Saturday, October 18, 2014

மனை, அடுக்குமாடி வீடு: சாதகம், பாதகம் என்ன?

மனை, அடுக்குமாடி வீடு: சாதகம், பாதகம் என்ன?


சொந்த வீடு வேண்டும் என்று நினைப்பவர்களின் முதல் கேள்வி என்ன தெரியுமா? அடுக்குமாடிக் குடியிருப்பு வாங்கலாமா அல்லது மனை வாங்கி வீடு கட்டலாமா என்பதுதான். உண்மையில் அடுக்கு மாடி வீடு வாங்குவது நல்லதா? அல்லது மனை வாங்கி வீடு கட்டுவது நல்லதா? அதன் சாதக, பாதகங்களைப் பார்ப்போம்.
மனை - சாதகம்
மனை வாங்குவதில் சில அனுகூலங்கள் உள்ளன. நம் வசதிக்கு ஏற்பச் சிறியதாகவோ, பெரியதாகவோ அதில் கட்டிடம் கட்டிக்கொள்ளலாம்.
எதிர்காலத்தில் சூழ்நிலையைப் பொருத்து வீட்டை விரிவாக்கலாம். அத்துடன் மனதுக்குப் பிடித்த வடிவத்தில், பட்ஜெட்டுக்கு ஏற்ப வீட்டைக் கட்டி பார்க்கும் சுதந்திரம் நமக்கு உண்டு.
எதிர்காலத்தில் சூழ்நிலையைப் பொருத்து வீட்டை விரிவாக்கலாம். அத்துடன் மனதுக்குப் பிடித்த வடிவத்தில், பட்ஜெட்டுக்கு ஏற்ப வீட்டைக் கட்டி பார்க்கும் சுதந்திரம் நமக்கு உண்டு.
சொந்த மனை என்பதால் நம் கனவுத் தோட்டத்தையும் வீட்டு மனையில் நிர்மாணிக்கலாம். மேலும் நம் மனையில் என்னென்ன செய்து பார்க்க விரும்புகிறோமோ அதை எந்தத் தடையும் இன்றி நிறைவேற்றலாம்.
வீட்டுமனையில் சில இடங்களை வாடகைக்கு விட்டு வருவாயைப் பெருக்கிக் கொள்ளலாம். மனை உள்ள பகுதியின் தன்மைக்கேற்ப கடைகள் மற்றும் வணிக வளாகங்களையும் கட்டலாம்.
பாதகம்
ஒரு வீட்டு மனையை வாங்கும்போது சட்டரீதியாகப் பல சிக்கல்களை நாம் எதிர் கொள்ள வேண்டும். நில உரிமை தொடர்பான பத்திரம் தெளிவாகவும், வில்லங்கம் இல்லாமலும் இருத்தல் அவசியம்.
தாய்ப் பத்திரம் வில்லங்கம் இல்லாமல் இருக்கிறதா என்பதைப் பரிசீலிக்க வேண்டும். நீங்கள் வாங்கப்போகும் நிலத்தில் ஆக்கிரமிப்புகள் இருக்கிறதா என்பதையும் விசாரிக்க வேண்டியது அவசியம்.
வாங்கப்போகும் மனையின் லே அவுட்டில் வழியும், சாலையும் ஒதுக்கப்பட்டுள்ளதா என்பதையும் கவனிக்க வேண்டும்.
மனை எந்த மண்டலத்தில் வருகிறது என்பதையும் பரிசீலிப்பது அவசியம். வர்த்தக மண்டலப் பகுதிக்கு உட்பட்டதெனில் அதைக் குடியிருப்பாகப் பயன்படுத்த முடியாது.
நாம் வாங்கப்போகும் நிலத்தைப் பொதுத் தேவைகளுக்காக அரசு ஆர்ஜிதம் செய்ய ஆலோசித்து வருகிறதா என்பதையும் நன்றாக அலசி ஆராய வேண்டும்.
அடுக்குமாடி வீடு - சாதகம்
இத்தனை விசாரிப்புகள், கண்காணிப்பு கள் மேற்கொள்ள ஆர்வமோ, போதிய அவகாசமோ இல்லையெனில் ஒரு அடுக்கு மாடி வீட்டை வாங்குவது பற்றி நீங்கள் யோசிக்கலாம். அடுக்குமாடி வீடு வாங்குவதில் உள்ள சாதக, பாதகங்கள்.
அடுக்குமாடித் தொகுப்பு வீடுகள் பாதுகாப்புணர்வை அளிப்பவை.
அரசு நடைமுறைகள் அனைத்தையும் கட்டுமான நிறுவனமே செய்துகொள்ளும்.
குறிப்பிட்ட வரைமுறைகளுக்குள் உங்களுக்குத் தேவையான மாறுதல்களைச் செய்துகொள்ள முடியும்.
பராமரிப்பு தொடர்பான கவலை தேவையில்லை.
பாதகம்
அடுக்குமாடி வீடுகளைப் பொருத்த வரை உங்களுக்கான இடம் என்பது வரைமுறைக்குட்பட்டது. விரிவாக்கம் என்பது சாத்தியம் இல்லை. எந்த மாற்றம் வேண்டுமானாலும் அந்தப் பரப்பளவுக்குள்தான் செய்துகொள்ள முடியும்.
மற்றக் குடியிருப்புவாசிகளுடன் சேர்ந்துதான் பொது இடத்தைப் பகிர்ந்துகொள்ள வேண்டும்
அடுக்குமாடிக் குடியிருப்புகளில் ஒலி மாசுபாடு அதிகம். மற்ற தொந்தரவுகளும் உண்டு.
உங்களது பால்கனி மட்டுமே உங்களுக்குரிய தோட்டமாக இருக்கும்.
உங்களுக்குச் சொந்தமான அடுக்குமாடிக் குடியிருப்பை வாடகைக்கு மட்டுமே விடமுடியும். அதன் மூலம் மட்டுமே வருவாய் சாத்தியம்.
சரி, நீங்கள் வாங்கப்போவது மனையா அல்லது அடுக்குமாடி வீடா?

No comments:

Post a Comment