி விளையாடும்போது விபத்துகள் ஏற்பட வாய்ப்புண்டு.
அறைகலன்கள் வாங்கும்போது அதன் ஆயுட்காலத்தையும் கணக்கில் எடுத்துக்கொள்ள வேண்டும். நீண்ட காலம் உழைக்கக்கூடிய பொருட்களை வாங்குவது அதிகமான செலவு ஆகும் என்றாலும் பராமரிப்புச் செலவைக் குறைக்கும். இப்போது சோபா, மேஜை போன்றவை மிகக் குறைந்த விலையிலேயே கிடைக்கின்றன. விலை குறைவு என்ற ஒரு காரணத்திற்காக வாங்கினால் பிறகு கஷ்டப்படப்போவது நாம் தான். விலை குறைவான பொருட்கள் உடைந்து நம்மை விபத்தில் கொண்டுபோய் விட்டுவிடும் ஆபத்தும் உண்டு. அதுபோலத் தள்ளுபடி விலையில் வாங்கும்போது சில விஷயங்களைக் கவனிக்க வேண்டும். அவை பழுதுள்ளவையாக இருக்கின்றனவா என்பதைப் பரிசோதித்துப் பார்க்க வேண்டும்.
அறைகலன் வாங்கும்போது அது உங்கள் வீட்டில் பூசியுள்ள சுவரின் வண்ணத்திற்கு ஏற்ற வகையில் இருக்கிறதா என்பதையும் பார்த்துக்கொள்ள வேண்டும். அதே போல சோபா வாங்கும்போது சில விஷயங்களைக் கவனத்தில் கொள்ள வேண்டும். அதாவது வாடகை வீட்டில் வசிப்பவர்கள் எளிதாகக் கையாளக்கூடிய சோபாக்களை வாங்கலாம். அடிக்கடி மாற்ற வேண்டிய அவசியம் இல்லாதபட்சத்தில் அதற்கேற்றாற்போல் தேர்ந்தெடுக்கலாம்